மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்
மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க!
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித் தன் நிலப்பகுதியை இழந்தது இலங்கை. அங்கே நிலப்பகுதியை மட்டுமா இழந்தனர் தமிழ் மக்கள்? தம் ஆட்சியுரிமையையும் காலப்போக்கில் இழந்தனர் தமிழ் மக்கள்.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று (திருவள்ளுவர், திருக்குறள் 890).
என்பதை உணர்ந்தனர் இலங்கைத் தமிழர்கள்.
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு
என்று முன்றுறை அரையனார் இதைத்தானே பழமொழி நானூறு வாயிலாக வழிமொழிந்தார்.
எனவே, தங்களுக்கு உரிய நாட்டில் அடிமைக்கும் கொடுமைக்கும் ஆளாகாமல் உரிமை யின்பத்தை நுகர, இலங்கைத் தமிழர்கள், தாங்கள் திரளாக வாழும் பகுதி்யைத் தமிழ் ஈழமாக வரையறுத்து மண்ணின் விடுதலைக்காக அறவழியில் போராடினர். அறவழியினால் கொடுமனங்கொண்டோர் மாறவில்லை என்பதை உணர்ந்த விடுதலைவேட்கை உடைய இளைஞர்கள், அறம்சார்ந்த மற வழியில் போராடினர். இவர்களுள் தமிழ் ஈழ விடுதலைப்புலி அமைப்பினர் நிலைத்து நின்று அறிவியல் ஆற்றலும் நுண்மாண்நுழைபுலமும் கொண்டு புத்தாற்றலில் சிறந்து தாய்நில மக்களின் அரணாக விளங்கிப் போராடினர்.
நெறிமுறையற்ற போர் முறைகளால் சிங்கள அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக மனிதநேயங்களை மீறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்பொழுதும் கூட ஈழத்தமிழர்கள், அறமுறை கொண்ட போர்நெறி வழியில்தான் அவர்களை எதிர்த்தனர். உலகிலேயே கட்டுப்பாடும் பண்புடைமையும் கொண்ட முப்படையாக தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் அமைப்பு திகழ்ந்தது.
போலி உலகம் ஏற்காவிட்டாலும் தனித்தமிழீழ அரசையும் நிறுவி அறவழியில் ஆட்சி செலுத்தினர். எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு விடுதலை அமைப்பும் இவ்வாறு படைச்சிறப்பும் ஆட்சிச்சிறப்பும்கொண்டு திகழ்ந்ததில்லை என்னும் வரலாற்றுப் பெருமையுடன் முழு விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையில் போராடி வந்தனர். ஈழத்தமிழர்களின் உரிமை வேட்கையின் உண்மைநிலையைப் புரிந்து கொண்ட உலக நாடுகள் பலவும் இவர்களுக்குத் துணை நிற்க முன்வந்தன. ஆனால், உலகில் எங்கு உரிமைக்குரல் எழுந்தாலும் கட்டிக்காக்கும் நாடு எனப் பெருமைபேசும் இந்தியம் அதனை அழிக்க எல்லா அறமற்ற வழிகளையும் பின்பற்றியது. இந்தியத்திற்கு அடிமையாக இருக்க முன்வந்தால், இலங்கையிலிருந்து ஈழத்தைப் பிரிக்க முன் வந்த இந்தியம் அவர்கள் தனியுரிமையுடன் வாழ உடன்படவில்லை.
பாக்கித்தான், இசுரேல், சீனா முதலான நாடுகளுடன் வெளிப்படையாகவும் பிற வல்லரசு நாடுகளுடன் மறைமுகமாகவும் உதவிகளைப் பெற்றுத் தமிழின அழிப்பில் சிங்களஅரசு ஈடுபட்டு வந்தது.(இன்னும் ஈடுபட்டு வருகிறது). வியத்துநாம், கியூபா முதலான எந்தெந்த நாடுகளின் உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் குரல்கொடுத்துப் போராடினரோ அந்தநாடுகள் எல்லாம் சிங்களத்தின் கூட்டாளிகளின் தோழமைக்காகத் தமிழ் ஈழ விடுதலையை எதிர்த்த கொடுமையும் அரங்கேறியது. போராடி விடுதலை பெறும் நாடுகள் பிற விடுதலைப் போராட்டங்களுக்கும் துணை நிற்பதே முறை என்ற கடப்பாட்டினை அவர்கள் மீறினர். இவற்றிலெல்லாம் பெருங்கொடுமை, இந்தியத்தை எதிர்த்துக்கொண்டே போலி நட்பு பூணும் சிங்களத்துடன் இந்தியா கைகோத்தது; இதனால் படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, படைக்கலன்கள் உதவி, தமிழ்மக்கள் எண்ணிக்கையிலும் மிகுதியாக வீசுவதற்கான எரி குண்டுகள், வேதியல் குண்டுகள், வானூர்திகள், ஏவுகணைகள் எனப் பலவற்றையும் அளித்து விரைவில் இனப்படுகொலையை முடிப்பதற்கு அறிவுரையும் வழங்கியமை. இங்கே தேசிய இனங்களை ஒடுக்கும் இந்தியம் அங்கே அப்படித்தானே நடந்து கொள்ளும் எனலாம். ஆனால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவிலாவது, உண்மையிலேயே மனப்பூர்வமாக ஈழம் இந்தியாவின் தோழமையாகவும் அரணாகவும இருப்பதற்காகவாவது ஈழத்தமிழர்களுக்குத் துணையாக இருற்திருக்க வேண்டும். அல்லது இரு தரப்பிலிருந்தும் ஒதுங்கியாவது நின்றிருக்க வேண்டும்.
