தலைப்பு-பதி்வர்களுக்குப் பத்துக் கட்டளைகள் :thalaippu_pathivarkaluuku_10kattalaikal_thiru

வலைத்தளப் பதிவர்களுக்கும் பகிர்வர்களுக்கும் வேண்டுகோள்!

  முகநூல்(Facebook), காணுரை(whats-app), சுட்டுரை(Twitter), வலைப்பூக்கள், கருத்தாடல் குழுக்கள் (மின்னஞ்சல்கள் வழியாகக் குழுக்களுடன் தொடர்பு கொள்ளல்) முதலியனவற்றில்  பதிவு  மேற்கொள்வோரும் பிறரது பதிவுகளைப் பகிர்வோரும் தமக்குத்தாமே கட்டுப்பாடு வகுத்துக்கொண்டு பதிவு அல்லது பகிர்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  1. உண்மையைத் தன்மையை ஆய்ந்து பதிவிடுக!

   பொதுவாகச் செய்திகளை முந்தித் தரவேண்டும் என்ற ஆர்வத்தில், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பதிந்து விடுகின்றோம். சான்றாக யாருக்காவது உடனடியாகக் குருதித் தேவை எனச் செய்தி வரும். உடனே நாம் உதவும் நோக்கில் பிறருக்குப் பகிர்ந்து விடுகின்றோம். அந்தச் செய்தி, சில நாள் அல்லது வாரம் அல்லது  மாதம் அல்லது ஆண்டிற்கு முந்தையதாக இருக்கும். சில நேரங்களில் தேவை முடிந்த செய்தியாகவும் இருக்கலாம். சில நேரங்களில் தேவைக்குரியவர் மறைந்துமிருக்கலாம்.  முடிந்தால்  தகவலில் குறிப்பிட்டுள்ள உரியவருடன் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து அதற்கேற்ப நாம் முடிவெடுக்கலாம்.

  இலவச மருத்துவ உதவி, அறுவை மருத்துவ உதவி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொலைபேசியில் தொடர்புகொண்டால்,  1. முடிந்து விட்டது. 2.  பதிவு வரிசைப்படி,  ஏழெட்டு ஆண்டுகள்  கடந்த பின்னரே உதவி கிடைக்கும். என்பன போன்று மறுமொழிகள் கிடைக்கின்றன. இன்னும் சில நேரங்களில் தரப்பட்ட தொலைபேசி எண்ணில் அழைக்கும் பொழுது மறுமுனையில் எடுப்பாரின்றி இருக்கும் அல்லது    பேசி அணைக்கப்பட்டிருக்கும் அல்லது எண் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் என்ற நிலையே உள்ளது. எனவே, முடிந்தால் தொடர்பு கொண்டு உண்மை எனில் பகிரலாம். இல்லையேல்  உசாவி அறிந்துகொள்க என்னும் குறிப்புரையுடன் பிறருக்கு அனுப்பலாம்.  ஆனால், முதலில் செய்தியைக்காண்பவர் இப்பணியை மேற்கொண்டால் பின்னர் முறைமுறையே பகிரப்போகின்றவர்களுக்குச் சிக்கல் இராது.

   வேலைவாய்ப்புச் செய்திகள் பலவற்றில் மூலத்தளத்தில் சென்று பார்த்தால் இறுதி நாள் அன்றைய நாளாக இருக்கும் அல்லது முடிந்து போய்இருக்கும். சில நேரங்களில் மூலத்தளத்தைத் திறந்து பார்க்க இயலாச் சூழலும் உள்ளது. நாளிதழ்களில் வரும் பல வேலைவாய்ப்புச் செய்திகள் இவற்றிற்கு விலக்கல்ல. எனவே, எதுவாயினும் உரிய தளத்தைப் பார்வையிட்டு விவரம்  சரிதானா? விண்ணப்பிக்கக் கால வாய்ப்புள்ளதா? எனப்பார்த்தபின் பதிவதே உண்மையான உதவியாய் அமையும் என்பதை எந்நாளும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  1. தேவை முடிந்ததும் தெரிவித்திடுக!

