(தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!-தொடர்ச்சி)

சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு


22/06/2023 அன்று சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஏற்கெனவே உங்களுக்குச் சொன்ன படி, பென்னிக்குசு செயராசு குடும்பத்தினர் நான் அந்த நாளில் சாத்தான்குளத்தில் தங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சில நாள் முன்பு என்றி திபேன் வாயிலாக அறிந்தேன்.

செயராசின் மருமகன் அகட்டினும் இதை உறுதி செய்த போது, எப்படியும் போய் விடுவது என்று முடிவெடுத்தேன். அதே ஊரைச் சேர்ந்த நண்பர் இசக்கிமுத்து அழைத்து என் வருகையை உறுதி செய்து கொண்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான ததேவிஇ அமைப்புச் செயலாளர் தோழர் மகிழனையும் என்னோடு அழைத்துச் செல்ல விரும்பினேன். அன்பர் நலங்கிள்ளி உடனே தொடர்வண்டிப் பயணச்சீட்டுக்கு ஆவன செய்தார்.

மூன்றாண்டுகளாக அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் சொல்லத் தவறி விட்டேன் என்ற குற்ற உணர்விலிருந்து விடுபடப் போகும் மாறுதலான உணர்வோடு பயணத்துக்கு அணியமானேன்.

கடைசி நேரத்தில் சுருதிக்கு உடல்நலம் குன்றவே, மகிழன் என்னோடு வர முடியாத நிலையில் நான் மட்டும் 21/06 இரவு தாம்பரத்தில் வண்டியேறி 22/06 விடியற்காலையில் நெல்லை போய்ச் சேர்ந்தேன். என்னை அழைத்துப் போக அன்பர் பிரிட்டோ வந்திருந்தார்.

பிரிட்டோவும் அன்பர் நெல்லை பீட்டரும் உடன்வர சாத்தான்குளத்துக்குப் புறப்பட்டேன். வழியிலேயே பிரிட்டோ சொன்ன தகவல்: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஒரு காவல் சாவு நிகழ்ந்துள்ளது. அதற்கு நீதி கோரிப் போராட்டம் நடந்து வருகிறது.

“இன்று மாலை புளியங்குடியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று போராட்டத்தில் முன்னுக்கு நிற்கும் மா.பொ.க.(சிபிஎம்) கட்சியினர் விரும்புகின்றனர். நீங்கள் சாத்தான்குளம் வருவது தெரிந்து அழைக்கின்றனர்” என்றார். போகலாம், அதற்குமுன் விவரம் முழுக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றேன்.

அடுத்து நான் ஒரு கோரிக்கை வைத்தேன். காலுடுவெல் வாழ்ந்த இடையன்குடிக்குப் போக வேண்டும், இன்றோ நாளையோ போகலாம்.

இடையிடையே சாத்தான்குளத்திலிருந்து இசக்கிமுத்து அழைத்துக் கொண்டே இருந்தார். நாங்கள் போய்ச் சேரும் போதே சாத்தான்குளம் கடைத்தெரு பகுதியில் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. சுப. உதயகுமார், பேராசிரியர் பாத்திமா முதலான பலரும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தனர் உள்ளூர் மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். அவர்களிடையே வணிகர்களும் அனைத்துக் கட்சியினரும் கலந்திருப்பதை உணர முடிந்தது.

பென்னிக்குசின் அக்காள் பெருசிசு நின்ற படியே நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டும், வலையொளிக்காரர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டும் இருந்தார். நீண்ட நேரம் கழித்தும் அவர் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்து நான் அவரை உட்காரச் சொல்லி சைகை செய்தேன், அவர் மறுத்த போதும் விடாமல் வலியுறுத்தி உட்கார வைத்தேன்.

என்னைப் பேச அழைத்த போது பென்னிக்குசு செயராசு படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மெழுகுவத்திச் சுடரேற்றிய பின் பேசினேன். மூன்றாண்டு முன்பு சாத்தான்குளம் கொடுமை தமிழ்நாட்டில் ஏற்படுத்திய அதிர்வுகளை நினைவுகூர்ந்து, பென்னிக்குசு செயராசு குருதித் துளிகளிலிருந்து விளைந்ததே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்று அறிவித்தேன்.

கூட்டியக்கத்தின் இப்போதைய பணிகளை விளக்கி விட்டு, தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் தேவை என்ற கருத்தை வலியுறுத்தினேன்.

