(கல்விச் சிந்தனைகள் 2/3  இன் தொடர்ச்சி)

(20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

கல்விச் சிந்தனைகள் – 3/3

இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனைமொழி, உணரும்மொழி, ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் அந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே.

இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியியக்கம் வெற்றிபெறவில்லை. தேசியமொழியைக் கற்றபாடில்லை. ஆங்கிலத்திலிருந்து தாய்மொழிக் கல்விக்கு மாற மறுப்பது பலவீனம். இந்த திசையில் செல்வது விரும்பத் தக்கதல்ல – தாய்மொழிக் கல்வியும், தேசீய மொழியறிவும் நாம் பெற வேண்டியவை. உலகத்தின் சாளரத்தை மூடவும் வேண்டாம். ஆங்கிலத்தையும் ஒரு மொழியாகக் கற்கலாம்.

தாய்மொழியை மதித்துப் போற்றும் கல்வி உலகமே நமக்குத் தேவை. தாய்மொழி வழி உள்ளத்தை உயர்வு செய்யும் கல்வி கற்போம்; அறிவை வளப்படுத்தும் கல்வி கற்போம். உலகக் கல்வியும் கற்று உலகமாந்தருடன் கை கோர்த்து நிற்போம்! சுய அறிவை வளர்ப்போம். அதற்குத் துணையாகக் கற்கும் கல்வியை ஆக்குவோம்!

பெரிய, பெரிய இலட்சியங்களை இமயத்திலும்’ உயர்ந்த இலட்சியங்களைக் கொள்வோம்! அவற்றை அடைய உழைப்போம்! இதுவே இன்றைய கல்வி உலகு நம்மை அழைத்துச் செல்ல வேண்டிய இடம்.

நாளைய இந்தியா இன்றைய பள்ளியிலேயே தொடங்குகிறது என்பதை நமது அரசுகளும் சமூகமும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். எதிர்கால இந்தியா – ஏற்றமடைவது இன்றைய பள்ளியின் நடைமுறையையும், நமது குழந்தைகளுக்குத் தரப்பெறும் கல்வியையுமே பொறுத் திருக்கிறது.

நாம் இன்று சாதி, மத, இன எல்லைகளிலும், பகுத்தறி வுக்கு முரணான மூடநம்பிக்கைகளிலும் சிக்கிச் சீரழியும்

போக்கினைத் தவிர்த்து, அடுத்த தலைமுறையினருக்குப் புதிய உலகைக் காட்டவேண்டும். நம்முடைய இளைஞர்கள் சிறந்த கல்வியையும், ஞானத்தையும் பெற்று, பொறுமை, உறுதி, முயற்சி, இவற்றோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்வதில் நம்பிக்கை வைக்கக்கூடிய கல்வியே இன்றையத் தேவை. இதுவே நாம் செல்லவேண்டிய திசை..!

கல்வி உலகம் இன்றைக்கு இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. மேலும் தெளிவாகச் சொல்லப் போனால் கல்வியில் இரண்டு ஜாதிமுறை தோன்றியிருப்பது போலத் தெரிகிறது. அதாவது கிராமப்புறக்கல்வி, நகர்ப்புறக்கல்வி என்று குறிப்பிடுகின்றோம். கிராமப்புறக் கல்விக்கும், நகர்ப் புறக் கல்விக்குமுள்ள இடைவெளி மிகவும் அதிகம் என்பதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

நகர்ப்புறத்து இளைஞர்கள், மாணவர்கள், தரமானக் கல்வி பெறமுடிகிறது. அவர்களது அறிவுப் புலன்களுக்கு நிறைய விருந்து கிடைக்கிறது. அதனால், தரமும் திறமையும் உடைய இளைஞர்கள், நகர்ப்புறத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் கிராமப் புறத்தில் அது இல்லை. கிராமப்புற பள்ளிக் கூடங்கள் எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. சோதனைக் கருவிகள் கிடைப்பதில்லை. நல்ல நூலகம் அமைவது இல்லை. அவர்களுடைய செவிப்புலனுக்கு நிறைய விருந்துகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, கிராமப் புறக் கல்வியில், தரம் குறைந்திருக்கிறது என்பது இரண்டு கருத்துகளுக்கு இடமில்லாத ஒரு பொதுச் செய்தி. கிராமப் புறக் கல்வியை மேம்படுத்துவதில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு இப்படி ஒரு ஆலோசனைக் கூடச் சொல்ல முடிகிறது. கிராமப்புறத்தில் திருக்கோயில்கள் உண்டு

“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதை நாம் பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு கோயிலும், அந்தக் கிராமப்புறத்தினுடைய ஆரம்பப் பாடசாலையைத் தத்தெடுத்துக் கொண்டு, அந்த ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சிக்கு, அங்கு பயிலுகின்ற சிறுவர்களுடைய வளர்ச்சிக் குரிய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம்; அப்படிச் செய்தால்தான் கிராமப்புறக்கல்வி வளரும்.

