தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!

 

தண்ணீரின் நரையைத்தான் பனியே என்பேன்!
தாவரங்கள் தலைநரைப்பைப் பூக்க ளென்பேன்!
கண்ணீரின் நரையைத்தான் நெருப்பே என்பேன்!
காற்றுக்குள் நரைவிழுந்தால் புயலே என்பேன்!
மண்நரையைத் தரிசென்பேன்! மலட்டு வான
மனநரையைத் துறவென்பேன்! புழுக்கம் உண்ட
விண்நரையை வெண்மேக மென்ற ழைப்பேன்!
வெளிச்சத்தின் நரைதானே இருட்டே என்பேன்!

சொல்நரையை இழிவென்பேன்! சோகம் தின்னும்
சுகம்நரைத்தால் பிணியென்பேன்!பல்ந ரைபோல்
வில்நரைத்தால் என்னென்பேன் ? கோழை யென்பேன்!
விழுமழையின் நரையைத்தான் வாடை யென்பேன்
அல்நரையை ஔியென்பேன் ! ஏழை வீட்டு
அடுப்புக்குள் எழும்நரையை வறுமை யென்பேன்!
புல்நரையைக் கோலென்பேன்.!பற்றிக் கொள்ளும்
புன்னகைதான் சோகத்தின் நரையே யென்பேன்!

நதிநரையை என்னென்பீர் ? மணலே என்பேன்!
நரைவிழுந்த மானுடத்தை நசுக்கப் பார்க்கும்
மதநரையை என்னென்பீர் ? மனித மென்றா?
மதுநரையைப் போதையென்றீர் !ஏற்றி ஏற்றி
புதுநரையாய் இளமையினை நுரைக்க விட்டு
புன்னகைக்குள் இளநரையைப் புகுத்தி னோரே
எதுநரைத்தும் தான்நரைக்கா தமிழ்மட் டும்தான்
எப்போதும் நமைநிறைக்கும் தாய்ப்பால் என்பேன்!

நரம்புகளில் தன்மானப் பயிர்வ ளர்ப்போம்!
நரைக்காத விதைச்சொல்லால் வயல்நி றைப்போம்!
வரப்புகளே இல்லாத வயல மைப்போம்!
வரம்புகளைத் தள்ளிவைத்தும் வழிகள் செய்வோம்!
நிரம்பாத பக்கமெலாம் தமிழ்வே தத்தை
நிரப்பிவைப்போம் !நெஞ்சுக்குள் நிறுத்தி வைப்போம்!
உரம்போட்டும் இனம்வளர்ப்போம்! வாய்மை காப்போம்!
உயிர்ப்பாட்டாய்த் தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!

கவிக்கோ துரை வசந்தராசன்
அமைப்பாளர்
பண்ணைத்தமிழ்ச்சங்கம்
பாவேந்தர் இல்லம்
34/11
மூன்றாவது வீதி
வங்கிக்குடியிருப்பு
மாதவரம் பால்பண்ணை

சென்னை —- 6000051