(தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும் – தொடர்ச்சி)

அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!

இனிய அன்பர்களே!

“மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்ற வள்ளுவர் வாக்கு மருந்து அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பினும் பொதுவாக எல்லா நிலைமைகளுக்கும் பொருந்தும் படியானதே.!
அந்தத் திருக்குறள் முழுவதையும் பார்த்தோமானால் மேலும் சுவையான முடிவுகள் பெறப்படும்.
“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று
.” திருக்குறள் 941.
மு. வரதராசனார் உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். வளி என்பதை வாதம் என்று பொருள் கொள்கிறார் மு.வ.
இது அக்காலத்தியப் பட்டறிவு சார்ந்த மருத்துவ அறிவியல். இக்காலத்தில் அறிவியல் மருத்துவம் அப்படியே ஏற்றுக் கொள்ளுமா என்பது ஐயத்திற்குரியதே.

வாதம் அளவோடிருக்க வேண்டும், மிகையாகவோ குறையாகவோ இருக்கலாகாது என்பதை வேறொரு பொருளில் எடுத்துக் கொள்கிறேன். அரசியல் கருத்தியல் வாதங்களைச் சொல்கிறேன். வாதுரைப்பதும் எதிர்வாதுரைப்பதும் உண்மையைக் கண்டறியவோ நெருங்கிச் செல்லவோ உதவுவதாக இருக்க வேண்டும். வாதத்துக்ககவே வாதம் என்பது மிகைவாதமாகி விடும். வாதமே செய்யாமல் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது குறைவாதமாகி விடும்.

கீல்வாதம், பக்கவாதம் எல்லாமே மிகைவாத, குறைவாத நோய்களே! வளி மிகுதல் அல்லது குறைதல் வலிமிகச் செய்யும்.

நான் சொல்லாடுவதாக உங்களுக்குத் தோன்றினால் அது மிகை இல்லை. குறையும் இல்லை. மிகைப்படுதலின் தீய விளைவுகளைப் பேசத்தான் நினைக்கிறேன். சிறைக்குள் நடந்த கருத்துப் போராட்டங்களில் தனிநலன், அமைப்பு நலன், அரசியல் நலன் இவற்றுக்கிடைப்பட்ட முரண்பாடுகளைக் கையாள்வதில் கண்ட இடர்ப்பாடு குறித்து சுவருக்குள் சித்திரங்களில் எழுதியிருந்தேன் (உழக்கில் ஒரு புயல்).

தனிநலனா? அமைப்பு நலனா? என்ற கேள்வி எழும் போதெல்லாம் ஒரு பொதுமையர் – எந்தப் புரட்சியாளரும் – அமைப்பு நலன் என்றுதான் முடிவு செய்வார். இதில் பெரிய சிக்கல் இல்லை. தன்னலங்கருதாப் பொதுநோக்கு இருந்தால் போதும், இந்த முடிவுக்கு.

ஆனால் அமைப்பு நலனா? அரசியல் நலனா? என்ற வினாவிற்கு விடை காண்பது அவ்வளவு எளிதன்று. அமைப்பு சரியான அரசியலில் சென்று கொண்டிருக்கும் வரை இரண்டையும் வேறுபடுத்திக் காண வேண்டிய தேவையே எழாது. சிற்சில வேறுபாடுகள் எழும் போதும் அமைப்புக்குட்பட்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு தொடர்வதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.

ஆனால் அமைப்பு தவறுக்கு மேல் தவறு செய்து, அவற்றைத் திருத்தும் வழிகளையும் அடைத்து விடும் போது அமைப்புக்கடங்கி நடப்பதற்காகச் சரியான அரசியலைக் கைவிடுவது, ஒருமுறை மட்டுமல்ல, தொடர்ந்து கைவிடுவது கொள்கைக்கு இரண்டகம் செய்வதாகும். கொள்கை சரியாக இருக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? தருக்க அடிப்படையில் சரியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் மக்களின் அடிப்படை நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.


ஆக, சரியான அரசியல் கொள்கைக்கு இரண்டகம் என்பது அருவமான ஏதோ ஒன்றுக்குச் செய்யும் இரண்டகம் என்பதை விடவும் மக்கள் நலனுக்குச் செய்யும் இரண்டகம் ஆகும்.

பொதுமை அமைப்பாயினும், வேறு போராடுகிற அமைப்பாயினும் அமைப்பு நலனை மக்கள் நலனுக்கு மேலாக நிறுத்துவது அந்த அமைப்பை மதமாக்கி விடும், அதிலும் மூட மதமாக்கி விடும். அறிவியலும் அறவியலும் ஆளுக்கு மட்டுமல்ல, அமைப்புக்கும் வேண்டும். அறிவனைத்திலும் மேலானது, அறமனைத்திலும் உயர்வானது மக்கள் பக்கம் நிற்கச் செய்யும் அறிவும் அறமுமே ஆகும்.

நானா அமைப்பா? அமைப்பு என்பதே சரியான விடை. அமைப்பா மக்களா? மக்கள் என்பதே சரியான விடை. இது அடிப்படைப் பார்வை. இலையேல் அமைப்புப் பற்று என்பது குறுங்குழு வெறியாகச் சீரழியும்.

இப்போது ஏன் இந்த விளக்கம்? என்ற கேள்வி எழக் கூடும். ஏப்பிரல் 14 அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் குறித்துத் தோழர் மதியவன் இரும்பொறை எழுதியுள்ள பெரியகுளம் அறிக்கையின் வரிகளிலும் வரிகளுக்கிடையிலும் உய்த்துணரப்படும் சில செய்திகள் என்னை இந்த விளக்கம் எழுதத் தூண்டின. தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 245