(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9 தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்


முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருசம் செப்டம்பர் மாதம் 10-ஆந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோசமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோசப்பட்டேன். இதற்குக் காரணம் அந்த மூன்று மாதத்தின் பிறகு என் கடைசித் தங்கை தனது 16-வது வயதிற்குள் தன் புருசனை இழந்து விதவையானதேயாம். இது நேர்ந்தபோது அக்கோர சம்பவத்தைக் காணாது என் தாயார் இறந்ததே நலமென்று உறுதியாய் நம்பினேன். என் தாயார் உலகில் ஒரு பெண்மணி அனுபவிக்கவேண்டிய சுகங்களையெல்லாம் அனுபவித்தே இறந்தார்கள் என்று நான் கூறவேண்டும். தனது எட்டு குழந்தைகளுக்கும் விவாகமாகி (எனக்கு 1890-ம் வருசம் விவாகமானது) பேரன் பேத்திகளெடுத்து தன் கணவனுக்கு சசுட்டிபூர்த்தியாகி சுமங்கலியாய் ஒரு மாங்கல்யத்திற்கு இரண்டு மாங்கல்யங்களாகப்பெற்று சிவ சாயுக்தமடைந்தது வருந்தத்தக்க விசயமல்ல என்று என் மனதைத் தேற்றிக் கொண்டேன். அவர்களுடைய உடல் அவர்கள் கோரிக்கையின்படியே சமாதியில் வைக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம் என் ஆயுளுள் நேரிட்டவைகளுள் மிகவும் சந்தோசகரமானது. இவ் வருசம் கோடைக்கால விடுமுறையில் காலஞ்சென்ற ஆந்திர நாடகப் பிதா மகன் என்று கௌரவப் பெயர் பெற்ற வெ. கிருட்டிணமாச்சார்லு என்பவர் பல்லாரியிலிருந்து சென்னைக்கு வந்து தான் ஏற்படுத்திய சரச வினோத சபை அங்கத்தினருடன் தெலுங்கு நாடகமாட அதற்கு ஓர் இரவு நான் என் தகப்பனாருடன் போய்ப் பார்க்கும்படி நேரிட்டதேயாம். இதுதான் பிற்காலம் நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும், தமிழ் நாடகங்களில் நடிப்பதற்கும் அங்குரார்ப்பணமாயிருந்த சம்பவம். இதைப்பற்றி விவரமெல்லாம் அறிய விரும்புவோர் எனது “நாடக மேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் கண்டு கொள்ளும்படி வேண்டுகிறேன், பி.ஏ. சரித்திர பரிட்சையில் நேரிட்ட இன்னெரு விசயத்தை இங்கு எழுதுகிறேன். நான் மாநிலக் கல்லூரியிலிருந்தும், வி. வி. சீனிவாச ஐயங்கார் பச்சையப்பன் கல்லூரியிலிருந்தும் போனோம். இப்பரிட்சைக்கு. இருவரும் பேரவை இல்லத்தில்(செனெட் அவுசில்) பரிட்சைக்காக, தினம் சந்தித்து மத்தியான போசன காலத்தில் ஒன்றாய் உட்கார்ந்து பேசுவது வழக்கம். பரிட்சையில் ஒருநாள் மத்தியானம் பேசிக் கொண் டிருந்தபோது எனது நண்பர் “சம்பந்தம், நான் சரித்திரத்தில் சிறப்புப் பாடப் புத்தகத்தை நன்கு படிக்கவில்லை. சாயங்காலப் பரிட்சைத்தாளில் என்ன கேட்கப் போகிறார்கள் சொல் பார்ப்போம்” என்று சொன்னார். நான் யோசித்து “இந்த யுத்தத்தைப் பற்றி கேள்வி வரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அதன் விவரங்களைச் சொல்லி வைத்தேன். உடனே பரிட்சை மணி அடிக்க இருவரும் தேர்வுக்கூடத்துக்குப் போய் உட்கார்ந்தோம். இருவர்களுடைய பெயர்களும் S எனும் ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகிறபடியால் எங்கள் நாற்காலிகள் சற்று அருகாமையிலிருந்தன. பரிட்சைக்காகிதம் (Examination paper) எங்களுக்குக் கொடுக்கப் பட்டவுடன் அதில் நான் ‘சோசியம்’ சொன்ன கேள்வியே கேட்டிருந்தது! இதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். வி.வி. சீனிவாச ஐயங்காரும் ஆச்சரியப்பட்டு புன்முறுவலுடன் என்னைப் பார்த்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.


1892-ஆம் வருசம் மாநிலக் கல்லூரியில் இன்னொரு வருசம் படித்தேன். ஆங்கிலம் தமிழ் பரிட்சைகளில் முதல் வகுப்பில் தேறினதுபோல் சரித்திரம் (History) பிரிவிலும் முதல் வகுப்பில் தேற வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதே இதற்குக் காரணம் தெய்வத்தின் கருணையினால் என் கோரிக்கையின்படியே முதல் வகுப்பில் தேறினேன். அன்றியும் இப் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினவன் நான் ஒருவன்தான் மாகாண முழுவதிலும். இதைப்பற்றி சில விவரங்கள் எழுத இச்சைப்படுகிறேன். நான் மாநிலக் கல்லூரியில் படித்த போது சரித்திரத்தில் முதலாவதாகத் தேறினதற்காக, கார்டன் பரிசும், தமிழில் முதலாவதாக தேறியதற்காக, போர்டீலியன் பரிசும் பெற்றேன். அன்றியும் தமிழ் வியாசப் பரிட்சையில் முதலாவதாக இருந்ததற்காக நார்டன் தங்கப் பதக்கம் (Norton gold medal) பெற்றேன். பிறகு பவர் வர்னாகுலர் பரிசும் பெற்றேன். இப்பரிசு ஆமர்டன் என்னும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய ஒரு புத்தகத்தில் சில பாகங்களை மொழி பெயர்த்ததற்காகக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மூன்று பரிசுகளின் மொத்த தொகை எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் சுமார் உரூபாய் 144 ஆயிற்று. இதற்காக கொடுக்கப்பட்ட காசோலையை என் தகப்பனாரிடம் கொடுத்து சந்தோசப்பட்டேன். அவரும் சந்தோசப்பட்டார்.


1893-ஆம் வருசம் நான் பி.ஏ. பட்டம் பெற்றபோது சென்னை சர்வ கலாசாலையாரால் சரித்திரத்தில் முதலாவதாக தேறினதற்காக நார்த்விக் (Northwick) பரிசு கொடுக்கப்பட்டது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை