தன்னையே பலியிடும்

நவகண்டச் சிற்பங்கள்

48_navakandasirpangal01

தனக்கென வாழாப் பிறர்க்குரிய சமூகம் பண்டைய காலத்தில் போற்றுதலுக்குரிய நிலையில் இருந்துள்ளது. தெய்வத்திற்கோ தலைவனுக்கோ ஊருக்கோ தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வீரனை மக்கள் வழிபடுகின்றனர். இப்பொழுதுகூட உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கும் வழக்கம் அனைத்துச் சமயங்களிலும் காணப்படுகிறது. இந்துக்களாக இருந்தால் கோயில்களிலும், முசுலிம்களாக இருந்தால் நாகூர், ஏர்வாடி முதலான அடக்கத்தலங்களிலும் கிறித்தவர்களாக இருந்தால் வேளாங்கண்ணி முதலான கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துவதைக் காணமுடிகிறது. வழக்கமாகப் பூசை செய்யும் இறைவனுக்கு எச்சில்உணவு வழங்கிய திண்ணப்பன் என்ற கண்ணப்பனைச் சிவனும் விழைந்துள்ளார். “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு தன்னிடம் இல்லையே” என்று மாணிக்கவாச சுவாமிகள் வருந்துகிறார். முரட்டு வழிபாடு அல்லது மறத்தன்மை வாய்ந்த வழிபாடு தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. நவகண்டம் தருதல் மறவழிபாட்டில் அடங்கும். தன் உடலையோ உடல் உறுப்பையோ காணிக்கையாகத் தருவது அன்பின் வெளிப்பாடு ஆகும். தொற்று நோய்கள், எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகள் ஏற்படக் காரணம் தெய்வக் குற்றம் அல்லது தெய்வத்தின் கோபமே என்று மக்கள் இன்று நம்புவது போலப் பண்டைய காலத்திலும் நம்பியுள்ளனர். எனவே தெய்வத்தின் சினத்தைத் தவிர்ப்பதற்காக அல்லது அமைதிப்படுத்துவதற்காக ஆடவர் சிலர் தம் இன்னுயிரைப் பலியிட்டனர். இதனைப் ‘தலைப்பலி’ என்று தெலுங்கில் அழைக்கின்றனர்.

காளாமுகம், காபாலிகம், பாசுபதம், வீரமுட்டி, வீரபத்திரம் ஆகிய சைவப் பிரிவுகள் சில தன்மைகளில் நவகண்டத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. நவகண்ட வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ‘சன்னிநிதி’களைச் ‘சம்புடு கல்லுகள்’ அல்லது ‘சம்புடு குடிகள்’ என வழங்குகின்றனர். தலையை அரிந்து வழங்குவதில் பல முறைகள் உள்ளன. வாளினால் தெய்வத்தின் முன்னர்த் தம் உடம்பை நவதுண்டுகளாக (ஒன்பது துண்டுகளாக) / ஒன்பது பாகமாகக் கூர்மையான வாளினால் வீரன் தன்னைத் தானே வெட்டிக்கொள்வது நவகண்டமாகும். (கை, கால், வயிறு முதலான பகுதிகளைஅரிந்துகொண்டு இறுதியாகத் தன் தலையைத் தானேஅறுத்துக்கொள்வர்.

காளி அல்லது துருக்கை முன்பாக நவகண்ட நிகழ்ச்சி நடைபெறும். நின்றபடியோ, அமர்ந்தபடியோ முழங்காலிட்ட நிலையிலோ வீரன் தலையை வெட்டி எடுப்பது போல் பல சிற்பங்கள் உள்ளன.

தன்னையே பலியிடல்

ஆந்திரப் மாநிலத்தில் பக்தி காரணமாகவும் தலைவன் மீது கொண்ட   நம்பிக்கை காரணமாகவும் ஆடவர்கள் பலர் தங்களையே பலியிட்டுக் கொண்டுள்ளார்கள். கடவுளின் முன்னிலையில் தங்கள் தலைகளைச் சிலர் வெட்டிக் கொண்டுள்ளனர். உறுதி மொழியை நிறைவேற்ற – தடை அல்லது இடரினை நீக்க நினைத்து – பூசை நடைபெறாமைக்கண்டு- தேர் ஓடாமல் நின்று விட்டமை எண்ணி எனப் பல காரணங்களுக்காக உயிர்களை விட்டுள்ளனர். தெலுங்கு மொழியில் ‘போசராச்சியமு’ என்ற காவியத்தில் கழுத்து வெட்டும் ஒரு வகையான ஆயுதத்தை ‘கண்டகட்டோரோ’ என்று அழைக்கின்றனர்.

