யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
யார் வந்தாலும் வரவேற்போம்!
வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார் ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்!
அஇஅதிமுக வின் மீது மக்கள் காணும் குறைகள் வேறுகட்சி மீது இருந்தது என்றால், அக்கட்சி அடியோடு வீழ்ந்திருக்கும். அவ்வாறில்லாமல் செல்வாக்கை ஓரளவு காப்பாற்றிக் கொண்டது அக்கட்சி. இருப்பினும் தேர்தலுக்கு முன்னரே அக்கட்சிக்குரிய ஈர்ப்பு குறைந்து வருவதை உணர்ந்து, சென்னையில் எதிர்பாராமல் மீள் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது; தொகுதிகளில் கைப்பற்றிய பணங்களில் பெரும்பகுதி இக்கட்சியினுடையது என்று சொல்லப்பட்டது; தோல்வி அச்சத்தால் பல தொகுதிகளில் பணங்களைப் பொறுப்பாளர்கள் உரிய அளவு வழங்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. இவற்றை யெல்லாம் மீறி அஇஅதிமுக வெற்றி பெற்றதென்றால் அதன் நலத்திட்டங்கள் மக்களை ஈர்த்துள்ளன என அதனைப் பாராட்டுவோம். அதே நேரம், இக்கட்சி, கடந்த தேர்தலில் அறிவித்துச்செயல்படுத்தாத திட்டங்களையும் இம்முறை அறிவித்த திட்டங்களையும் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். படிப்படியாக மதுவிலக்கை அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்லி முதலாண்டில் முதல் தவணையாக மதுக்கடைகளின் நேரத்தை ஒரு மணிநேரம் குறைத்துவிட்டு, அடுத்த தவணையை அடுத்த தேர்தல் நேரம் வரும்பொழுது அறிவிப்போம் என்றில்லாமல் ஓராண்டிற்குள் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!
தன்னால் கூட்டணிக்கட்சிகள் பயன்பெற்றதாகக் கருதும் அஇஅதிமுக தலைவிக்குக் கூட்டணியாலும் தன் கட்சி பயன்பெற்றுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளும் மனம் இருப்பதில்லை. இபப்பொழுது கூட்டணிக்கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடச் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், செ.கு.தமிழரசன், சரத்துகுமார் போன்ற கூட்டணிக் கட்சியினருக்கும் அமைச்சர் பதவி தரவேண்டும்.
யான் எனதுஎன்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (திருவள்ளுவர், திருக்குறள் 346)
என்பதை உணர்ந்து அஇஅதிமுக தலைவி செயலலிதா, அரசு என்பது கூட்டுப்பொறுப்புடையது என்பதை நினைந்து, “நான் ஆணையிட்டேன், நான் செய்தேன், “ என நான், நான் எனச் சொல்வதை விட வேண்டும்.
இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் (திருவள்ளுவர், திருக்குறள் 448)
ஆதலின் இடித்துரைத்து அறிவுரை கூறுவோரை நலம்நாடுபவர்களாக எண்ணாமல் பகையாக எண்ணும் போக்கைக் கைவிட வேண்டும்.
உலகிலேயே அவதூறு வழக்குகள் மிகுதியாகத் தொடுக்கும் அரசு என்ற தவறான பெருமையைப் போக்கி, இதுவரை போடப்பட்ட அத்தயை வழக்குகளை நீக்கி,
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 389)
என்பதற்கு எடுத்துக்காட்டாக இலங்க வேண்டும்.
தி.மு.க. வின் மீது கொலைகாரக்கட்சியின் தோழன் என்றும் இனப்படுகொலை நடந்தபொழுது பாராமுகமாக இருந்த குற்றவாளி – வீட்டு மக்களுக்காக நாட்டு மக்கள் நலனைப் புறக்கணித்த தலைவர் – உடைய கட்சி என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அதையும் மீறி தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதன் பழைய நலத்திட்டங்களுக்காக மக்கள் வரவேற்றுள்ளனர் என்று வரவேற்போம். தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றாலும் பெறாவிட்டாலும் காங்கிரசுடனான கூட்டணி ஆட்சி யமைக்கவே விரும்பும். 1967 இல் விரட்டப்பட்ட தமிழ்மண்ணுக்குப் பகையான காங்கிரசை ஆட்சியில் அமர்த்திய தீராப்பழிக்கு ஆளாவோம் என்பதை உணர்ந்து என்னவென்றாலும் செய்யட்டும். இப்போதைய ஆட்சி நிறைவேற்றாத திட்டங்களையும் தான் அறிவித்துள்ள திட்டங்களையும் செயல்படுத்தட்டும். இதுவரை ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் மதுவிலக்கு நாடகம் ஆடிவிட்டு இடைவேளை விடுவதுபோல் இல்லாமல் இந்த முறை முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழ்வழிக்கல்விக்குக் கதவு அடைக்கப்பட்டது. எனவே, எல்லா நிலையிலும்தமிழ்வழிக்கல்வி இலங்க வகை செய்யட்டு்ம்!