இத்தனைக் கொடுமைகளையும் மீறி ஈழத்தமிழர்கள் அங்கிருந்து தப்பித் தமிழகம் வர முயன்ற பொழுது ஏற்று அடைக்கலம் அழித்துக் காப்பாற்றமல் விரட்டியடித்ததால் பல்லாயிரவர் மடியவும் காரணமாயிற்று. ஒரு சாலியன்வாலாபாக்கு அவலத்தையே விடுதலைப்போராட்டமாக நினைவுகூரும் இந்தியம், எண்ணற்ற சாலியன்வாலாபாக்குகளை ஈழத்தில் நிகழ்த்தவும் நிகழ்த்தத் துணைநிற்கவும் காரணமாயிற்று.
ஏறத்தாழ 1,86,000 மக்கள் எரிந்தும் கரிந்தும் மடிந்தும் சிங்களம் மனமும் இந்திய மனமும் ஆறவில்லை. இனப்படுகொலையைத் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்பதுபோல் திசை திருப்புகின்றன.
ஏதோ இரு பிரிவிற்கிடையே நடந்த கலவரத்தை அரசு அமைதிப்படுத்துவதுபோல், நல்லிணக்க முயற்சி என்று ஏமாற்றி வருகின்றன. வெளிப்படையான பன்னாட்டு உசாவலுக்கும் இனப்படு கொலையாளிகளைத் தண்டிப்பதற்கும் தடையாகச் சிங்களம் சார்பாக இந்தியாவே செயல்படுகிறது. விடுதலைப்புலிகள் என்பவர்கள் வேற்று நாட்டிலிருந்தோ வேற்றுக் கோள்களில் இருந்தோ குதித்தது வந்தவர்கள் அல்லர்! மக்களின் அரணாகத் திகழும், மக்களில் ஒரு பகுதியினர். மக்கள் என்பவர் யார்? விடுதலைப்புலிகளின் தந்தை, தாய், தமையன், தமக்கை, தம்பி, தங்கை, மனைவி, கணவன், தாத்தா, பாட்டி, மாமன்,அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி முதலான பல்வகை உறவின் முறையினரே! இவர்களை எப்படி மக்களிலிருந்து வேறுபடுத்துவது? ஆனால், வஞ்சகப் பரப்புரைக்காகப் பிரித்துப் பேசுகின்றன சிங்களமும் இந்தியமும்.
சிங்களம் சொல்கிறது, போரில் மடிந்தவர்களுக்காக நினைவேந்தல் நடத்தலாம். ஆனால், விடுதாலைப்புலிகளுக்காக நினைவேந்தல் நடத்தக்கூடாதாம்! ஒரே குடும்பத்தினரை இப்படிப் பிரித்து நாடகமாடுகிறது சிங்களம். மக்களில் ஒரு பகுதியினரான விடுதலைப்புலிகள் தங்கள் இளமை வாழ்க்கையைத் துறந்து, குடும்ப மகிழ்ச்சியை மறந்து, தங்கள் நாட்டு மக்கள் உரிமை வாழ்க்கைக்காக அறிந்தே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு மடிந்த தற்கொலைப் போராளிகள்! மக்களுக்கு அரணாகச் செயல்படுகையில் பாதுகாப்புப் போரில் பாரிலிருந்து பிரிந்தவர்கள்! இவர்கள் மட்டுமல்லர் களப்பணிகளால் தங்கள் உறுப்புகளை இழந்த செம்மல்களும் உள்ளனர்.
சிங்களமும் அதன் கூட்டுக் கொலையாளிகளும் போராளிகளை மட்டும் குறி வைக்கவில்லை. அப்பாவி மக்களைப் பல வகைகளில் கொடுமைப்படுத்தினர். அத்துடன் நில்லாது அடைக்கலம் தருவதாக ஏமாற்றியும் தப்பிக்க வழியின்றியும் 2009 மேத்திங்கள் 3ஆவது வாரம், கூட்டம் கூட்டமாகவும் திரள் திரளாகவும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியோர், ஊனமுற்றோர், நோயர் என்ற வேறுபாடின்றி முள்ளிவாய்க்கால் பகுதியில் அனைவரையும் கொன்றொழித்தனரே!