தூங்குதலை குடுத்தல்

நினைத்த செயல் நடக்கவேண்டும், வெற்றி கிடைக்கவேண்டும்,ஊருக்கு நல்லது நடக்கவேண்டும், பிறர்க்கு வந்த துன்பம் போக வேண்டும் என்று கருதி காளி, கொற்றவை முதலிய பெண் தெய்வங்களை வேண்டிக் கொண்டு தனது தலையை அரிந்து அத்தெய்வங்களின் கோயில் மரங்களில் தொங்கவிடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. இதனை மரத்தில் தொங்குகின்ற தலை என்ற பொருளில் ‘தூங்குதலை’ என்று அழைத்துள்ளனர்; தலையை அறுத்துக் கொடுப்பதை ‘தூங்குதலை குடுத்தல்’ (கொடுத்தல்) என்று அழைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் என்ற ஊரின் அருகில் வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ள மடப்புறம் காளிகோயிலில் ‘தூங்குதலை குடுத்தவரின்’ பெயருடன் கூடிய இரு நடுகற்கள் உள்ளன. இவை பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். மடப்புறம் அய்யனார் கோயிலின் இருபுறமும் எடுத்து வைக்கப்பட்டுள்ள இந்நடுகற்களில் தனது தலையை ஒரு கையால் பற்றி மற்றொரு கையால் தலையை அறுக்கும் வீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றிலுள்ள கல்வெட்டு சித்திரசரிதன், வல்லபன் என்ற இருவர் தூங்குதலை குடுத்ததாகத் தெரிவிக்கின்றன.

வணிகன் நவகண்டம்

வணிகன் ஒருவனின் துன்பத்தை நீக்குவதற்காகத் தலையைத் தந்தவன் பற்றிய கல்வெட்டு ஒன்று விருதுநகர் மாவட்டம் துலுக்கபட்டிக்கு அருகிலுள்ள மன்னார்கோட்டை சிவன் கோயில் அருகில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நடுகல் கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது “சூரங்குடிநாட்டு ஆதனூரான கையம் என்ற ஊரின் கிழவன் சிரீவேழான் சீலப்புகழான் என்பவன் கலியுககண்டடி தன்மச் செட்டி கோன் என்ற வணிகனுக்காக வேண்டிக் கொண்டு தலையை அரிந்து தந்த”தைத் தெரிவிக்கிறது.

தலைவனுக்காகத் தன்னைப் பலியிடல்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் அமைந்த மல்லல் என்ற ஊரின் காளிகோயில் அருகில் கிடைத்துள்ளது. இது கி.பி.1081ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தது. இவ்வூர்ப் பகுதியில் இருந்த வீரன் உதாரன் ஆன குலோத்துங்கச் சோழன் மூவரையும் நோய்வாய்ப்பட்டு அவதியுற்றான். தனது தலைவனுக்கு வந்த அந்நோய் நீங்கவேண்டும் என்று அப்படைத்தலைவனின் சேவகன் அம்பலக்கூத்தன் தூங்குதலை கொடுப்பதாக வேண்டிக்கொண்டு காலப்போக்கில் வந்த நோய் நீங்கியது. இதனால் வேண்டியபடியே அம்பலக்கூத்தன் தன் தலையை அரிந்து படைத்தான் என்று மல்லல் கல்வெட்டு கூறுகிறது. தன் மீது அன்புகாட்டி உயிர்நீத்த தனது சேவகனின் வழியினர்க்குக் குலோத்துங்க சோழ மூவரையேதேவன் தானமாக நிலத்தை அளித்தான் என்றும் அதனை இறந்துபோன வீரனின் மனைவியான கள்ளிவிழாகம் உடையாளுக்கு அளித்தான் என்றும் மல்லல் கல்வெட்டு தெரிவிக்கிறது

ஊர் நலன் காக்க

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் உள்ள கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் முன்பு ஊர் நலன் காக்க ஒரு வீரன் தன்னுடைய தலையை அரிந்து காளிக்குப் படைத்துள்ளான்.

