(தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம் தொடர்ச்சி)

காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி…

இனிய அன்பர்களே!
அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலம் மினியாபோலிசு நகரத்தில் 2020 மே 25ஆம் நாள் நடந்த அந்நிகழ்ச்சி அமெரிக்காவைக் குலுக்கி விட்டது, ஏன், உலகையே குலுக்கி விட்டது. தளைப்படுத்தப்பட்ட சியார்சு பிளாயிடு என்ற கறுப்பின இளைஞரை வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் கழுத்துநெரித்துக் கொலை செய்ததைக் கண்டு மாந்தக் குலமே அதிர்ந்தது. “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் (BLACK L LIVES MATTER)” என்ற இயக்கம் புத்துயிர் பெற்று எழுந்தது.

தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைக்கு எதிரான இயக்கத்தையும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் விதையாக மனத்தில் விழ சியார்சு பிளாயிடு கொலை ஒரு காரணமாயிற்று.

நான் 1985 நவம்பரில் வாழ்நாள் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, குறிப்பாகச் சூனியர் விகடனில் சுவருக்குள் சித்திரங்கள் எழுதத் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டில் மனிதவுரிமை இயக்கங்கள் பலவும் என்னோடு தொடர்பெடுத்தன. காவல் நீதி தொடர்பான பல கருத்தரங்குகளில் நான் பேசிக் கொண்டிருந்தேன். பல நிகழ்ச்சிகளில் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் ஓசுபெட்டு சுரேசும் பேசினார். நான் அவர் உரைகளை மொழிபெயர்ப்பது வழக்கமாயிற்று. ஒருவர் சட்டப்படிக் காவலில் வைக்கப்பட்டாலும் அவரைக் காவலில் துன்புறுத்தவோ மோசமாக நடத்தவோ அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உரிமை இல்லை. காவல் வைக்கப்பட்டவருக்கும் மறுக்கவொண்ணாத ஒரு நீதி உண்டு. இதுவே காவல்நீதி (CUSTODIAL JUSTICE) எனப்படும். காவல்நீதியை விளக்கி இந்திய உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காவல்நீதிக்காக இரு பரப்புரை இயக்கங்கள் நடத்தப்பட்டன. ஆசி பெருனாண்டசு தலைமையிலான மனிதவுரிமை ஆராய்ச்சி அமைப்பு, என்றி திபேன் தலைமையிலான மக்கள் கண்காணிப்பகம் ஆகியவை இந்தக் காவல்நீதி இயக்கங்களை முன்னெடுத்து நடத்தின. இரண்டு இயக்கங்களுமே என்னை ஆலோசகராக அறிவித்தன.

மக்கள் கண்காணிப்பகம் காவல் நீதிக்காகவும் சித்திரவதைக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் பரப்புரைப் பயணங்கள் உட்படப் பல இயக்கங்கள் நடாத்தியது. ஆனால் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக அக்கறை கொள்ளவில்லை.
இந்நிலையில்தான் சியார்சு பிளாயிடு கொலைச் செய்தி காவல்நீதி இயக்கத்தை மீண்டும் விழிக்கச் செய்தது. மக்கள் கண்காணிப்பகத்தின் முன்முயற்சியில் “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும், ஒடுக்கப்பட்டவர் உயிர்கள் பொருட்டாகும், முசுலிம் உயிர்கள் பொருட்டாகும்” என்ற தலைப்பில் மாபெரும் இணையக் கூட்டம் நடத்தினோம்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சித்திரவதையால் 2020 சூன் 22, 23இல் பென்னிக்சுசு – செயராசு உயிரிழந்த கொடுமை தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.

பென்னிக்குசு-செயராசின் குருதித் துளிகளில் கருக்கொண்டதுதான் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT). மக்கள் கண்காணிப்பகத்தின் முன்மொழிவின் பேரில் இந்தக் கூட்டியக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நானும், செயலாளராக தோழர் மீ.த. பாண்டியனும் பொறுப்பேற்றோம். அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களையும் சட்டத் தரணிகளையும் கூட்டியக்கத்தில் இணைக்க முடிவு செய்தோம்.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் இணைந்த அரசியல் கட்சிகள், இயக்கங்களின் முதல் கலந்தாய்வு 2020 சூலை 5ஆம் நாள் இணையவழி நடைபெற்ற போது 60 பேராளர்கள் கலந்து கொண்டார்கள். சாத்தான்குளம் கொடுமைக்கு முழுமையான நீதி கோரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்தோம். கூட்டியக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பகம் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தும் என்று தீர்மானித்தோம். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்துக்கான மாநிலச் செயற்குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்தோம்.
அடுத்த 4 நாளில் சூலை 9ஆம் நாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது 20 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். 37 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு சூலை 11ஆம் நாள் நடைபெற்றது. மகுடை(கொரோனா) பெருந்தொற்றுக் காலம் எனபதால் இந்தக் கூட்டங்கள் அனைத்தும் அணுக்கச்(சூம்) செயலி கொண்டு இணையவழி நடைபெற்றன.

