வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்
வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா?
உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை!
உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை !
தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள் சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது.
இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக!
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புகள் குறிப்பாக மக்கள்சமூக நிலையங்களை, விளையாட்டுக் கழகங்கள், மகளீர் அமைப்புகள், இசுலாம் நெறி அமைப்புகள், கிறித்துவ நெறி அமைப்புகள், சைவ நெறி அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சட்டவாளர்கள் கழகங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள், ஊரக அமைப்புகள், மகளீர் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றாய்க் கூடும் தருணம்.
எழுக தமிழின் வெற்றிக்கு
எமது உரிமைக் குரலை பலப்படுத்துவோம்
அலை அலையாக ஒன்றாக அணி திரள்வோம்.
எத்தனை அடக்குமுறை செய்தாலும் எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டார்கள் என்பதைச் சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாகக் கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதத்திற்கும் அனைத்துநாட்டினருக்கும் உண்மையை உரக்கச் சொல்வோம்.
கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை(Structured Genocide) எதிர்கொண்டுள்ள தேசம்(Nation) ஒன்றில் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்படும் அடையாள அழிப்பு(Identity Cleansing) என்பது இனவழிப்பின் ஒரு வடிவமே. சிங்களப் பெளத்த பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு கட்டமைப்பு வகையிலான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது. படைமயப்படுத்தலும் சிங்களக் குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும் புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும் பொருளாதாரச் சுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நிலப்பறிப்புகளும் தாராளமாகவே தமிழ் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன
இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான நாம் நமது இருப்பையும் பண்பாட்டையும் இன அடையாளங்களையும் இருத்திவைத்துக் கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் தமிழினம் தனது விழைவுகளை வென்றெடுக்கவும்… வஞ்சகத்தால்(துரோகத்தால்) வீழ்ந்து போன வீரத்தின் விளை நிலமே கிழக்கே ‘எழுக தமிழ்’ முழக்கத்துடன் விழித்துக்கொள்!
இன்று தமிழினத்தின் இழி நிலையை அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையைத் தமிழ் மக்கள் உணரத் தவறினால் நாளை எம்மினத்தின் வரலாறு மிகவும் இரங்கத்தக்கதாக இருக்கும். இன்றுஅடக்கி ஒடுக்கப்பட்டு அடிப்படைஉரிமைகள் நசுக்கப்பட்டு அடிமை நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இனமான உணர்வுடன் ஒவ்வொரு தமிழனும் “நாங்கள் தமிழர்கள்” என்ற ஒற்றை இன உணர்வுடன் தமிழ் இனத்தின் விடுதலைக்காக உறுதியாகச் செயல்படுவோம். வரலாறு ஆழப் பதிய வைத்து சென்ற அந்த “தாயகக்” கனவை மீறி ஒரு பொம்மைத் தீர்வை தமிழர்கள் எளிதில் ஏற்கமாட்டார்கள்.
எப்பொழுதெல்லாம் போராடும் மக்களின் பொறுமை உடைகிறதோ அப்பொழுதெல்லாம் புரட்சி வெடிக்கின்றது
எப்பொழுதெல்லாம் புரட்சி வெடிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மக்களுக்கான மாற்றங்களும் நிகழ்கின்றன.
ஒரு குமுகத்தில் புரட்சியின் தேவை உருவான நிலையில் புரட்சி மலராது இருக்குமானால் அந்தச் குமுகம் மாபெரும் உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுகின்றது. மக்களுக்குள் இருந்து மக்களுக்காகப் போராடும் குணம் மேலோங்கினால் மட்டுமே மக்களுக்கு நன்மைகள் நிகழும்.
தமிழர்களே! சிந்தியுங்கள்! தமிழினமே, நீ எழுச்சிக்கும் புரட்சிக்கும் தலைதூக்கவில்லையெனில் புத்துலகு உன்னைத் தடம் இல்லாது அழித்துவிடும். இனப்படுகொலைகள் செய்யப்பட்ட எங்கள் ஒவ்வொரு உறவுகளையும் நெஞ்சில் நிறுத்தி கிழக்கே அலையாக எழுக தமிழினமே! எழுக!
இனமான உணர்வுடன் ஒவ்வொரு தமிழனும் சிந்தியுங்கள்!.
உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை ! உறுதியாய்க் கேட்போம் எங்கள் உரித்தை!
– ஈழத்து நிலவன்
Leave a Reply