 48_navakandasirpangal02

அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் திருநங்கை தரும் பலி

திருநங்கையாக மாறுவதற்கு அறுவை மருத்துவம் செய்கிறார்கள். ஆண் உறுப்பை நீக்கி அவளை இன்னொரு திருநங்கை தன்னுடைய மகளாக தத்து எடுத்துக்கொள்கிறாள். தொடக்கத்தில் திண்டுக்கல், ஆந்திராவில் கடப்பாவில் மட்டுமே செய்துள்ளார்கள். இவ்வாறு அறுவை மருத்துவம் செய்யப்படும்போது நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. முதலில் அசைவ உணவும் அதன் பின்பு சைவ உணவும் கொடுப்பார்கள். அதன் பின்னர் தனியாக விடப்பட்டு அந்தச் சடங்கு நடைபெறும். அந்தச் சடங்கு மூன்று நாள் நடைபெறும். அப்போது கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கஞ்சி ஆகியவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அதன் பின்னர் யாராவது ஒருவர் மட்டுமே இசைவளிக்கப்படுவார் அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மணப் பூசை நடைபெறும். அம்மணப்பூசை நடைபெறும் இடத்தில் ‘போத்திராசு மாத்(தி)ரா’ படம் வைத்திருப்பார்கள். அங்கு குழி ஒன்று வெட்டப்பட்டு இருக்கும். இரவு 12 மணிக்குப் பின்னர் அறுவை மருத்துவம் செய்யும் திருநங்கை வாயில் முடியை வைத்துத் தலையில் எலுமிச்சைப் பழத்தை வைத்து அடிப்பார்கள். அந்த அடியில் திருநங்கை மயங்கிய நிலையில் காணப்படுவாள். பின்னர் கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிவைத்துவிட்டு பூசை முடிந்தவுடன் மாதா கையில் இருக்கும் அரிவாளால் ஆணுறுப்பு துண்டிக்கப்படும். அப்போது இரத்தம் பீறிட்டுக் குழி முழுவதும் நிரம்பி விடும். அந்த இரத்தத்தை உடல் முழுவதும் தேய்த்து விடுவார்கள். பின்னர் மயக்கத்தைத் தெளியவைத்து இரண்டு கால்களையும் விரித்து அமரவைப்பார்கள். அதன் பின்னர் சூடாகக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய் எடுத்துக் காயம்பட்ட இடத்தில் தடவுவார்கள். அப்பொழுது கண்ணாடியைப் பார்க்கவோ எந்த ஆணையும் ஏறிட்டுப் பார்க்கவோ விடுவதில்லை. இவ்வாறாக திருநங்கைகளாக மாறுபவர்கள் ஆணுறுப்பை மாதாவிற்குப் பலி கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசியல் தலைவர் நலன்வேண்டிக்கொண்டு திருச்சியைச் சேர்ந்தவர் தன்னுடைய கட்டை விரலைக் காணிக்கையாக தந்தார். இதுபோல தன்னுடைய கட்சித் தலைவர் முதல்வராக வரவேண்டும் என்று தேனிமாவட்டத்திலுள்ள வீரபாண்டியன் மாரியம்மன்கோயிலுக்கு ஒரு பெண் நாக்கு ஒன்றைக் காணிக்கையாகத் தந்தார். அதன் பின்னர் அக்கட்சித் தலைவர் அப்பெண்மணிக்கு வேலை வாய்ப்பு அளித்தார். இதேபோல முல்லைப்பெரியாறு அணை, கருநாடகாவில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தரமறுப்பது, இலங்கைச் சிக்கலுக்குத் தீர்வு காணத் தீக்குளித்து இறப்பது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இறைவன் கொடுத்த இன்னுயிரை மாய்ப்பது என்பதைத் தெய்வத்தின் சான்றாகக் கடந்த காலத்தில் அளித்திருக்கிறார்கள் என்பது வரலாறு. அதே வரலாற்றைக் கையில் எடுத்து உயிர்ப்பலி கொடுப்பதையும் நரபலி கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும். இதற்கு மனநல மருத்துவரிடம் காண்பித்தோ அந்தந்தப் பகுதில் முகாம்கள் அமைத்தோ தற்கொலை, நரபலி, தன்னுயிர்ப்பலி போன்றவற்றைத் தடுத்து நிறுத்த அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

vaigaianeesu_name03