(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தளியும் பள்ளியும்- தொடர்ச்சி)

ஊரும் பேரும்

ஈச்சுரம்

   ஈசன் என்னும் பெயராற் குறிக்கப்படுகின்ற சிவபிரான் உறையும் கோயில் ஈச்சுரம் எனப்படும். தேவாரப் பாமாலை பெற்ற ஈச்சுரங்கள் பல உண்டு. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துரைத்தார் திருநாவுக்கரசர்.

      “நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்

      நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான

      கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்

      குக்குடேச்சுரம் அக்கீச்சுரம்

என்று கூறிச் செல்கின்றது அவர் திருப்பாசுரம்.

நந்தீச்சுரம்

   இக் காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றுள்ள எருமை நாட்டில் நந்தீச்சுரம் என்னும் சிவாலயம் முன்னாளிற் சிறந்து விளங்கிற்று. தமிழ் மன்னர் அக் கோயிலின் பெருமையை அறிந்து போற்றினார்கள் என்பது சாசனத்தால் புலனாகின்றது.1 நந்தீச்சுரமுடையார்க்கு முதற் குலோத்துங்க சோழன் பசும் பொன்னாற் செய்த பட்டம் சாத்தினான் என்று ஒரு சாசனம் கூறும்.2  இக் கோவிலைத் தன்னகத்தே யுடைய ஊர் நந்தி என்று வழங்கலாயிற்று. எனவே, நந்தியில் உள்ள நந்தீச்சுரம் திருநாவுக்கரசரால் குறிக்கப்பட்ட வைப்புத்தலம் என்று கருதலாகும்.

மாகாளேச்சுரம்

    மாகாளம் என்னும் பெயர் பெற்ற திருக்கோயில் மூன்றுண்டு. அரிசிலாற்றங் கரையில் உள்ள அம்பர் மாகாளம் ஒன்று.

“மல்குதண் துறை அரிசிலின் வடகரை

           வருபுனல் மாகாளம்

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

தொண்டை நாட்டில் உள்ள இரும்பை மாகாளம் மற்றொன்று. அதன் சீர்மை,

        “எண்திசையும் புகழ்போய் விளங்கும்

        இரும்பை தன்னுள்

        வண்டுகீதம் முரல் பொழில் கலாய்

        நின்ற மாகாளமே

என்னும் தேவாரத் திருப்பாட்டால் விளங்கும்.3

உஞ்சேனை மாகாளம் என்னும் பெயருடைய பிறிதொரு திருக்கோயில் வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது.

நாகேச்சுரம்

    கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள திருநாகேச்சுரம் தேவாரப்பாமாலை பெற்ற பழம் பதியாகும். அது பழங்காவிரி யாற்றின் தென்கரையில் உள்ளது என்பது.

        “பாய்புனல் வந்தலைக்கும் பழங்காவிரித் தென்கரை

        நாயிறும் திங்களும் கூடி வந்தாடும் நாகேச்சுரம்

என்னும் திருப் பாட்டால் விளங்கும். நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயரும் ஆயிற்று. திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழாருடைய உள்ளங் கவர்ந்த கோயில் திருநாகேச்சுரம். நாகேச்சுர நாதனை நாள்தோறும் வழிபடக் கருதிய அப் பெரியார் தாம் வாழ்ந்த தொண்டை நாட்டுக் குன்றத்தூரில் ஒரு நாகேச்சுரம் கட்டுவித்தார் என்று அவர் வரலாறு கூறுகின்றது..4

நாகளேச்சுரம்

   தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் குழிக்கரை என்னும் ஊரில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு நங்காளீச்சுரம் என்று சாசனம் கூறும்.5 திருநாவுக்கரசர் குறித்த நாகளேச்சுரம் இத்திருக்கோயிலாயிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

கோடீச்சுரம்

      தஞ்சை நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே காவிரியாற்றின் வடபால் கோடீச்சுரம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தேவாரத்தில்,

            “கொடியொடு நெடுமாடக் கொட்டை யூரில்

            கோடீச் சுரத்துறையும் கோமான் தானே6

என்று போற்றும் பெருமை சான்றது இப் பதியேயாகும். கொடியாடும் மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் கோடீச்சுரம் என்னும் திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும் பான்மை இப் பாசுரத்தால் இனிது விளங்கும் கொட்டைச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் கொட்டையூர் என்னும் பெயர் அவ்வூருக்கு அமைந்ததென்பர். அத் தலத்திற் கோயில் கொண்ட பெருமானது திருமேனி பல சிவலிங்கங்களால் அமைந்த தென்பதும், அவரை வழிபட்டார் கோடி லிங்கங்களை வணங்கிய பயனைப் பெறுவர் என்பதும் புராணக் கொள்கை.

கொண்டீச்சுரம்

   நன்னிலத்துக் கருகேயுள்ளது கொண்டீச்சுரம் என்னும் சிவாலயம். இது திருநாவுக்கரசரால் பாடப்பெற்றது; திருக்கண்டீஸ்வரம் என இப்பொழுது வழங்குகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப்பெயரும் ஆயிற்று.

