(ஊரும் பேரும் 55 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – திருவாக்கும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி)

இதிகாசமும் ஊர்ப் பெயரும்

பாரதமும் இராமாயணமும்

 நெடுங் காலமாகத் தமிழ் நாட்டில் பாண்டவர் கதையும், இராமகதையும் வீட்டுக் கதைகளாக வழங்கி வருகின்றன. தமிழ் நாட்டு மூவேந்தருள் பாண்டியன் குலம் பஞ்ச பாண்டவரோடு இணைக்கப்பட்டுள்ளது.1 தீர்த்த யாத்திரை செய்த பார்த்திபன் தென்னாட்டிற் போந்து பாண்டி மன்னன் திருமகளைக் காதலித்து மணந்தான் என்று பழங் கதை கூறுகின்றது. சேர மன்னன் ஒருவன் பாரதப் போர் புரிந்த பெரும் படைக்கு உணவளித்துப் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் என்று புகழப்பெற்றான்.

திருவேட்களம்

  இத் தகைய கதைகள் தமிழ் நாட்டில் வழங்கி வந்தமையால் பல ஊர்ப் பெயர்களில் பாரதக் கதை இடம் பெற்றது. சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருவேட்களம் என்னும் சீரூர் அர்ச்சுனனோடு தொடர்புற்றது. சிவ பெருமானிடம் பாசுபதம் பெறக் கருதி நெடுங்காலம் அர்ச்சுனன் வேள்வி செய்த இடமே வேட்களம் என்று பெயர் பெற்றதென்பர்.2 மகாபலிபுரத்திலுள்ள கற்கோயில் ஐந்தும் பஞ்ச பாண்டவ இரதம் என்று குறிக்கப்படுகின்றன.

ஐவர் மலை

 பழனி மலைக்கு அருகே அயிரை யென்ற மலையொன்றுண்டு. அம் மலையில் கொற்றவை யென்னும் தெய்வத்தை அமைத்துப் பழந் தமிழ் மன்னர் வழிபட்டனர்.   நாளடைவில் அயிரைமலை யென்பது ஐவர் மலை யெனத்திரிந்தது. ஐவராகிய பாண்டவர் அம் ஐவர் மலை மலையில் தங்கியிருந்தணர் என்னும் கதை எழுந்தது. அங்குக் கோயில் கொண்டிருந்த கொற்றவை ஐவர்க்குந் தேவி அழியாத பத்தினி” என்று போற்றப்படும் பாஞ்சாலியாயினாள்.3

லாடபுரம்
இன்றும், லாடபுரம் என்னும் ஊரைக் குறித்து ஒரு கதை வழங்குகின்றது. அவ்வூரின் ஆதிப் பெயர் விராடபுரம் என்றும், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தபோது அவரை ஆதரித்த விராட மன்னனுக்குரியது அவ்வூர் என்றும் கருதப்படுகின்றன. அங்குள்ள இடிந்த கோட்டையை அவன் அரண்மனையெனக் காட்டுகின்றார்கள். அப் பகுதியில் ஆடு, மேய்க்கும் இடையர்கள் இன்றும் அருச்சுனன் வில்லைச் சில வேளைகளில் காண்பதாகச் சொல்வர்.

திருப்புல்லாணி
இனி, இராம கதையோடு தொடர்புடைய ஊர்களில் சிலவற்றைப் பார்ப்போம்; இராமன் இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் பொழுது கோடிக்கரையை அடைந்தான் என்றும், அங்கு நின்ற நெடுங்கடலைக் கடப்பதற்கு வழி தரும்படி வருண தேவனை வணங்கி வரங் கிடந்தான் என்றும், அங்ஙனம் வேண்டுங்கால் திருப்புல்லைத் தலையணையாக வைத்துப் பாடுகிடந்த இடம் திருப்புல்லணை என்று பெயர் பெற்றதென்றும் கூறுவர். வடமொழியில் தர்ப்பசயனம் என்று அவ்விடம் குறிக்கப்படுகின்றது. இவ்வாறு நெடும் பொழுது வேண்டியும் வருணன் வாராமையால் அவன் மீது சீற்றமுற்ற இராமன், தன் வில்லைவளைத்துச் சுடுசரம் துரந்த இடம் தனுக்கோடி என்று பெயர் பெற்ற தென்பர்.

