(இலக்குவனாரின்பழந்தமிழ்’ – 17 தொடர்ச்சி)

பழந்தமிழ்

5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி

 ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின. பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின் புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன.  ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு  ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல் மொழிநூற் பயிற்சியில்லார்க்குத் தென்பட்டன. அரசியல், பொருளியல், பதவி நிலை ஆகிய இவை காரணமாகத் தமிழ்மொழியாளர்க்கும் பிற திராவிட மொழியாளர்க்கும் போட்டியும் பூசலும் உருவாகி வளரத் தொடங்கின.

  அறிஞர் காலுடுவல் அவர்களும் ஏனைய கிருத்தவ சமயத் தொண்டர்களும் தமிழையும் பிற மொழிகளையும் கற்று, ஆராய்ந்து, நடுநிலை பிறழாத வகையில் தமிழைப் பற்றிய உண்மையான நிலையை உலகுக்கு அறிவித்தனர். அறிஞர் காலுடுவல் அவர்கள் இத்துறையில் ஆற்றிய தொண்டு அளவிடற்கரிது. அவர்கள் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தால்தான் தமிழ்க் குடும்ப மொழிகளின் ஒற்றுமைத் தன்மையை உலகம் அறிந்தது.

  அறிஞர் காலுடுவல் அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் சங்க இலக்கியம் எனப்படும் தொகுப்பு நூல்கள் அனைத்தும் வெளிவந்தில; தொல்காப்பியத்தைக்கூட அவர் கண்டறியார். பழமையான இலக்கண நூல் நன்னூல் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் அவர் கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருப்பரேல் தமிழ்மொழி பற்றி அவர் கூறும் கருத்துகளில் சில மாற்றம் பெற்றிருக்கும். அவர் கூறுவன அனைத்தும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியனவாய் இல்லை என்றாலும் தமிழின் ஏற்றம்பற்றிய அவர் கூற்றுகள் பொன்னேபோல் போற்றத் தக்கனவே.

 திராவிட மொழியும் கிளை மொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதனதன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்பொழுதே, தாம் முப்பத்தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும், தம் மதத்தொண்டிற்குப் பயன்படுத்தியதும், திராவிட மொழிகளுள் பெரும்பாலும் முதன்முதற் பயன்படுத்தப் பெற்றதும், தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும், பலவகையிலும் திராவிடக் குடும்பத்திற்குத் தலைமை தாங்குவதுமான தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக்காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும்1 என்று அறிஞர் காலுடுவல் அவர்கள் கூறுவதிலிருந்து திராவிட மொழிகளின் தாய் தமிழேயாம் என்பது அறியற்பாலது.

  தம் ஆராய்ச்சிக்கு முதன்மையாகக் கொண்டது தமிழேயாம். திராவிட மொழிகளுள் முதன்முதலில் திருந்திய நிலைபெற்ற மொழி இதுவே. ஐயத்திற்கு இடமில்லா மிகப் பழைய சொல்லுருவங்களில் சிறந்த சொல்லுருவங்களையும் மிகப் பலவாயசொல்லுருவங்களையும் பெற்றுள்ள வளர்ந்த மொழி இதுவே. ஆகவே அது அம் மொழி வரிசையுள் தலைமைக்கண் வைக்கப் பெற்றுள்ளது என்று வரைந்து தமிழின் தாய்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

  தற்காலக் கன்னடமும் தற்காலத் தெலுங்கும் தமிழினின்றும் வேறுபடும் செய்திகளில் பழங்கன்னடமும் பழமலையாளமும் துளுவும் துடவும் கோண்டும் கூவும் தமிழுடன் ஒத்திருத்தல் தமிழின் தொன்மைக்கும் தூய்மைக்கும் மற்றொரு சான்றாகும்  என்று நிறுவி, தமிழாம் தாய்க்கும் அதன் புதல்விகளாம் பிற மொழிகட்கும் உள்ள உறவுமுறைத் தொன்மையை எடுத்துக்காட்டியுள்ளார்.

  இனித் தமிழின் புதல்விகள்பற்றிச் சுருங்க உரைக்க முற்படுவோம்.

 மலையாளம் : மலையாளம் என்ற சொல் தமிழ்ச் சொல்லேயாகும். மலையிடத்தை ஆட்சியாகக் கொண்டது

+

  1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பக்கம் 1. (பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் “திராவிடத்தாய்” என்னும் நூல் பக்கம்  27)

+

என்னும் பொருளதாகும். மலையாளம் என்ற சொல் மொழியைக் குறிக்கும். கேரளம் என்ற சொல் நாட்டைக் குறிக்கும். இச்சொல் சேரலன் என்ற தமிழ்ச் சொல்லின் வேறு வடிவமேயாகும். ச போலியாகக் க வருவது இயல்பு. சீர்த்தியே கீர்த்தியாகவும், செம்பே கெம்பாகவும் (கன்னடத்தில்) உருமாறியுள்ளமையைக் காண்க. மலையாள நாடு தமிழிலக்கியங்களில் சேரநாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாண்ட அரசர்கள் சேரர் என்றும் சேரலர் என்றும் அழைக்கப்பட்டனர். சேரன் செங்குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்,  தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ்சேரல் என்னும் பெயர்களை நோக்குக. சேரல் சேரலன் ஆயது. தென்னவன்  சேரலன் சோழன்1, செருமா வுகைக்கும் சேரலன் காண்க2 என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன் கேரலன் ஆகிப் பின்னர்க் கேரளன் ஆகியது. ஆதலின் கேரளன் என்ற சொல்லின் தோற்றத்திற்கு வேறு மூலம் தேடி உரைப்பது உண்மை நிலைக்கு மாறுபட்டதாகும்.

  மலையாள மொழி வழங்கும் நாடாக இன்று கருதப்படும் பகுதி கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரைசெந்தமிழ் நாடாகவே இருந்துள்ளது. செந்தமிழ் இலக்கியங்களாம் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, ஆதியுலா, பெருமாள் திருமொழி முதலியன இப் பகுதியில் தோன்றியனவே.

  பதினாறாம் நூற்றாண்டில் இந்நாட்டுக்கு வந்த வெளிநாட்டவர் தமிழுக்கும் மலையாளத்திற்கும் வேறுபாடு அறியாது தாம் அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ் என்றே அழைத்தனர். ஆதலின் பதினாறாம் நூற்றாண்டு வரையில் இப்பகுதியில் வழங்கிய மொழி  தமிழாகவே இருந்துள்ளது என்று அறியலாம். மலைப் பகுதியில் வழங்கிய மொழியை (தமிழை) மலையாளம் என்று அழைத்தனர் போலும். பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையில் கொடுந்தமிழாகவும் வடசொற் கலப்புடையதாகவும் இருந்து வந்துள்ளது.

+++

1  திருவாசகம்              2 திருமுகப்பாசுரம்

+++

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்