திண்டீச்சுரம்

     ஈசனார் கோயில் கொண்ட திண்டீச்சுரம் என்னும் திருக்கோயில் ஓய்மானாட்டுக் கிடங்கிற் பதியில் அமைந்திருந்ததாகச் சாசனங்கள் கூறும்.7 முன்னாளில் சிறப்புற்று விளங்கிய கிடங்கில் என்னும் ஊர் இப்பொழுது திண்டிவனத்தின் உட்கிடையாக ஒடுங்கியிருக்கின்றது. எனவே, திண்டீச்சுரம் என்று தேவாரத்தில் குறிக்கப்பட்ட தலம் திண்டிவனத்தின் கண்ணுள்ள சிவன் கோயிலேயாகும். இக்கோயில் இராஜராஜன் முதலாய சிறந்த சோழ மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட தென்பது கல்வெட்டுகளால் அறியப்படுவது. திண்டீச்சுரத்தில் தினந்தோறும் இன்னிசை நிகழ்தல் வேண்டும் என்று எண்ணிய இராஜாஜன், வீணை வாசிக்க வல்லார் ஒருவருக்கும், வாய்ப்பாட்டில் வல்லார் ஒருவருக்கும் நன்கொடையாக நிலங்கள் வழங்கிய சாசனம் அக்கோயிலின் தெற்குச் சுவரில் காணப்படும்.8

கோழீச்சுரம்

    இந் நாளில் சிற்றூர் (சித்தூர்) நாட்டைச் சேர்ந்துள்ள புங்கனூர் பெருஞ் சோழ மன்னரது ஆதரவு பெற்ற ஊராக விளங்கிற்று. அவ்வூர்க் கோயிலிற் கண்ட சாசனங்களால் அது பெரும் பாணப் பாடிப் புலிநாட்டில் உள்ளதென்பதும், திருக்கோழீச்சுரம் என்பது சிவாலயத்தின் பெயர் என்பதும் விளங்குகின்றன.9 கங்கை கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெருஞ் சோழன் அவ்வூரில் கட்டிய ஏரி, ‘இராசேந்திர சோழப் பெரியேரி’ என்று வழங்கிற்று. இங்ஙனம் பாண குல மன்னராலும், சோழ குலப் பெருவேந்தராலும் ஆதரிக்கப்பெற்ற கோழீச்சுரம் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறித்த குக்குடேச்சுரமாயிருத்தல் கூடும்.

அக்கீச்சுரம்

     தஞ்சை நாட்டில் காவிரியின் வட கரையில் உள்ள கஞ்சனூர் திருநாவுக்கரசரது பாமாலை பெற்ற பதியாகும். அங்கித் தேவன் அங்கு ஈசனை வழிபட்டான் என்னும் ஐதீகம், “அனலோன் போற்றும் காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவை” என்னும் தேவாரத்தால் அறியப்படும். அக்காரணத்தால் கஞ்சனூர்ச் சிவாலயம் அச்கீச்சுரம் என்று பெயர் பெற்றது. இப்பொழுது அக்கினீசுரர் கோயில் என வழங்கும் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் திருவக்கீச்சுரம் என்று அதனைக் குறிக்கின்றது. எனவே, திருநாவுக்கரசர் கூறியருளிய அக்கீச்சுரம் கஞ்சனூரிலுள்ள ஆலயம் என்று கொள்ளலாகும்.

இன்னும், ஈசனார்க் குரிய கோயில்களைக் கூறும் அத் திருப் பாசுரத்தில்,

        “ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்

        அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண்கானல்

        ஈடுதிரை இராமேச்சுரம் என்றென் றேத்தி

        இறைவன்உறை சுரம்பலவும் இயம்பு வோமே

என்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். இவ்வீச் சுரங்களை முறையாகக் காண்போம்:

ஆடகேச்சுரம்

      திருவாரூரில் உள்ள திரு மூலட்டானம் என்னும் பூங் கோயிலின் உட்கோயிலாக ஆடகேச்சுரம் அமைந்துள்ளது. புற்றிடங் கொண்டார் கோயிலுக்குத் தென்கிழக்கே நாகபிலம் என்று சொல்லப்படும் ஆலயமே ஆட கேச்சுரம் என்பர். அக் கோயில் ஒரு கல்லால் மூடப் பட்டிருக்கின்றது.

    “இப்பெரும் பிலத்தில் அநாதியாய் உமையோடு

     இலங்கொளி ஆடகேச் சுரப்பேர்

     ஒப்பிலா மூர்த்தி உலக மெல்லாம் உய்ய

     ஊழிதோ றூழிவீற் றிருக்கும்.”

என்று திருவாரூர்ப் புராணம் கூறும்.11 எனவே, ஆட கேச்சுரம் என்பது

திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள நாகபிலமே யாகும்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

                         அடிக் குறிப்பு

1. “பகவனே ஈசன், மாயோன், பங்கயன், சினனே புத்தன்”- சூடாமணி நிகண்டு.

2. 180 / 1911.

3. அம்பர் மாகாளம் தஞ்சை நாட்டு நன்னில வட்டத்திலும், இரும்பை மாகாளம் தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்திலும் உள்ளன.

 4. திருத்தொண்டர் புராண வரலாறு, 19.

5. 82 / 1911.

6. கோடீச்சுரக் கோவை நூன்முகம், சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ப.14

7. 143 / 1900.

8. 141 / 1900.

9. திருக்கோழீச்சுரத்திற்கு ஒரு தலைவன் நித்திய பூசைச் செலவுக்காகத் திட்டம் வகுத்து, அதற்காக நாலாயிரத்து இருநூறு குழி நிலம் நன்கொடையாக விட்ட செய்தி இச் சாசனத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. 541 / 1906.

10. செ.க.அ. (M.E.R.) 1930-31.

11. திருவாரூர்ப் புராணம் -ஆடகேச்சரச் சருக்கம்,7.