 இராமன் நிகழ்த்திய பெரும்போரில் பங்குகொண்ட வானரத் தலைவரின் பெயர்கள் சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. அனுமந்தக்குடி என்னும் ஊர் அனுமன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. காவிரிக்கரையில் அமைந்த குரங்காடு துறைகளில் வாலியும் சுக்கிரீவனும் ஈசனை வணங்கினர் என்று சொல்லப்படுகின்றது. வாலி கண்டபுரம், வாலி நோக்கம் முதலிய ஊர்ப் பெயர்களில் வானர மன்னனாகிய வாலி குறிக்கப்படுகின்றான்.

 புள்ளிருக்கு வேளூர் என்ற ஊரில் இராமனுக்கு உதவி செய்த சடாயு, இறைவனை வழிபட்டான் என்று தேவாரம் பகர்கின்றது. நெல்லை நாட்டிலுள்ள மாயமான் குறிச்சியும், சேலம் நாட்டிலுள்ள மாயமான் கரடு என்னும் ஊரும் மாரீசனோடு தொடர்புற்று விளங்குகின்றன.

திரிசிரபுரம்

 இனி, திருச்சிராப்பள்ளியில் திரிசிரன் புகுந்த முறையும் அறியத்தக்க தாகும். சோழ நாட்டின் பண்டைத் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே நின்ற மலை, சிராப்பள்ளிக் குன்றம் என்று தேவாரத்தில் குறிக்கப் பெற்றது.4 பாடல் பெற்றமையால் சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி யாயிற்று. அப் பதியில் இராவணன் தம்பியாகிய திரிசிரன் வழிபாடு செய்தான் என்ற கதை பிற்காலத்தில் பிறந்தது. அதற்கிணங்க அவ்வூர்ப் பெயரிலுள்ள திரு என்னும் அடையைத் திரியாகத் திரித்தனர்.5 அதனால் திருச் சிராப்பள்ளி என்றும், திரிசிரபுரம் என்றும் வழங்கலாயிற்று.

ஊர்ப் பெயரும் வழக்காறும்

 முற் காலத்தில் தமிழ்ப் பெயர் பெற்றிருந்த சில ஊர்கள் இக் காலத்தில் வடமொழிப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அங்ஙனம் மாறிய சில ஊர்ப் பெயர்களைக் காண்போம்:

மாயவரம்

 காவிரியாற்றின் பழந் துறைகளுள் ஒன்று மயிலாடுதுறை என்று பெயர் பெற்றிருந்தது. நீல நிறம் வாய்ந்த கோல மாமயில் காவிரிச் சோலையில் தோகையை விரித்துக் களி நடம் புரியும் காட்சி நம் மனக்கண் எதிரே மிளிரும் வண்ணம் மயிலாடு துறை என்று முன்னோர் அதற்குப் பெயரிட்டனர். தேவாரத் திருப்பாசுரங்களில் மயிலாடுதுறை என்றே அவ்வூர் குறிக்கப்படுகின்றது. ஆயினும், பிற்காலத்தில் அப்பெயரை வடமொழியில் பெயர்த்து அமைக்கத் தலைப்பட்டார்கள். மயில் என்பதற்கு வடசொல் மாயூரம். அவ்வட சொல்லோடு துறை என்பதைக் குறிப்பதற்குப் புரம் என்னும் சொல்லைச் சேர்த்தார்கள். எனவே, அவ்வூர்ப் பெயர் மாயூரபுரமாயிற்று. அப்பெயரிலுள்ள புரம் வரமாகத் திரிந்து மாயூரவரமாயிற்று. மாயூரவரம் நாளடைவில் மாயவரமாக மாறியுள்ளது. இப் பெயரிலே தோகை மயிலின் தோற்றமும், துறையின் அழகும் அறவே மறைந்து போய்விட்டன.

