காடு - kaadu_forest

காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என்று வழங்குகின்றது. நெல்லை நாட்டில் பச்சையாற்றுப் போக்கிலுள்ள களக்காடு என்ற ஊர் மிகப் பழமை வாய்ந்தது. களாச் செடி நிறைந்திருந்த இடம் களக்காடு என்று பெயர் பெற்றது. தென்பாண்டி நாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையேயுள்ள நெடுஞ்சாலையில் பச்சையாற்றின் கரையில் பாங்குற அமைந்துள்ள களக்காடு என்னும் ஊர், மலை வளமும் நதி வளமும் உடையதாக விளங்குகின்றது.

 

– சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை :

தமிழகம் ஊரும் பேரும்

அட்டை-தமிழகம் ஊரும்பேரும், இரா.பி.சேதுப்பிள்ளை :attai_thamizhagam uurum pearum

தரவு:பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan