(. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-தொடர்ச்சி)

இன்று தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் முறை தவறானது.  ஆங்கிலம் கற்பிக்கும் முறையைப் பின்பற்றியே தமிழும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பண்டைக்காலத்தில் தமிழ் கற்பிக்கக் கையாண்ட முறையே தமிழைப் பொறுத்தவரை சரியானதாகும். அம்முறையில் கற்றவர்தாம் பண்டைய புலவர் பெருமக்கள். பிழையின்றி எழுதவும், பேசவும், அம்முறை பெரிதும் உதவியது. ஆனால், இன்றைய முறையில் தமிழ் கற்றவர், புலமைப்பட்டம் பெற்றிருந்தும் பிழையின்றி எழுதத் திணறுகின்றனர்.

இந்தக் கட்டுரையாளர் பண்டைய முறையில் தமிழ் கற்றவரே. முதலில் தமிழ் நெடுங்கணக்கு கற்று, பின் வரிக்காப்பாடம், பேரறிச்சுவடி படித்துப் பிறகு பாலர் பாடம் படித்தால் தமிழைத் தங்குதடையின்றிப் படிக்கலாம்.

இம்முறையைக் கைவிட்டு ஆங்கில முறையைப் பின்பற்றித் தமிழ் கற்பிப்பதால், இன்று உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கரும் ‘தமி;ழ்’ என்று பலுக்கத் தெரியாமல் உள்ளனர்.

‘தமிழ்’ என்னும் சொல்லை  ‘தமில்’ , ‘தமிள்’, ‘தமிஸ்’ என்றே பலரும் பலுக்குகின்றனர்.

ண, ந, ன, ல, ழ, ள, ர, ற ஆகிய எழுத்துகளை வேறுபாடுணர்ந்து பலுக்கப் பலர்க்குத் தெரியவில்லை. எழுத்துக் கூட்டிப் படிக்கும் முறையில் கற்பித்தால் இக்குறைபாடு ஏற்படாது.

காந்தியார் சொன்னார் என்பதற்காக இந்தியாவில் மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்றுவது போன்றதே, ஆங்கில முறையைப் பின்பற்றி தமிழ் கற்பிப்பது.

இக்காலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பொறுப்புணர்ச்சியோடு பாடம் பயிற்றுவதில்லை. ஊதிய உயர்வுக்கும், பிற சலுகைகளுக்கும் போராடுகின்றனரேயன்றி மாணாக்கருக்குத் தமிழ் கற்பிக்கப் போராடுவதில்லை. அன்றியும், ஆசிரியர் பலர் அரசியல் கட்சிகளில் சேர்ந்து கொண்டு பள்ளிக் கூடத்திற்கு ஒழுங்காகப் போவதில்லை; போனாலும், ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை. பல ஆசிரியர், பள்ளிகள் இருக்கும் ஊர்களில் குடியிருப்பதேயில்லை.

மேலும், இப்பொழுது அரசு செய்துள்ள சட்டப்படி ஒன்று முதல் ஐந்து வகுப்பு முடிய பயிலும் மாணாக்கரை, அவர் தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும், மேல்வகுப்புக்கு மாற்றிவிட வேண்டும்.

இத்தகு பல கரணியங்களால் தமிழ்நாட்டில்  கல்வியின் தரம் சீர்கெட்டுவிட்டது. எனவே, தமிழ் கற்பிக்கும் முறை மாற்றப்பட வேண்டும். ஆசிரியர் முழுக்கவனம் செலுத்திக் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் வருங்காலக் குமுகாயம் நன்கு கற்றதாய் விளங்கக் கூடும்.

கற்பிப்பவர், கற்பவர்களைத் தாமே சிந்தித்து அறிந்து எழுதும் திறன் படைத்தவர்களாகச் செய்ய முனையாமல், வினாவிடைகளை மனப்பாடம் செய்து எழுதும் முறையிலேயே பயிற்சி கொடுக்கின்றார்கள்.

கற்பிப்பவர்கள் பாடம் கற்பிக்க வருமுன், அதைத் தாங்களே படித்து ஐயம், திரிபு, அறியாமை நீங்கப் பெற்று, பின்னர் கற்பிக்காது வினா விடை நூல்களை வாங்கிப் படித்துக் கொள்ளுமாறு கூறுதல்.

கற்பிப்பவர்கள், தாங்கள் பயிற்சிப் பள்ளிகளில் கற்ற முறைகளின்படி பாடங் கற்பிக்காமை; கற்பவர்களின் திறனை வெளிக் கொணரும் வகையில் எழுத, படிக்கப் பயிற்சியளித்துத் திருத்தாமல் கடனைக் கழித்தல்;   பள்ளிகளை   ஆய்வு   செய்யும் அதிகாரிகள், ஏனோ தானோ என்று பார்த்துவிட்டு ஒப்பமிட்டுச் செல்லுதல் போல்வன.

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்