மக்கள்நலக்கூட்டணி, சாவடிப் பொறுப்பாளர்களுக்குக்கூடத் தேநீர் வாங்கித்தரமுடியாத அளவு திண்டாடுகிறது; விசயகாந்து தலைமையை ஏற்க திரும்பவில்லை என்றெல்லாம் பரப்பப்பட்டது. தொடக்கத்திலிருந்தே இக்கூட்டணி சிதையும் என்று பரப்பப்பட்டாலும், வளர்ந்து உறுதியாக நிற்கத்தான் செய்துள்ளது. எனவே, இக்கூட்டணி ஆட்சி வந்தால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்போம்! கேரளாவில் ஒரு நீதி, மேற்கு வங்காளத்தில் ஒரு நீதி என்றெல்லாம் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோலைக் கொண்டுள்ள இதன் கூட்டணிக் கட்சியான மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சி நாட்டிற்கு நாடு வேறு கொள்கை கொண்டிருப்பது தவறில்லை என உணர்ந்து, தமிழர்க்குத் தமிழ்தான் தேசிய மொழி என்பதையும் தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பதையும் ஏற்றுக் கொண்டு, இக்கூட்டணியின் ஈழம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்றால் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி விட்டோம் என்று ஒருபோதும் கொக்கரிக்கக்கூடாது. அவ்வாறு கூறுவது அவர்களுக்கு அழிவைத்தான் தரும்.
“திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!” என முன்னரே (அகரமுதல மார்ச்சு 20, 2016) எனக் குறிப்பிட்டிருந்தோம்.பின்னர் வைகோ அவர்களும் முதன்மைக்கட்சிகள் என்றே கூறினார்.
கூட்டணியிலுள்ள இரு கட்சிகளில் திராவிடம் என்னும் சொல்லிருப்பதற்காக இவர்கள் திராவிடத்தைக் குறை கூறுவது முறையல்ல. முதன்மைக்கட்சிகள் இரண்டும் திராவிடக் கட்சிகள் என்றால், பிற கட்சிகள், பாசக, காங்கி்ரசு போன்று ஆரியக்கட்சிகளா? அதே நேரம், தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
பா.ம.கட்சி மீது சாதி முத்திரை இருப்பதால் மக்களின் ஆதரவு இருந்தாலும் வாக்காளர்கள் என்ற முறையில் ஆதரவு இல்லை என்கின்றனர். ஆனால்,பா.மக. செல்வாக்குள்ள பகுதிகளில் மிகுதியான வாக்குப் பதிவு நிகழ்ந்துள்ளது. எனவே, பா.ம.க. ஆட்சிக்கு வந்தாலும் சாதி முத்திரை நீங்கிய கட்சி என வரவேற்போம். அறிவித்தபடி தேவையற்ற இலவயங்களை நிறுத்திவிட்டுக் கல்வியையும் மருத்துவஉதவியையும் இலவயமாகத் தர ஆவன செய்யட்டும்! பா.ம.க.வாக்களித்தபடி மது இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்கட்டும்!
நாம்தமிழர்கட்சி ஆட்சி் அமைப்போம் என்று அறிவித்திருந்தாலும் ஆதரவு வாக்குகளைக் கணிப்பதற்காகப் போட்டியிட்டதாகத் தெரிகிறது. அதை மீறி நா.த.க.வெற்றி பெற்றால், மொழிக்கொள்கை, இனக்கொள்கையில் தவறான நிலைப்பாடு கொண்டிருப்பதை அகற்றித் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டுமக்களுக்கும் தொண்டாற்றட்டும்!
தமிழை ஒதுக்குகின்ற பாசக, காங்கிரசுபோல் ஒதுக்கப்பட வேண்டிய கட்சியே! எனவே, இக்கூட்டணியும் வெற்றிவாகை சூட வழியே இல்லை காங்கிரசாவது பூவோடு சேர்ந்த நார் போல் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கான வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது. இக்கூட்டணிக்கு அதுவும் இல்லை. எனினும் ஒருவராவது இதில் வெற்றி பெற்றால் அவர்கள் தமிழ் மக்கள், தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்குக் குரல் கொடுக்கட்டும்!
