போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன்

என்றென்றும் வாழியவே!

  தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும்  இணைஉரிமையும்  பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர  வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர்  போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும்  மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது.

 மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை அமைத்து மக்களை வழிநடத்திச் சென்ற ஆசானும் தலைவனும் மேதகு பிரபாகரன் ஒருவரே!

 எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் ஏற்கெனவே இருந்த படையைக்கொண்டு விரித்தும் பெருக்கியும்  போர்களைச் சந்தித்தனர் நாட்டைக் காத்தனர். ஆனால் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் இன்மையிலிருந்து வன்மையை உருவாக்கியவர். இன மக்கள் நன்மைக்காக – நாட்டு விடுதலைக்காக – இடர்களைத் தாங்கிக்கொள்ளும் வலிமையும் எதனையும் எதிர்நோக்கும் துணிவும் உடைய புறநானூற்றுப் புலிகளைக் கொண்டு புதுப்படை அமைத்து நாடுகாக்கும் நற்பணியில் ஈடுபட்ட இனக்காவலர்.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்றல் அதுவே படை. (திருவள்ளுவர், திருக்குறள் 765)

என்னும் இலக்கணத்தின்படி எமனே எதிர்த்துவந்தாலும் ஒன்று திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடைய படையை உருவாக்கித் தலைமை தாங்கிய தகைமையாளர்.

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது. (திருவள்ளுவர், திருக்குறள் 762)

போரில் அழிவு வந்து வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமையைத் தொன்று தொட்டு உடைய  பெரும் படையை உருவாக்கி எதிரிகளை நடுங்க வைத்த நற்றமிழர் தளபதி.

  இதுபோல் ஒரு படை முன்னரும் இல்லை, பின்னரும் அமையாது என்று சொல்லும் வகையில் மறம், மானம், அறிவு, திறமை, ஆற்றல், ஈகை உடைய இருபால் இளைஞர்களைக் கொண்டு விடுதலைப்புலிப் படையை, நிலம், நீர், வானம் என முப்பரப்பிலும் ஆட்சி செய்யும் தரைப்புலிகள், பெண்புலிகள், ஈருடகப்படையணி, கரும்புலிகள், சிறப்புப்படையணிகள், உளவுப்புலிகள்,  பொறியியல் அணி எனப் பலவகையாகப் பகுத்து அமைத்துத் திறம்பட ஆட்சி செய்த அடலேறு! எந்த நாட்டு விடுதலைப்போரிலும் இதுவரை இல்லாத அளவிற்கு முப்பெரும் படைகளைப் பல்வேறு பகுப்பாக அமைத்துக் களம்கண்டவர் இவர்போல் யாருமிலர் என்னும் பெருமைக்குரியவர்.

 ஆட்சித்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை,   எனப் பலவகையிலும் நாட்டாட்சியையும் திறம்பட நடத்திய மக்களாட்சித்தலைவரும் பிரபாகரன்தான்!

 இன மொழி நாட்டு விடுதலைக்கான பிரபாகரன் கனவு தோற்கவில்லை! இவர் கனவுமட்டுமல்ல! ஈழத்தமிழர்கள் கனவும்  தடங்கல்பட்டு நிற்கலாம்! இவர்கள்  கனவு நனவாகும் காலம் தள்ளிப் போயுள்ளது. அவ்வளவுதான்!

 பீடு மிக்க மேதகு பிரபாகரன்  பெருமங்கலத்தில் அவரை வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறோம்! தமிழ் ஈழத்தலைவராக மட்டுமல்லாமல் தமிழ்ஞாலத் தலைவராகவும் திகழும் மேதகு பிரபாகரன் நூறாண்டு கடந்தும் வாழ்க!

 அன்பு நீ!

ஆற்றல் நீ!

இனிமை நீ!

ஈகை நீ!

உழைப்பு நீ!

ஊக்கம் நீ!

எழுச்சி நீ!

ஏற்றம் நீ!

ஐயன் நீ!

என அனைவராலும் பாராட்டப்படும் மேதகு பிரபாகரன்  என்றென்றும் வாழியவே!

எல்லார் உள்ளங்களிலும் ஆட்சி செய்யும் மேதகு பிரபாகரன்

ஈழஆட்சித்தலைவராக மலரும் நாள் விரைவில் மலர்கவே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்