இவர்களை நினைவுகூரும் நம்மவர் கடமை என்ன? இவர்களின் கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு இருப்பவர்களுக்கு உள்ளதல்லவா? கொலைகாரர்கள் நீதித்தேவைதையின் கரங்களில் சிக்கி அழிய வேண்டாவா? கொலைகாரக் கூட்டாளிகள் கூண்டுகளுக்குள் அடைபட்டு மடிய வேண்டாவா?
கொன்றவர்களைப் பழி தீர்த்தால்தானே இறந்தவர்கள் எண்ணம் அமைதியடையும்!
மெழுகுத்திரி ஏற்றுவது மட்டுமல்ல உண்மையான நினைவஞ்சலி!
பழி தீர்த்தலே உண்மையான அஞ்சலி!
எப்படிப்பழிதீர்ப்பது?
தமிழ் ஈழக்கனவினை நனவாக்கச் செயல்படுவது.
அதற்கு, முதலில் “தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம்” என்னும் கருத்துப் பரவலை நாம் உலகெங்கும் ஒல்லும் வகையெல்லாம் பரப்ப வேண்டும்!
எந்நாட்டில் இருந்தாலும் தமிழ்மக்கள், தங்கள் கல்வி நிலையையும், திறமையையும், உயர்த்திக் கொள்ள வேண்டும்.
தலைசிறந்த வணிகர்களாக, முன்னணித் தொழில் முதல்வோராக, உயர்ந்த பொறுப்புகளில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டும். தமிழர்களின் சொற்களுக்கு மதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதன் மூலம் இனப்படுகொலையாளிகளின் முகத்திரைகளைக் கிழிக்க வேண்டும்.
பன்னாட்டு அவைகளில் தலைமைப் பொறுப்புகளில் அமர வேண்டும்.
அனைத்து நாட்டு மக்களிடமும் தமிழீழ அலையைப் பாய்ச்ச வேண்டும்.
1.1.1600 அன்று இலங்கையில் தமிழர் வாழ்ந்த பகுதியாவும் தமிழ் ஈழம் என அறிவிக்கச் செய்ய வேண்டும்.
கருத்துப்பரப்பல்கள் மூலமும் பன்னாட்டுஅவைகளில் பொறுப்பேற்பதன் மூலமும் தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்கச்செய்ய வேண்டும்.
தமிழீழக்கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்!
எந்தக் கனவுகளை அழிப்பதற்காக ஈழத்தமிழர்கள் இரு நூறாயிரவரை அழித்தனரோ, அந்தக்கனவுகளை நனவாக்குவதே உண்மையான பழி தீர்த்தலாகும்!
எந்தப் புலிக்கொடியை இல்லாமல் ஆக்க எண்ணினரோ அவர்களை, அந்தப் புலிக்கொடிக்கு வணக்கம் செய்ய வைப்பதே செம்மையான பழி தீர்த்தலாகும்!
எந்தச் சொல்லை – தமிழ்ஈழம் என்னும் சொல்லை – உச்சரிக்கக்கூடத் தயங்கினரோ, தடை விதித்தனரோ அந்தத் தமிழ்ஈழம் என்னும் சொல்லை நாளும் உச்சரிக்கச் செய்யும் வண்ணம் விடுதலை ஈழத்தை அமைக்கச் செய்வதே நன்மைதரும் பழி தீர்த்தலாகும்!
எந்தெந்தத் துயில்வோர் இல்லங்களை எல்லாம் சிதைத்தனரோ, அவற்றை உருவாக்கச்செய்து, வணக்க ஒளி ஏற்றச்செய்வதே உயிர் பறிக்கப்பட்டவர்களின் எண்ணத்திற்கேற்ற பழிதீர்த்தலாகும்!
பிரபாகரன் முதலான எந்தெந்தத் தலைவர்களின் படங்களை எல்லாம் ஏந்தக்கூடாது என்றனரோ அந்தந்தத் தலைவர்களின் படங்களை ஏந்தி ஊர்வலம் வரச் செய்வதே உள்ளத்தில் பதியும் பழிதீர்த்தலாகும்!
நம் எண்ணத்திலும் செயலிலும் இனி இருக்க வேண்டிய முழக்கம் –
மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க!
என்பதே ஆகும்!
பழிதீர்ப்போம்! பழந்தமிழரின் ஈழத்தைமலரச்செய்வோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 134, வைகாசி 02, 2047 மே15, , 2016
Leave a Reply