மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!
மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!
மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு த் தூக்குத் தண்டினை விதிக்கப்பட்டனர். குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல் தூக்குத் தண்டனை நாடகமும் நிறைவேற்றிவிட்டு விடுதலை யும் செய்யும் புதிய நாடகம் அரங்கேறியுள்ளது. ஏறத்தாழ அனைவருமே இதை அறிந்திருக்கின்றனர். ஆனால் விசயகாந்த்து மட்டும் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார். தம்பிதுரை, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும் துணை போய் உள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை நாடாளுமன்றில் கூறியுள்ளதுதான்நாடகம் என்கிறார்.
பாசக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்காகத் தன்னெஞ்சறிந்து பொய் சொல்கிறார்.
உண்மையிலேயே இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இராசபக்சே விடுதலை செய்திருந்தால் மீண்டும் மீண்டும் ஏன் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடிக்க வேண்டும் ; வதைக்க வேண்டும்; மீன்பிடி படகுகளையும் வலைகளையும் அழிக்க வேண்டும்? இராசபக்சேவிற்கு அதிபர் தேர்தலில் ஏமாளித் தமிழர்களின் வாக்குதேவை! மோடிக்குத் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற ஆசை! எனவே, இரு தரப்பாரும் திட்டமிட்டு நாடகம் நடத்தியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நாடகத்தில் மேலும் சில காட்சிகளை அரங்கேற்றினால் நன்று என்பதே நமது விருப்பம். ஐந்து மீனவர்களுக்கும் பொய் வழக்கில் சிறைசெய்து மரண அச்சம் ஏற்படுத்தியதற்காகச் சிங்கள அரசிடமிருந்து கணிசமான தொகை இழப்பீடாக வழங்கப்படவேண்டும்.
இதுவரை சிங்களஅரசால் கொலையுண்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினரருக்குச் சிங்கள அரசும் இந்திய அரசும் இழப்பீடுகள் வழங்க வேண்டும்.
சிங்கள அரசால் அழிக்கப்பட்ட படகுகளுக்கும் வலைகளுக்கும் மாற்றாகப் புதியனவற்றை வழங்கிவிட்டு இழப்பீடும் வழங்க வேண்டும்.
பக்சேயும் நரேந்திரரும் நாடகத்தை முடித்துக் கொண்டதாகக் கருத வேண்டா! இவற்றையும் சேர்த்தார்கள் என்றால் நாடகம் மங்கலகரமாக முடியும் அல்லவா? அவர்கள் எதிர்பார்த்த பயன் கிட்டுமல்லவா? தமிழக மீனவர்களுக்கும் நன்மை கிட்டுமல்லவா?
தூக்குமரத்தில் ஏற்ற இருப்பதுபோல் அறிவித்து மீட்டது மனித நேயம் என்றால் இனியேனும் தமிழக மீனவர்களிடம் இதே மனித நேயத்தைக் காட்டட்டும்! கொட்டடிகளிலும் போலிமுகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்யட்டும்! சிங்களக் கொடுமைகளில் இருந்து தப்பி வருபவர்களைச் சிறைசெய்வதை நிறுத்தட்டும்! தமிழ்ஈழத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலை, கற்பழிப்பு, கடத்தல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்! போலி மனித நேயர்களே! நாடக உருவாக்குநர்களே! இயக்குநர்களே! இவ்வாறு செய்வீர்களா? செய்வீர்களா?
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும். (திருவள்ளுவர், திருக்குறள், 271)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
Leave a Reply