( ஊரும் பேரும் 49 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஈச்சுரம் -தொடர்ச்சி)

ஊரும் பேரும்

அகத்தீச்சுரம்

     நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்பது தேற்றம். அக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீசுவரமுடைய மாதேவன் என வரும் தொடரால்குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீசுரம் என்பது ஆலயத்தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் அச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.12

அயனீச்சுரம்

     வட ஆர்க்காட்டு நாட்டிலே வழுவூர் என்னும் ஊர் உண்டு. அவ்வூரில் அமைந்த பழமையான கோயிலின் பெயர் அயனீச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திரு அயனீச்சுரக் கோவிலிற் பழுது பார்ப்பதற்காகவும், பூசனை நிகழ்வதற்காகவும் சாம்புவராயர் என்பார். தேவதானமாக அளித்த நிவந்தம் கல்வெட்டிற் காணப்படுகின்றது.13 எனவே, அயனீச் சுரம் என்பது வழுவூர்த் திருக்கோயில் ஆகும்.

சித்தீச்சுரம்

    திரு நறையூர் என்னும் பாடல் பெற்ற பகுதியில் அமைந்த சிவாலயம் சித்தீச்சுரம். அதன் சிறப்பினைத் திருஞானசம்பந்தர் பாசுரம் தெரிவிக்கின்றது.

       “ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம்

       தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே”

என்னும் திருப் பாட்டால் நறையூரின் செல்வமும் அங்குள்ள சோலையின் செழுமையும் நன்கு விளங்குவனவாகும்.

    இலங்கையில் வாழ்ந்த அரக்கரை வென்றழித்த இராமன் திரும்பி வரும்பொழுது கடற்கரையில் அமைந்த திருக்கோயில் இராமேச்சுரம் ஆகும்.

         “தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்

         பூவியலும் முடி பொன்றுவித்த பழிபோயற

         ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்”

என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சேது காவலர் என்னும் சிறப்புப் பெயருடைய இராமநாதபுர மன்னரால் இப்பொழுதுள்ள கோயில் கட்டப்பட்டதென்று அறிந்தோர் கூறுவர். இந்திய நாடு முழுவதும் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று இராமேச்சுரம்.

இராமேச்சுரம்

    இங்ஙனம் ஈச்சுரப் பகுதிகளைத் தொகுத்துரைத்த திருநாவுக்கரசர், இறுதியில், “இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே” என்று கூறுதலால் இன்னும் பல ஈச்சுரங்கள் உண்டு என்பது இனிது விளங்கும். பாடல் பெற்ற பல பதிகளில் உள்ள திருக் கோயில்கள் ஈச்சுரம் என்னும் பெயரால் தேவாரத்திற் போற்றப்பட்டுள்ளன.

பசுபதீச்சுரம்

அங்கணர்க் கிடமாகிய பழம்பதி ஆவூர்” என்று சேக்கிழாரால் சிறப்பிக்கப் பெற்ற ஆவூரில் அமைந்தது பசுபதீச்சுரம்.

              “பத்திமைப் பாடல் அறாத அவ்வூர்ப்

              பசுபதி ஈச்சுரம் பாடு நாவே”

என்று அத் திருக் கோயிலைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார். ஆன்மகோடிகளாகிய பசுக்களுக் கெல்லாம் பதியாக விளங்கும் ஈசனைப் பசுபதி யென்று போற்றுதல் சைவ முறை யாதலின், அவர் உறையும் கோயில் பசுபதீச்சுரம் என்னும் பெயர் பெற்றது.

பாதாளீச்சுரம்

   தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு வடபாலுள்ளது பாதாளீச்சுரம். திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றுள்ள அக்கோயில் அமைந்துள்ள இடம் பாம்புணி என்று முற்காலத்தில் பெயர் பெற்றிருந்த தென்பது சாசனத்தால் புலனாகின்றது. இப்பொழுது அப் பெயர் பாமணியென மருவியுள்ளது. பாம்பு வடிவுடைய முனிவர் சிலை யொன்று பாதாளீச்சுரத்திற் காணப்படுகிறது.

முண்டீச்சுரம்

  பெண்ணை யாற்றங் கரையில் திரு வெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே யுள்ளது திருமுண்டீச்சுரம். அச்சிவாலயத்தில் அமர்ந்த ஈசனைச் சிவலோகன் என்று போற்றினார்.