எனக்கு முன் பேசிய அன்பர் பிரிட்டோ காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒரு செயல்திட்டத்தை அறிவித்தார். காவல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கண்காணிப்புப் படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? காவல் நிலைய முகப்பில் அது பற்றிய அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதா? என்பதைச் சரிபார்ப்பதுதான் அது.

“இன்று இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணன் தியாகு தலைமையில் நேராகச் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் செல்வோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கத்தைத் தமிழில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளோம். அதை அந்த அதிகாரிகள் கையில் ஒப்படைப்போம். முறையாகக் கண்காணிப்புப் படக் கருவிகள் பொருத்தியுள்ளார்களா என்று பார்த்து விட்டு வருவோம்” என்று பிரிட்டோ சொல்லி விட்டார். நிகழ்ச்சி முடிந்த பின் நான், பிரிட்டோ, சுப. உதயகுமார், பாத்திமா, வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் காவல் நிலையத்துக்குப் புறப்படத் திட்டமிட்டோம். பென்னிக்குசு செயராசு படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மாலை அணிவிக்க வர, நாங்கள் புறப்படுவது தாமதமாயிற்று.

இறுதியில் நாங்கள் கூட்டமாகப் புறப்பட்ட போது காவல்துறை ஆய்வாளரும் மற்றக் காவலர்களும் எங்களை வழிமறித்தனர். “இன்றைய நிகழ்ச்சியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், மற்றதைப் பிறகு பார்க்கலாம்” என்றார் ஆய்வாளர். நடந்து முடிந்த நினைவேந்தல் நிகழ்ச்சி வேறு, நாங்கள் காவல் நிலையத்துக்கு வரும் திட்டம் வேறு என்பதை அவருக்குப் புரிய வைக்கவே முடியவில்லை.
“நாங்கள் கூட்டமாக வரவில்லை, மூன்று நான்கு பேர் மட்டும் வருகிறோம்” என்று பேசிப் பார்த்தோம். முடியவே முடியாது என்றார். “காவல் நிலையத்தைப் பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு. உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” என்று கண்டிப்பாகக் கூறி விட்டு நடக்கத் தொடங்கி விட்டேன்.

நாங்கள் நடந்து போய்ச் சேருவதற்குள் காவல் நிலையத்தில் ஒரு படையையே குவித்து விட்டார்கள். நாங்களும் பின்னடிப்பதாக இல்லை. கடுமையான வாக்குவாதம் நடந்தது. இறுதியில் துணைக்கண்காணிப்பாளர் (பெயர்: அருள்) மட்டும் எங்களைத் தனது அலுவலகத்துக்குள் அழைத்துப் போய் உட்கார வைத்துப் பேசினார். அந்த அலுவலகத்தில் வெளியே அறிவிப்பும் இல்லை, உள்ளே ஒரு கண்காணிப்புப் படக் கருவியும் கூட இல்லை என்பதைக் குறித்துக் கொண்டோம். எங்கள் பணி ஓரளவு முடிந்தது.

ஆனால் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் எங்களைக் காவல் நிலையத்துக்குள் விடவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அவர் சொன்ன ஒரு செய்தி பொருள் பொதிந்தது:

“நாங்கள் யாரையும் அடிக்கறதில்லை ஐயா! அடித்துவிட்டு யார் சிறைக்குப் போவது?”

அவரது இந்தச் சலிப்புத் தொனி… சிக்கல் ஏதுமில்லாமல் கைதியை அடிக்கும் தடையிலா உரிமைக்காக அவர் ஏங்குவதன் வெளிப்பாடுதான்!

வெளியே வந்து ஊடகங்களிடம் நடந்ததைச் சொல்லி முடித்து, பென்னிக்குசு செயராசு இல்லம் சென்று உணவருந்தி விட்டு அம்மா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆறுதல் தந்து விடை பெற்று நெல்லை நோக்கிப் புறப்பட்டோம்.

காலுடுவெல்லின் இடையங்குடி செல்ல இனி நேரமில்லை. நெல்லை சென்று புளியங்குடி விரைய வேண்டும். புளியங்குடி காவல் நிலையத்தில் தங்கச்சாமியின் உயிரிழப்புக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்! பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் ஒரு பக்கம், தங்கச்சாமியின் காவல் சாவுக்கு நீதிகோரும் போராட்டம் மறுபக்கம்! இந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு இந்த வகையில் மாறவே இல்லையா?

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 22
9