விருத்தாசலம்

தென்னார்க்காட்டிலுள்ள சிறந்த சிவத் தலங்களில் ஒன்று திருமுதுகுன்றம். அப் பதியில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் பழமலை நாதர் என்று இன்றும் சைவர்கள் போற்றுகின்றார்கள். அவ்வூரின் பெயர் வட மொழியில் விருத்தாசலம் எனப் பெயர்த்து அமைக்கப்பட்டது. இன்று பழம் பெயர் மறைந்து புதுப் பெயரே வழங்கி வருகின்றது.

கும்பகோணம்

சோழ நாட்டில் தெய்வ நலம் சிறக்கப் பெற்ற ஒரு தலம் குடமூக்கு என்னும் பெயர் பெற்றிருந்தது. அது குடந்தை எனத் தேவாரப் பாடல்களிலும், ஆழ்வார் திருப்பாசுரங்களிலும் குறிக்கப்படுகின்றது. அவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று இப்போது வழங்குகின்றது.

இவ்வாறு பெயர் மாறிய ஊர்கள் இன்னும் பல உண்டு. திருமறைக்காடு வேதாரண்யமாக விளங்குகின்றது. கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரணீசுவரர் கோயிலாக அமைந்திருக்கின்றது.

இருபெயர்கள்

இன்னும், சில ஊர்கள் பழைய தமிழ்ப் பெயரோடு வடமொழி நாமங்களையும் உடன் கொண்டு வழங்கக் காணலாம். திருவையாறு என்ற தமிழ்ப் பெயரோடு பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும் வழங்குகின்றது. திருவிடை மருதூருக்கு மத்தியார்ச்சுனம் என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

திருப்புல்லணை (திருப்புல்லாணி) என்னும் தென் சொல்லும், தருப்பசயனம் என்னும் வடசொல்லும் ஒரு பதியையே குறிப்பனவாகும். இன்னும், வானமாமலை தோத்தாத்திரி எனவும், திருக்கழுக்குன்றம் வேதாசலம் எனவும், திரு நீர்மலை தோயாசலம் எனவும் வழங்கக் காணலாம். இன்னோரன்ன தலப் பெயர்கள் பலவுள்ளன.

திரு

 தமிழ் நாட்டில் தெய்வ நலம் பெற்ற ஊர்கள் பெரும்பாலும் திரு என்னும் அடை பெற்று வழங்கும். ஆயினும், சில ஊர்ப் பெயர்களில் திரு இப்பொழுது உருக்குலைந்திருக்கின்றது. சோழ நாட்டுத் திருவழுந்தூர் தேரழுந்தூர் ஆயிற்று. தேவாரம் பெற்ற திருத்தினை நகர், தீர்த்த நகரி எனத் திரிந்தது. திருநெய்த் தானம் என்னும் பழம் பதியின் பெயர் தில்லைத் தானம் என வழங்குகின்றது. இங்ஙனம் சிதைவுற்ற திருப்பெயர்கள் பலவாகும்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை), ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

  1. இதனால் பஞ்சவன் என்ற பெயரும் பாண்டியற்குரிய தாயிற் றென்பர்.
  2. திருவக்குளம் என வழங்கும் திருவேட்களமே இப்பொழுது அண்ணாமலை நகரமா யிருக்கின்றது. அர்ச்சுனன் பாசுபதா த் திரம் பெற்ற ஐதிகம் இத்தலத்திற் கொண்டாடப்படுகின்றது.
  3. சேரன் செங்குட்டுவன் (மு. ரா.)

4.நன்றுடையானைத் தீயதில்லானை..சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.” – திருஞான சம்பந்தர் தேவாரம்.

  1. இவ்வாறு திரு என்ற அடை, திரி என மாறுதலைத் திருகோணமலை திரிகோணமலை யென வழங்குதலாலும் அறியலாம்.