அடுத்து, ஏடுகளின் வழியாக, புத்தகங்களின் வழியாக, கல்வி கற்றுத் தருவதை விட செயல் வழிக் கல்வி கற்பிப்பது நல்லது என்று கருதுகின்றோம். செயல் வழிக் கற்கும் கல்வி நீண்ட நெடு நாட்களுக்கு, நினைவில் இருக்கும். அதனால் அதற்குரிய சாதனங்களை ஒவ்வொரு பள்ளியும் பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும் புதிய புதிய நூல்கள் வாங்கவேண்டும்.

நம்முடைய நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுவது போல, பொங்கல் கொண்டாடப் படுவதைப்போல, கலை மகள் விழா கொண்டாடும் காலம் விரைவில் வர வேண்டும். அப்பொழுதான் கல்வியுலகில் புத்துணர்வும், ஆர்வமும் தோன்றும். இன்று கலைமகள் விழா என்று ஒன்று இருக்கிற தாகவே பலருக்குத் தெரியவில்லை. நூல்களை வாங்குவது மில்லை. நூல்களைப் புதுப்பிப்பதுமில்லை.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் ஏதோ ஒரு மூடநம்பிக்கையில், அன்றைக்குப் படிக்கக் கூடாது என்றே, ஒரு கருத்து உலா வருகிறது. அன்றைக்கு, இருக்கும் புத்தகங் களையும் கட்டிவைத்துவிட்டு, பூப்போட்டு மூடிவிட்டு, படிக்கக் கூடாது என்று முடிவுசெய்து விடுகிறார்கள். இதையும் நாம் மறுத்துவிட வேண்டும்.

பள்ளிக் கூடங்கள் கலைமகள் விழாவன்று திறந்திருக்க வேண்டும். நூலகங்கள் திறந்திருக்க வேண்டும். அன்றைக்குக் கல்வி வேள்வி எங்கும் செய்யவேண்டும். கடைவீதியில் உள்ள புத்தகக்கடைகளில், நீண்ட, நெடிய வரிசையில் மக்கள் நின்று,

தங்களுக்கும், தங்களுடைய குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய அருமை மகனுக்கு, அல்லது அருமை மகளுக்கு, ஒரு பெற்றோர் வாங்கிக் கொடுக்கக்கூடிய உயர்ந்த பரிசு புத்தகமாகவே இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும், பெற்றோர்களும் பயில்விக்க வேண்டும்.

பணிப் பாதுகாப்பு என்பது இன்று வளர்ந்து வந்திருக்கக் கூடிய நாகரீகம். தவிர்க்க முடியாதது. வரவேற்கத் தக்கதும்கூட பணிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே, அவனிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் தரமானவர்களாக, திறமானவர்களாக, அறிஞர் களாக உருவாவதில் ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களுடைய பணி தரமானதாக, எல்லோருக்கும் ஏற்றம் தரத்தக்கதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் பணியினுடைய பாங்கு வளர்ச்சி அடைய முடியும். வெற்றி – பெற முடியும்; உயர்ந்த ஆசிரியர் பணி மேற்கொண்டிருக்கக் கூடியவர்கள், ஒரு நாட்டின் வரலாற்றைச் சீரமைக்க உதவி செய்கிறோம் என்ற எண்ணத்துடன் தம்முடைய பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்

வகுப்பறையில் உட்கார்ந்து படிக்கும் மாணாக்கன், நாளை நாட்டை ஆட்சி செய்பவனாக மாறமுடியும், மாற வேண்டும். அதற்குரிய வாயிலை பள்ளிக்கூடங்கள், சிறப்பாக, ஆசிரியர்கள் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே இன்றைய கல்வியுலகத்தினுடைய தடத்தில் நாம் செல்லுவது போதாது. அகன்ற, விரிவான, உயர்ந்த குறிக்கோளுடைய, லட்சியமுடைய சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், நாம் செல்லும் திசையை அகலப்படுத்தி மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். சிறந்த கல்வி உலகம், அறிஞர் உலகம் தோன்ற வேண்டும். அதுவே நாம் செல்ல வேண்டிய திசை!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

எங்கே போகிறோம்?