யார் வந்தாலும் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, இசை மொழியாக, இறை மொழியாக, ஆட்சி மொழியாக, எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டுமொழியாகத் தமிழைப் பயன்படுத்தவும் தலைமைப்பொறுப்புகளில் தமிழறிந்த தமிழர்களே இருக்கவும் வழி செய்யட்டும்!
இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கி வைக்கப்பட் அப்பாவிகள் எழுவர் முதலான 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் துன்புறும் அனைவரையும் விடுதலை செய்யட்டும்!
தீர்மானம் போடுவது அல்லது மடல் எழுதுவது என்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டிராமல், தமிழ் மக்களுக்கான உரிமைகளை வாதாடியும் போராடியும் பெற்றுத் தரட்டும்!
தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைாக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழ்ஈழத்திற்கு ஏற்பு – அங்கீகாரம் – வழங்கப்பட வேண்டும் என்பதையும் உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தமிழ்ஈழம்மலர ஆவன செய்யட்டும்!
ஊழல் இல்லாத தமிழ்நாடாக மாற்ற முயலட்டும்!
வென்றால், மக்கள்நாயகம் வென்றது, தோற்றல் பண நாயகத்தால் வீழ்ந்தோம் என யாரும் சொல்ல வேண்டா. தோற்றவர்கள் வென்றவர்களை வாழ்த்திவிட்டு, ஓராண்டேனும் மக்கள் பணிகளில் ஈடுபட்டு அதன்பின் அமையும் அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டட்டும்! ஓராண்டு அமைதி காத்ததன் பின்னர் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகட்டும்!
ஒரு வேளை யாரும் பெரும்பான்மை பெறா நிலை வரலாம். வேட்பாளர் நிலையிலேயே விலைக்கு வாங்கிய முதன்மைக் கட்சிகள், குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு ஆட்சி அமைக்க முயலாம். அதற்குத் தேர்தல் ஆணையமும் ஆளுநரும் வழி வகுக்கக்கூடாது. தேர்தல் முடிவிற்குப்பின்னர் கட்சி மாறுபவர்கள், 25 ஆண்டுக்காலம் தேர்தலில் நிற்கத் தடை என அறிவித்து விட வேண்டும். ஆளுநர் ஆட்சி என்பது மத்திய ஆளும் கட்சியின் ஆட்சிதான். எனவே, அதற்கும் இடம் தரக்கூடாது. மறு தேர்தலை அறிவித்து விட்டு அனைத்துக்கட்சி அறிவுரைஞர் குழுவை அமைத்து அதன்வழி ஆட்சி நடத்தட்டும். மறு தேர்தலில் இத்தேர்தலில் தமிழ்நாட்டளவில் முதல் ஐந்திடங்கள் பெற்ற கட்சிகள் மட்டுமே போட்டியிடவேண்டும் என அறிவிக்க வேண்டும். இத்தேர்தலில் தேர்தல் ஆணையமே வேட்பாளர் செலவை ஏற்க வேண்டும். எக்கட்சி எதுவும் செலவு செய்ய இடம் தரக்கூடாது. ஊடகங்கள் வழியாக மட்டும் தேர்தல் ஆ ணையம் வகுத்துத் தரும் நிகழ்ச்சிப்பட்டியல்படி வேட்பாளர்களளும் கட்சித் தலைவர்களும் பரப்புரை செய்ய வேண்டும். பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது. இவ்வாறான நடைமுறைக்கு எதுவும் சட்டம் தேவையெனில் அவசரச் சட்டம் பிறப்பித்துக் கொள்ள வேண்டும். இதனால் வீண் செலவு செய்துவிட்டு அதனைத் திரும்பப்பெற வெற்றி பெற்றவர்கள் ஊழலில் ஈடுபடவேண்டிய தேவை எழாது. வாக்காளர்களைப் பணம் கொடுத்துத்திரட்டுவதோ, கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் சாவினைச் சந்திப்பதோ, பிற துயரமோ ஊழலோ இடம் பெறாது. அடுத்து நடைபெற உள்ள தேர்தலுக்கும் இது முன்வகையாக அமையும்.
வெல்பவர்களுக்கும் ஆட்சி அமைப்போருக்கும் வாழ்த்துகள்!
பெரும்பான்மை எக்கட்சிக்கும் இல்லையெனில், மறு தேர்தல் நடத்தட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க, அ.தி.மு.க இரண்டையும் பற்றித் தங்கள் தனிப்பட்ட கருத்து என்ன என்பதை நன்றாகவே அறிந்தவன் எனும் முறையில் இந்தக் கட்டுரை கண்டு வியக்கிறேன் ஐயா! தங்கள் பரந்த மனப்பான்மையும் நடுநிலையும் விதந்தோதத் தக்கவை!