கூட்டியக்கம் தன் முதல் கடமையாகச் சாத்தான்குளம் தொடர்பான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவெடுத்தது. சாத்தான்குளம் குற்றவாளிகள் தளைப்படுத்தப்பட்ட பிறகும், காவல்துறை, நீதித்துறை, மருத்துவத் துறையில் கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை முன்னிறுத்திப் பலவகையிலும் – இணையத்திலும் இயன்ற வரை நேராகவும் – கிளர்ச்சிகள் செய்தோம்.

காவல் சித்திரவதை சாத்தான்குளத்தோடு முடியவில்லை. தென்காசி மாவட்டம் அணைக்கரை முத்து வனக்காவலர்களால் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்காகப் போராடினோம். வேலூரில் சாலினியும் அவர் குழந்தையும் சித்திரவதை செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராடினோம்.

சூலை 23ஆம் நாள் நடைபெற்ற வழக்கறிஞர் கலந்தாய்வில், என்றி திபேன், ப.பா. மோகன், அசிதா, பிரிட்டோ, பார்வேந்தன், முகமதுராசா … கலந்து கொண்டனர்.

கடந்த மூன்றாண்டுக் காலத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் நடத்தியுள்ள பொது உரையாடல்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், வெளியிட்டுள்ள வெளியீடுகள்… ஒவ்வொன்றாகச் சொல்லிப் போவதை விரிவஞ்சித் தவிர்க்கிறேன். சாத்தன்குளம் படிப்பினைகள் அடிப்படையில் நாம் வெளியிட்ட சாத்தான்குளம் சாற்றுரையும், ஊபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்கள் குறித்து நாம் தொகுத்து வெளியிட்ட சட்டவாளர்களின் உரைத் தொகுப்பும் குறிப்பிடத்தக்க அறிவுசார் ஆவணங்களாகும்.
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் முதன்மைக் குறிக்கோள் தமிழகத்தில் காவல் சித்திரவதையே இல்லை என்ற நிலையை உருவாக்குவதாகும். அதற்கு அமைப்பை விரிவாக்கவும் ஆழமாக்கவும் வேண்டும். மாவட்டம், வட்டம் என்ற அளவில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இந்த நோக்கம் இன்று வரை முழுமையாக ஈடேறவில்லை.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கமும் மனிதவுரிமைக் காப்பாளர்கள் விழிப்பு அமைப்பும் இணைந்து அண்மையில் ஏற்காட்டில் நடத்திய இருநாள் (மே 27, 28) கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்துக்கான அமைப்புப் பணிகள் குறித்து விரிவாகக் கலந்து பேசி முடிவுகள் எடுத்தோம்.

இந்த முடிவுகளின் படி கூட்டியக்கம் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்குமான அமைப்புக் கூட்டம் வருகிற சூன் 10, 11 நாட்களில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைப்புகள் திருத்தியமைக்கப்படுவதோடு மனிதவுரிமை வகுப்பும் எடுக்கப்படும். 10ஆம் நாள் காரிக் கிழமை திருச்சிராப்பள்ளியிலும் 11ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை ஈரோட்டிலும் நான் கலந்து கொள்கிறேன்.

ஏற்காட்டில் எடுத்த முகன்மையான முடிவுகளில் ஒன்று: வருகிற சூன் 26ஆம் நாள் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான பன்னாட்டு நாளை முன்னிட்டும், சூலை 5ஆம் நாள் அருட்தந்தை இசுடான் சுவாமி நினைவு நாளை முன்னிட்டும் இரண்டுக்கும் இடைப்பட்ட நாட்களிலும் காவல் சித்திரவதைக்கு எதிராகவும், ஊபா போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை எதிர்த்தும் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவதாகும்.

சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டு (ஐநா) உடன்படிக்கையை இந்திய அரசு ஏற்புறுதி செய்ய வேண்டும் என்பது நம் நெடுநாளைய கோரிக்கை.

தமிழ்நாடு காவல் சித்திரவதை (தடுப்பு) ச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

ஏற்காடு கூட்டத்தில் பெரியகுளம் போராட்டக் குழு சார்பில் தோழர் மதியவன் தலைமையில் ஐந்து தோழர்கள் கலந்து கொண்டனர். மதியவன் எழுதிய பெரியகுளம் அறிக்கை குறுநூல் வடிவில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் (பல்லுடைப்பு பல்பீர் சிங்கு), செங்கல்பட்டு (கூர்நோக்கு இல்லம்) உள்ளிட்ட தமிழ்நாட்டின் போராட்டப் புள்ளிகளிலிருந்து வந்திருந்த தோழர்கள் அந்தந்தப் போராட்டப் பட்டறிவைப் பகிர்ந்து கொண்டதோடு, எதிர்காலத் திட்டம் குறித்தும் விவாதித்தார்கள்.

ஏற்காட்டில் இரண்டு நாள் எதிர்கால இயக்கத்துக்கு அளித்த வெளிச்சம் ஏந்தி மலையிறங்கினோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 210