மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த
மேத்தியூ இலீயை
ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்.
வன்னியில் இவ்வாறு புலிகளை அழிப்பதற்குத் துணை சென்ற அதே தலைமைகள் இன்றும் ஐ.நா. உடன் பேசிக் கொண்டிருப்பதாகப் படம் காட்டிக் கொண்டிருக்கின்றன.
இவர்களுக்கு இடையில் தனி மனிதர்களாகச் சிலர் உண்மையை உரக்கக் கூறினார்கள். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் அமெரிக்காவிற்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதை கண்டமான(ஆபத்தான) சூழல் நிலைகளைக் கடந்து மக்களுக்கு உண்மையைக் கூறினார்கள்.
இந்த உலகத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட மொத்த வணிகர்களின் சில்லறகளாகச் செயல்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் நடுவில் நேர்மையாக உண்மையைக் கூறியவர்களுள் மேத்தியூ இரசல் இலீ (Matthew Russell Lee) என்பவர் முதன்மையானவர்.
மேத்தியூ இரசல் இலீ ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூனின் தலைமைச் செயல் (நிருவாக) அலுவலராகச் செயல்பட்ட விசய் நம்பியார் நடத்திய அடைக்கல(சரணடைவு) நாடகத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் அவை இலங்கையில் நடத்திய போர்க்குற்ற உசாவல் (விசாரணை) என்ற ஏமாற்று வேலையை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தார். அதற்காகப் பல கண்டங்களைச்(ஆபத்துக்களை) சந்தித்தார். சேனல் ௪ (4) ஊடகம் வெளிப்படுத்திய தகவல்களை விடக் கூடுதலாக இவர் ஊடகங்களுக்கு வழங்கினார். ஐக்கிய நாடுகள் அவையின் உள்ளேயே அவர் கேள்விகளால் வேள்வி செய்தார். பான் கீ மூன் உட்பட அனைவரும் மேத்தியூ இலீயைக் கண்டு அஞ்சினர்.
அகநகர் இதழியம்(இன்னர்சிட்டி பிரசு) என்ற இணைய ஊடகத்தை நடத்தி வந்த மேத்தியூ இலீ, ஐ.நா-வின் உள்ளே நீதியின்மைகளுக்கு எதிராக நெருப்பாக எரிந்தவர். இன்றைக்கு வன்னிப் படுகொலைகள் போர்க்குற்றம் எனவும் இனப்படுகொலை எனவும் சான்றோடு பேச முடியுமானால் அதற்கு முதன்மைப் பங்காற்றியவர்களில் மேத்தியூ இலீ-யும் ஒருவர்.
புலம்பெயர் அமைப்புகள் சில கூறுவதைப் போன்று சனல் நான்கின் காணொளி(video) ஐ.நா.-வின் உள்ளே அலுவல்சார்ந்து (official) காண்பிக்கப்படவில்லை. ஆனால், இலங்கை அரசு அதற்கு எதிராக வெளியிட்ட காணொளி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா வளாகத்தின் உள்ளே அலுவல்சார்ந்து காண்பிக்கப்பட்டது. போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையைப் படையளவில் தலைமை தாங்கிப் படுகொலைகளை நேரடியாக நடத்தியவர்களில் ஒருவருமான சவேந்திர சில்வாவிற்கு இலங்கையின் உதவி வாழ்விட மாற்றாள் (வதிவிடப் பிரதிநிதி) பதவியை ஐ.நா அளித்துப் பெருமை செய்தபொழுது ஐ.நா-வின் இதயத்தில் மிதித்துக் கேள்வி கேட்டவர் மேத்தியூ இலீ.
சவேந்திர சில்வாவும், இலங்கையின் நிலையான வாழ்விட மாற்றாளுமான பாலித கோகொணவும் ஐ.நா-வின் முதன்மை ஊடக அலுவலரான சியம்போலோ பியோலி என்பவருடன் இணைந்தே இலங்கை அரசின் போலி விழியத்தை ஐ.நா முழுவதும் பரவ விட்டனர். பியோலி ஐக்கிய நாடுகள் தொடர்புக் குழுவின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
வெள்ளைக் கொடியுடன் அடைக்கலமாக(சரணடைய) வந்த புலிகள் இயக்கத்தின் தலைமை உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு முதன்மைக் காரணமானவர்களில் பாலித கோகண்ண என்ற பாதகனும் ஒருவன் என்பது சான்றுடன் நிறுவப்பட்டது.
பாலித கோகண்ணவிற்கும் பியோலிக்கும் இடையேயான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மேத்தியூ இலீ வெளிக்கொண்டு வந்தார். ஐ.நா.வின் தலைமை வரைக்கும் சென்று கேள்வியெழுப்பினார். ஐ.நா.வின் உயர்மட்ட ஒப்புதலுடன் நடைபெற்ற இவ்வாறான பல ஊழல்களை மேத்தியூ இலீ ஆவணப்படுத்தினார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா.வில் மேத்தியூ இலீக்கு அலுவலகம் வழங்கப்பட்டிருந்தது. உள்ளகத் தகவல்களைத் திரட்டுவதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.
மேத்தியூவின் உண்மைகளுக்கு அஞ்சிய பியோலி அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என வெளிப்படையாகக் கூறி வந்தார். ௧௯-௨-௨௦௧௬ (19.02.2016) அன்று ஐ.நா-விலுள்ள அவரது அலுவலகம் பாதுகாப்பு அலுவலர்களால் முற்றுகையிடப்பட்டு அவரது ஆவணங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேத்தியூவின் அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு அலுவலர்கள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
அகநகர் இதழியத்தின்(இன்னர்சிட்டி பிரசின்) செய்திகளைப் படியெடுத்துத் (Copy செய்து) தமது வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் முதுகெலும்பற்ற தமிழ் ஊடங்கள் மேத்தியூ இலீக்கு எதிராக ஐ.நா தனது வளாகத்திற்கு உள்ளேயே நடத்திய மனித உரிமை மீறலை செய்தியாகக் கூட வெளியிடவில்லை.
மேத்தியூ இலீ போன்று எமக்காகக் குரல் கொடுக்கும் நேர்மையான மனிதர்கள் தமிழ் ஊடகங்களின் இந்த மானக்கேடான செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மேத்தியூவை மீண்டும் ஐ.நா.-வினுள் நுழைய இசைவு கோரி எந்தப் போராட்டமும் நடைபெறாது என்பது மட்டும் உறுதி!
அகநகர் இதழியத்தை / இன்னர்சிட்டி பிரசை மீண்டும் இயங்க விடுமாறு ஐ.நா பொதுச் செயலரைக் கோரி நடத்தப்படும் கையொப்ப இயக்கத்தில் கையொப்பம் இடுவீர்: https://www.change.org/p/unsg-ban-ki-moon-dsg-jan-eliasson-cdc-edmond-mulet-and-usg-dpi-gallach-we-demand-inner-city-press-be-restored-to-access-to-the-un-as-a-resident-correspondent
மேத்தியூ இலீயின் அகநகர் இதழியத்தை/இன்னர்சிட்டி பிரசைப் படிக்க: http://www.innercitypress.com/unsri1lanka031809.html
கட்டுரை, படங்கள்: நன்றி இனியொரு.
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply