வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15. இரவு விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. தொடர்ச்சி)
மெய்யறம்
மாணவரியல்
15. இரவு விலக்கல்
(இரவு-யாசித்தல்)
- இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல்.
இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.
- இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப.
இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம்.
- இரவினிற் களவு மேற்றமா மென்ப.
இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம்.
- இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப.
உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக.
- இரந்துயிர் வாழ்தலி னிறத்தனன் றென்ப.
இரந்து உயிர்வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.
- அவருரை யெல்லா மழியா வுண்மை.
இவை எல்லாம் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய(அழியாத) உண்மை ஆகும்.
- இரந்துயிர் வாழ்தலிங் கிழிவினு ளிழிவே.
இரந்து உயிர் வாழ்வது இழிவான செயல்களுக்குள் இழிவானது ஆகும்.
- தமக்குவாழ் வாரதிற் சாதலு நன்றாம்.
தமக்காக இரந்து வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.
- பிறர்க்குவாழ் வாரதாற் பிழைத்தலு நன்றாம்.
பிறருக்காக இரந்து வாழ்பவர்கள் உயிர் வாழ்வது சிறந்தது ஆகும்.
- அவரு மதைவிடி னரும்பெருஞ் சிறப்பாம்.
பிறருக்காக இரப்பவர்களும் இரத்தல் தொழிலை விட்டுவிட்டால் அது மிகவும் மதிப்பிற்குரிய சிறந்த செயலாகும்.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply