(தமிழ் வளர்த்த நகரங்கள் 6 – அ. க. நவநீத கிருட்டிணன் : . மதுரையின் மாண்பு தொடர்ச்சி)

அத்தியாயம் 4. இலக்கிய மதுரை

மாங்குடி மருதனார் காட்டும் மதுரை

தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும்.

கடைச்சங்கத் தொகை நூலாகிய பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார் என்னும் பெரும்புலவரால் பாடப்பெற்றது. அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் தலைமைப் புலவராகத் திகழ்ந்தவர். அவர் பாண்டியனால் பெரிதும் மதிக்கப்பெற்றவர்.

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக”

என்று அப் பாண்டியனே மாங்குடி மருதனாரைப் பாராட்டுகின்றான். அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் நினைவோடு மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். இந்நூற்கண் அவர் காட்டிய புலமைத் திறங்கண்ட பிற புலவர்கள் அவரைக் ‘காஞ்சிப் புலவர்’ என்றே கொண்டாடினர்.

மாங்குடி மருதனார் காட்டும் மதுரைச் சிறப்பை நோக்குவோம். ஐவகை நிலவளங்களும் நிறைந்து விளங்கும் பாண்டிய நாட்டின் நடுவிடத்தே மதுரைமாநகரம் அமைந்துள்ளது. வையையாற்றின் கரைக்கண் இருப்பது. ஆழமான அகழியையும், உயரமான மதிலையும், இடையறாமல் மக்கள் வந்து போகும் வாயிலையும், வரிசையாக அமைந்த பெரிய மனைகளையும் உடையது. ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற தெருக்களையுடையது. தெருக்களில் பலவகைக் கூட்டத்தாரின் ஒலிகள் எழுந்த வண்ணமாக இருக்கும். முரசறைவோர் விழாக்களைப்பற்றி விளம்பிக்கொண்டே செல்லுவர். கடலொலியைப் போலப் பல்வேறு இசைக்கருவிகள் எங்கும் முழங்கிக்கொண்டிருக்கும். அவ் இசையை விரும்பியவர்களுடைய ஆரவாரமும் நிறைந்திருக்கும்.

மதுரையில் பகற்கடைகளாகிய நாளங்காடியும், இரவுக் கடைகளாகிய அல்லங்காடியும் இருந்தன. கடைகளில் இன்ன பொருள் விற்கப்படுகின்றது என்பதை அறிவிக்கக் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். நாளங்காடியில் பூ விற்பாரும், மாலைகள் விற்பாரும், நறுமணச் சுண்ணம் விற்பாரும், வெற்றிலை பாக்கு விற்பாரும் இருப்பர். அல்லங்காடியில் சிலர் சங்கினை அறுத்து வளையல்களாகக் கடைந்து விற்பர். சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர். சிலர் பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர். சிலர் பொன்வேலை செய்வர். சிலர் ஆடைகள் விற்பர். சிலர் அழகிய ஓவியங்களை வரைந்து விற்பர். பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் ஆகிய கனிவகைகளைச் சிலர் விற்பர். வாழைக்காய், வழுதுணங்காய், பாகற்காய், கீரை, கிழங்கு முதலியவற்றைச் சிலர் விற்பர். இவர்கள் பேசும் ஓசையெல்லாம் கூடிப் பேரொலியாக இருக்கும். இவ் இரவுக் கடைகள் எல்லாம் முதல் யாமத்திலேயே மூடப்பட்டுவிடும்.

இரண்டாம் யாமத்தில் சங்குகளின் ஒலி அடங்கி விடும். அப்போது அப்ப வணிகர் அடையினையும் மோதகத்தினையும் தட்டுகளில் வைத்தவாறே உறங்கிக் கொண்டிருப்பர். நகர மக்களும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பர். மூன்றாம் யாமத்தில் ஊர்க்காவலர்கள் துயிலாத கண்களோடும் அயராத உறுதியோடும் நகரில் உலாப்போவர். அவர்கள் கள்ளர்களை ஒற்றியறிந்து உள்ளம் தளராது திரிந்துகொண்டிருப்பர். மழை பொழிந்து தெருவில் நிறைய நீரோடும் வேளையிலும் அவர் தம் கடமையில் தவறாது கையில் வில்லும் அம்பும் தாங்கிக் காவல் புரிந்து திரிவர். கடையாமத்தில் அந்தணர் மறையினை ஒதுவர். பாணர் மருதப் பண்ணை வாசிப்பர். பாகர்கள் யானைகளுக்குக் கவளம் தந்துகொண்டிருப்பர். குதிரைகள் புல்லைத் தின்றுகொண்டிருக்கும். கடைக்காரர்கள் கடைகளின் முற்றங்களைச் சாணத்தால் மெழுகித் தூய்மை செய்வர். கள் விற்போர் கள்ளின் விலைகூறிக் கொடுத்துக்கொண்டிருப்பர். மகளிர் தத்தம் மனைக் கதவங்களைத் திறக்கும் ஒலி கேட்கும். பள்ளியெழுச்சி முரசம் முழங்கும். காளை மாடுகள் ஆரவாரம் செய்யும். சேவல்கள் கூவும். மயில்கள் அகவும். களிறுகள் பிளிறும். மகளிர் மனைமுற்றங்களைப் பெருக்குவர்.

இங்ஙனம் மாங்குடி மருதனார் காட்டும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மதுரைமாநகருக்கும் இன்றைய மதுரைக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை. பண்டுபோல் இன்றும் எல்லா கலங்களும் நிறைந்து விளங்கும் சிறந்த நகரமாகவே மதுரை திகழ்ந்து வருகிறது. மதுரை போன்ற சிறந்த நகர் தமிழ் நாட்டில் ஒன்றுமின்று, சோழன் சேரன் ஆண்ட தலைநகரங்களும் இதற்கு ஒப்பாகா.

பரிபாடல் பாராட்டும் மதுரை

இனி, மற்றாெரு கடைச்சங்க நூலாகிய பரிபாடல் காட்டும் மதுரையைப் பார்ப்போம். எழுபது பாடல்களைக் கொண்ட பரிபாடல் நூலில் நான்கு பாடல்கள் மதுரையைப் பற்றியன என்று பழம்பாடல் ஒன்று பகர்கின்றது.

“திருமாற்(கு) இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக், காடுகாட்(கு) ஒன்று,-மருவினிய
வையையிரு பத்தாறு, மாமதுரை நான்(கு) என்ப
செய்யபரி பாடல் திறம்.”

அந்நான்கு பாடல்களுள் ஒன்றேனும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வையையைப் பற்றிய பாடல்கள் எட்டு நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றில் இடையிடையே மதுரையைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

மதுரைமாநகரின் நடுவில் திருக்கோவில் அமைந்துள்ளது. அதன் நாற்புறமும் தெருக்களின் பின் தெருக்களாக அமைந்துள்ளன. இவ்வமைப்புத் தாமரைப்பூவின் அமைப்பை ஒத்திருந்தது. தாமரை மலரின் நடுவில் உள்ள பொகுட்டினைப் போன்று இறைவன் திருக்கோவில் இலங்கியது. பொகுட்டினைச் சுற்றியிருக்கும் இதழ்களைப் போன்று தெருக்கள் திகழ்ந்தன. இத்தகைய நகரின் அமைப்பு முறையைப் பரிபாடல் நன்கு சித்திரிக்கின்றது.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்.”

இந் நகரில் எப்பொழுதும் வேதியர் ஓதும் மறையொலி நிறைந்திருக்கும். அந்த மறையொலி கேட்டே மதுரை நகரத்து மக்கள் துயிலெழுவர். சோழன் தலைநகராகிய உறையூரிலும், சேரன் தலைநகராகிய வஞ்சியிலும் வாழும் மக்கள் கோழி கூவும் ஒலி கேட்டுத் துயிலெழுவது போன்று மதுரை மக்கள் துயிலெழுவதில்லை.