       “பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்டமெல்லாம்

       பரித்துடனே நிமிர்ந்துவரு பாய்நீர்ப் பெண்ணை

       திரிந்துலவு திருமுண்டீச் சுரத்துமேய

       சிவலோகன் காண்அவன்என் சிந்தையானே”

என்னும் தேவாரத்தில் பெண்ணை யாற்றங்கரையிலமைந்த திருமுண்டீச்சுரத்தின் அழகும், அங்குச் சிவலோகநாதன் காட்சி தரும் கோலமும் நன்கு விளங்குகின்றன. இந் நாளில் முண்டீச்சுரம் சிவலோகநாதர் கோவில் என்றே வழங்குகின்றது. அக் கோவிலைத் தன்னகத்தேயுடைய ஊர் முன்னாளில் முடியூர் என்று பெயர் பெற்றிருந்தது.14 பராந்தக சோழன் காலத்தில் அது பராந்தக சதுர்வேதி மங்கலம் எனவும் வழங்கியதாகத் தெரிகின்றது.15 முடியூர் என்ற தமிழ்ப் பெயர் பிற்காலத்தில் மௌளி கிராமம் என வட மொழியில் வழங்கப்பெற்ற தென்பதும், அப்பயர் கிராமம் எனக் குறுகிற் றென்பதும், சாசனங்களால் விளங்குவனவாகும்.16 எனவே, பாடல் பெற்ற திருமுண்டீச்சுரம் கிராமம் என்ற ஊரிலுள்ள திருக்கோயில் என்பது தெளிவுறுகின்றது. தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது இப் பழம் பதி.

முக்கீச்சுரம்

      சோழ நாட்டின் பழைய நகரமாகிய உறையூரில் முக்கீச்சுரம் என்னும் திருக்கோயில் விளங்கிற்று. தமிழ் நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபடும் பெருமை சான்ற முக்கீச்சுரத்தைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர்.

          “சீரினால் அங்கொளிர் தென்னவன்

          செம்பியன் வில்லவன்

          சேரும் முக்கீச்சரத் தடிகள்

          செய்கின் றதோர் செம்மையே”

என்பது அவர் திருப் பாசுரம். இப்பொழுது முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளியின் ஒரு சார் அமைந்த உறையூரிற் காணப்படுகின்றது.

கபாலீச்சுரம்

   சென்னையைச் சார்ந்த மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற பழங் கோயில் கபாலீச்சுரம் என்னும் பேருடையதாகும். இக் கோயிலின் முன்னேநின்று பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் தருமாறு சம்பந்தர் பாடிய திருப்பதிகத்தில், “கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்” என்றும், “கண்ணார் மயிலைக் கபாலீச்சுரம்” என்றும் அத்திருக் கோவிலைப் போற்றியருளினார்.

கணபதீச்சுரம்

   செயற் கரிய செயல் செய்து சிவனருள் பெற்ற சிறுத்தொண்டருடைய ஊர் திருச் செங்காட்டங் குடியாகும். அங்குள்ள திருக்கோயிலின் பெயர் கணபதீச்சுரம். விநாயகப்பெருமான் ஈசனை அங்கு வழிபட்டமையால்  அப்பெயர் ஆலயத்துக்கு அமைந்த தென்று கந்த புராணம் கூறும்.17

   செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக் ‘கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே’ என்று திருஞான சம்பந்தர் மனமுருகிப் பாடியுள்ளார்.

சோமீச்சுரம்

    கும்பகோணம் என வழங்கும் குடமூக்குப் பல்லாற்றானும் பெருமை

சான்றது.

           “குடமூக்கே என்பீ ராகில்

           கொடுவினைகள் தீர்ந்து அரனைக் கூடலாமே”

என்பது தேவாரம். இத் தகைய பழம் பதியில் பாடல் பெற்ற சிவாலயம் இரண்டு உண்டு; ஒன்று, குடந்தைக் காரோணம்; மற்றொன்று, குடந்தைக் கீழ்க்கோட்டம், இந்நாளில், முன்னது கும்பேசுரர் கோயில் எனவும், பின்னது நாகேசுவரர் கோயில் எனவும் வழங்கும். நாகேசுவரர் கோயில் என்னும் கீழ்க் கோட்டத்தில் சூரியன் வழிபட்டதாகச் சொல்லப்படுகின்றது. மூலத்தானத்து மூர்த்தியின் மீது இன்றும் சில நாட்களில் சூரியன் கதிர்கள் வீழ்வது அதற்குச் சான்றாகும் என்பர். சூரியன் வழிபட்டவாறே சந்திரனும் குடமூக்கில் ஈசனிடம் வரங் கிடந்தான். அவன் பேறு பெற்ற ஆலயம் சோமீச்சுரம் எனப்பட்டது. இப்பொழுது அது சோமநாதர் கோயில் என வழங்கும்.18

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

                         அடிக் குறிப்பு

12. தி.தொ.வ. தொகுதி 1, பக்243-244 (T.A.S., Vol. I. P. 243-44.) தஞ்சை நாட்டில் பாடல் பெற்ற அகத்தியன் பள்ளியில் உள்ள திருக் கோயிலின் பெயரும் அகச்தீச்சுரம் ஆகும்.

13. 158 / 908.

14. 189 / 1906.

15. 193 / 1906.

16. 735 / 1905.

17. கந்த புராணம், கயமுகன் உற்பத்திப் படலம், 264.

18. தென்னிந்திய ஆலயங்கள், பி.வி.செகதீசன்,பக்.321 (South India Shrines by P.V.Jagadisan.p.321.)