bharathidasan05

  கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய இழப்பு, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நேர்ந்த ஒரு பேரிழப்பு. அதுவும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அடுத்தடுத்து நல்லறிஞர்கள் பலரை தமிழகம் இழந்து வருவது பெரிதும் வருந்தத்தக்க ஒன்று.

  பாரதிதாசன் அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன். அவர் இளமையிலேயே தமது ஆசிரியர் தொழிலையும் கைவிட்டு நானறிய நாற்பது ஆண்டுகளாக நற்றமிழுக்கு நற்றொண்டு புரிந்து வந்த நல்லறிஞன். அது மட்டுமல்ல. கவிதை உலகில் ஒரு புதிய திருப்பத்தையே உண்டாக்கிவிட்ட அரும்பெருங் கவிஞன்.

  ‘பாரதிதாசன் கவிதைகள்’ எனும் பெயரால் அவரது கவிதைகளிற் சிலவற்றைத் திரட்டி வெளியிடும் முதல் முயற்சியில் பங்குபெற்றவன் நான் என எண்ணும்பொழுது என் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. அதைவிட அதிக மகிழ்ச்சி உண்டாகிறது, அம்முதல் நூலுக்கு மதிப்புரை வழங்கியதை எண்ணும்பொழுது. அது, ‘பாரதிதாசன் கவிதைகளில் ஒன்றைப் படித்தேன். அதை, கதைக்காக ஒருமுறை, கவிதைக்காக ஒரு முறை, கருத்துக்காக ஒரு முறை, கற்பனைக்காக ஒரு முறை படித்தேன். அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படித் தேன் எனச் சுவைத்தது’ என்பதே. இது நாட்டில் நல்ல பயனை விளைவித்தது.

தமிழகப் புலவர் குழுவின் 2ஆவது கூட்டம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற் கூடியது. புலவர் பெருமக்கள் நாற்பத்தெண்மரும் தேரேறி ஊர்வலம் வர, அக்கூட்டத்தின் தலைவர் பாரதிதாசன் அவர்கள் யானை மீது அமர்ந்து தஞ்சை அரச வீதிகளில் உலா வந்த காட்சி இன்றும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வருகிறது. இனி அக்காட்சியை…?

  பாரதிதாசனின் தோற்றமே தமிழனின் தோற்றம். அவரது வீரம் தமிழனின் வீரம். அவரது உடம்பில் ஓடிய இரத்தமும் தமிழ் இரத்தம். அவரது உணர்ச்சி தமிழ் உணர்ச்சி. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அவர் விடுகிற மூச்செல்லாம் தமிழ் மூச்சு எனக் கூறிவிடலாம். இவையனைத்தும் நிறைந்த கவியே புதுவைக் கவி! அன்று புதுமைக் கவி! நேற்று முதுமைக் கவி! இன்று…!

  தமிழகத்தின் மண்ணுக்கே ஒரு தனிவீரத்தைக் கற்பித்தவர் பாரதிதாசன் அவர்கள். ‘கோழியும் தன் குஞ்சுகளை கொத்தவரும் பருந்துகளை சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவி’ என்பது அவரது கவிதை. ‘உயிரினும் சிறந்த ‘தமிழ்’ என்பது அவரது ‘கொள்கை. ’  “உயிர் வெல்லமுமல்ல. தமிழும் அல்ல’’ என்பது அவர் வாக்கு!

  தமிழ் தோன்றிய காலந்தொட்டு எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் இத்தமிழ் மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் ‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே’ என்ற புரட்சிச் சொற்களைப் புரட்சிக் கவிஞரிடம்தான் கேட்டேன். அத்தகைய புலவனையும் இன்று இத்தமிழ் மண் தன்னுள் புதைத்துக் கொண்டது. இனியேனும் இம்மணிலிருந்து இதுபோன்ற புலவர்கள் பலர் தோன்ற வேண்டும் என்பது என ஆசை.

  பாரதிதாசனை ஒரு தமிழ்மன்னன் எனலாம். இத்தகைய மன்னனை இழந்த தமிழகம் அவர் வாழ்ந்த போதும் சரியாக அறிந்து போற்றவில்லை. அவர் மறைந்தபோதும் சரியாக உணர்ந்து வருந்தவில்லை. இரண்டொரு இரங்கற் செய்திகளோடு அவரது வரலாற்றை முடித்துவிட்டது. இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் போடுவதற்காகவே சில சங்கங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இறந்தவர்கள் மீது கவிபாடி வெளியிடுவதற்காகவே சில பத்திரிகைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இறந்தவர்களுக்கு இரங்கல் செய்திகளைச் சொல்வதற்கென்றே சிலர் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மூன்றும் திருந்தி அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களை வாழ்த்த – போற்றத் தொடங்கிவிட்டால் தமிழகம்…?

  கவிஞர், பாரதிதாசன் தமிழுக்குத் தொண்டன். தமிழர்க்கு அன்பர், புலவர்க்கு நண்பன்; புலவர்குழுவிற்குத் தலைவர்; கவிஞர்களுக்கு வழிகாட்டி; புரட்சிக் கவிஞருக்குத் தந்தை; சீர்திருத்தவாதிகளுக்குத் தலைவன்; தமிழ்ப் பகைவர் முன்னே தோள்கொட்டி தொடை தட்டி நிற்போரெல்லாம் அவரது உறவினர் அவரது பிரிவால் நாம் அனைவரும் கலங்குகிறோம். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல்லாறுதல் அளிக்க வேண்டும்.

kiaape-visuvanatham01–           குறள்நெறி: சித்திரை 19, தி.பி., 1994/மே 1, 1964