வையையாற்றில் நீராடிய மக்கள் ஒப்பனை செய்து கொள்ளுவதற்கென்று சில தனிமாடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அம்மாடங்களுள் சில புலிமுக வடிவில் விளங்கின. அப்புலி வடிவத்தைக் கண்டு, உண்மைப் புலியென்று கொண்டு, களிற்றைப் பாயுமென வெருண்டு, பிடிகள் சிதைந்து ஓடுவதுண்டு.

இந்நகரில் பூக்களை ஆராய்ந்து கொய்பவர் பலர் இருந்தனர். அவர்கள் மலர் கொய்தற்கெனத் தனிக் கோல் ஒன்று வைத்திருந்தனர். அவர்கள் கொய்த மலர்களை மாலையாகக் கட்டுதற் பொருட்டு ஓரிடத்தில் குவிப்பர். அவற்றைக் குவிப்பதற்காகத் தனியே பூமண்டபங்கள் இருந்தன.

மதுரைமாநகரின் மதிலையொட்டி வையை சென்றது. அதில் பெருகிவரும் வெள்ளத்தின் அலைகள், விண்ணுற நிவந்த மதிலின்மீது மோதும். அவ் அலையோசை கேட்டு நகரமக்கள் துயிலெழுவர். மதிலில் நீண்டதொரு சுரங்கவழி நிலவியது. அதன் உள்ளே சென்ற ஆற்றுநீரை, மதில் புறத்தே சொரியும் காட்சி, களிறு துதிக்கையைத் தூக்கி நீரைப் பொழிவது போன்றிருக்கும். மதிலின் புறத்தே வையைக் கரையிலுள்ள மலர்ச்சோலைகளின் நடுவே பாணரும் கூத்தரும் வாழ்தற்கென்று பாக்கங்களும் சேரிகளும் விளங்கின.

திருமகளுக்கு அணிந்த திலகம் போல உலகில் புகழ் பூத்துக் கமழ்வது மதுரைமாநகரம். பரங்குன்றும் வையையும் பாரில் உள்ளளவும் மதுரை சீர்குன்றாது பேர்பெற்று விளங்கும். ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்துவக்கும் மக்கள் மதுரையில் மிக்குள்ளனர். அவர்களே வாழ்வார் என்று சொல்லத்தக்கார். அவர்கள் புத்தேள் உலகும் போதற்கு உரியராவர்.

இத்தகைய மதுரைமாநகரைப் புலவர்கள் தங்கள் புலமைத் துலாக்கோலால் தூக்கிப் பெருமையை நோக்கினர். உலகினை ஒரு தட்டினும் மதுரையை மற்றாெரு தட்டினும் வைத்து எடைபார்த்தனர். உலகனைத்தும் வாட, மதுரையிருந்த தட்டு வாடவில்லை. எனவே, உலக முழுதும் சேர்ந்தாலும் மதுரைக்கு ஒப்பாகாது என்று மதிப்பிட்டார் பரிபாடற் புலவர்.

“உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூடல் நகர் ’’


என்பது பரிபாடல்.

மதுரைமக்கள் நீராடும் வையைத்துறை

மதுரைமாநகரிலுள்ள மக்கள் வையையில் நீராடுதற்குரிய நெடுந்துறையாகவும் முன்துறையாகவும் விளங்கியது திருமருத முன்றுறையாகும். அஃது அடர்ந்த மருதமரங்கள் நிறைந்த கரையைச் சார்ந்த துறையாகும். நீராட வருவார் தங்குதற்குரிய தண் பொழில் அமைந்த அழகிய துறையாகும். கூடலா ரெல்லாம் வந்து கூடினாலும், கூடற்கோமான் படை யுடன் வந்து நாடினாலும் தங்குதற்கு வாய்ப்புடைய வளமான பொழில் சூழ்ந்த எழில்துறையாகும். நீர் வற்றிய வேனில் காலத்திலும் கரையைச் சார்ந்து நீர் சென்றுகொண்டிருக்கும் முன்னடித் துறையாகும். ஆதலால் அது திருமருதமுன்றுறை யென்று புலவர் பாடும் புகழ்பெற்றது.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்