(வெருளி அறிவியல்  –  31-33 தொடர்ச்சி)

வெருளி அறிவியல் 34 – 37 

  1. 34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia

ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி.

ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில் மட்டும் ஏறுவார்கள், ஆண் வெருளியால் பணிக்குச் செல்ல அஞ்சுவோரும் உள்ளனர். ஆண்கள் மிகுதியாகப் பணியாற்றும் இடங்களில் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.

ஆண் வெருளி உள்ளவர்களுக்குத் திருமண வெருளியும் வர வாய்ப்புண்டு.

arrhen என்றால் கிரேக்க மொழியில் ஆண் எனப் பொருள்.

Andro என்றால் பழம்கிரேக்கத்தில் ஆண் எனப் பொருள். Androphobia/Arrhenphobia என்பது ஆண் வெருளி.

Homino என்பது தற்பாலினரைக் குறித்தாலும் ஆடவருக்கு ஏற்படும் ஆடவர் விருப்பு வெறுப்பைக் குறிக்கிறது. தற்பாலின வெருளி என்று சொன்னால் பெண்களுக்குப் பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினால் ஏற்படும் அச்சத்தையும் குறிக்கும். எனவே Hominophobia என்றாலும் ஆண் வெருளிதான்.

00

35.ஆலந்து வெருளி-Dutchphobia

ஆலந்து / நெதர்லாந்து தொடர்பான அச்சம், அளவுகடந்த வெறுப்பு ஆகியன ஆலந்து வெருளி எனப்படுகிறது.

ஆலந்து மக்கள் மீதும் அவர்களின் மொழி, கலை, பண்பாடு,நாகரிகம், வாழ்க்கை முறை, வணிகம், உற்பத்திப் பொருள்கள் என ஆலந்து தொடர்பானவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ அனைத்திலுமோ அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்.

இடச்சு(Dutch) என்பது ஆலந்தைக் குறிக்கும் சொல்.

00

36. ஆவிகள் வெருளி-Pneumatiphobia

ஆவிகள் குறித்த சிந்தனை, ஆவிகள் குறித்துக் கேட்டல் அல்லது படித்தல் என ஆவிகள் மீது ஏற்படும் அச்சம் ஆவிவெருளி.

ஆவிகள் பற்றிய கதைகளைக் கேட்டல், படித்தல், நாடகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள், திரைப்படங்கள் முதலியவற்றில் பார்த்தல் முதலானவற்றால் ஆவிகள்பற்றிய பேரச்சத்திற்கு ஆளாவர்.

‘pneumat’ என்னும் கிரேக்கச்சொல்லிற்கு ஆவி எனப் பொருள்.

பேய் வெருளி(Phasmophobia/Spectrophobia), ஆடி உரு வெருளி(Spectrophobia / catoptrophobia), கழுது வெருளி(Demonophobia/Daemonophobia), பூத வெருளி(Bogyphobia), அலகை வெருளி(சாத்தான் வெருளி)(Satanophobia,), அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி(Hadephobia/Stygiophobia/Stigiophobia), சூன்று வெருளி(Wiccaphobia) ஆகிய வெருளிகளுடன் தொடர்புடையது.

00

37.ஆழ்பு வெருளி-Bathophobia

ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி

ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம்.

மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள், தாழ்வான குகை,  ஆழமான கிணறு அல்லது பிற நீர்நிலைகள் முதலியவை தொடர்பான பேரச்சம் கொள்வர்.

bathos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஆழம்.

(தொடரும்)

ஆண் வெருளி
ஆலந்து வெருளி-
ஆவிகள் வெருளி
ஆழ்பு-வெருளி

[வெருளி அறிவியல் 38 – 41 காண்க. ]