   ஆளையோ பொருளையோ காணவில்லை என அறிவித்து உதவி வேண்டுநர், உரிய பொருளையோ ஆளையோ கண்டறிந்தால் தெரிவிப்பதில்லை. முதலில் குறிப்பிட்டதுபோல்,  வலைத்தளங்களில் இச்செய்தி உலவிக் கொண்டிருக்கும். எனவே, பொருளுதவி, வேலையுதவி, மருத்துவ உதவி. அல்லது வேறு உதவி வேண்டும் எவ்வறிவிப்புச் செய்தியாயினும் முதலில்  அச்செய்தியைப் பதிந்தவர்,  தேவை முடிந்ததும் அல்லது இனி உதவி தேவையில்லை என்ற நிலை வந்ததும் அதனையும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். தொடர்பான முதல் பதிவை நீக்குவதும் சிறப்பு. இத்தகைய செய்தியைப் பொழுதுபோக்காகப் படித்து விட்டு அகன்றுவிடுவர் எனக் கருதினால் இது போன்ற செய்திகளையே வெளியிட வேண்டாவே! எனவே, உதவ முயலு்வதும் ஒருவகையில் தொல்லைக்கு ஆளாக்குவது என்பதை உணர்ந்து பதிவின் முடிவு நிலையைக் குறிப்பிட வேண்டும்.

  1. விருப்பம் தெரிவிக்குமாறு வலியுறுத்தும் குறிப்புகள் வேண்டா!

  “விருப்பத்தைக் கட்டாயமாகத் தெரிவியுங்கள்”, “கட்டாயமாகப் பகிருங்கள்” என்றெல்லாம் வேண்டுகோள் குறிப்புகள் எழுதுகின்றனர்.  விருப்பம் தெரிவிப்பதும் பகிர்வதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயப்படுத்தக் கூடாது. அத்துடன் குறிப்பு நின்றால் பரவாயில்லை. ‘இந்தியனாக இருந்தால் விருப்பம் தெரிவி’, ‘உண்மைத் தமிழர்கள் விருப்பம் தெரிவியுங்கள்’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இக் குறிப்புகளைப் பார்த்ததும் விருப்பம் தெரிவிக்க அல்லது பகிர விரும்புபவர்களும் அமைதியாக இருந்து விடுகின்றனர். அடுத்தவர் இந்தியனா அல்லது தமிழனா எனக் காண்பது பதிவர்களின் வேலையில்லை. உண்மையில் ஒத்த உணர்வுகளிருப்பின் அவர்களாகவே பிறருக்குப் பகிர்வர் அல்லது விருப்பத்தைத் தெரிவிப்பர்.

 4.பகிர்ந்தால் பயன் கிடைக்கும் என்பதுபோன்றவற்றை அடியோடு புறக்கணிப்பீர்!

  முன்பெல்லாம் அஞ்சலில் ‘இதனை உடனே இத்தனை பேருக்குப் படி எடுத்தனுப்பினால் இந்த நன்மை கிடைக்கும்’,  ‘இத்தனை முறை எழுதினால் இன்ன நன்மை கிடைக்கும்’, ‘இத்தனை நாளுக்குள்   இதில்  சொல்லியவாறு செய்தால் இத்தனை நாளுக்குள் இன்னின்ன கிடைக்கும்’ என்றெல்லாம் பொய்த்தகவல்கள் வரும். இதை நம்பும் மூடத்தனம் பலரிடம் இன்னும் உள்ளதால் முகநூல் முதலான தளங்களில் இத்தகைய செய்திகள் வருகின்றன. இந்தப் படத்தைப் பகிர்ந்தால் உடனே நன்மை கிடைப்பதுபோல் மூடத்தனைத்ததை விதைக்கின்றனர். இன்னும் ஒரு படிமேலே போய் ‘இதனைப் பகிராவிட்டால் அல்லது  சொடுக்கிப் பார்க்காவிட்டால் இன்ன தீமை வரும்’ என்றெல்லாம் அனுப்புகின்றனர். அவ்வாறு பதிவோர் இத்தகைய மூடத்தனத்தை மூட்டைக்கட்டி வைக்க வேண்டும். அப்படியே சிலர் அனுப்பினாலும், நாம் அதனைப் பிறருக்குப் பகிரும்  அறியாமையுடன் திகழக்கூடாது. சிலர், “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.  ஆனால்,  இவ்வாறு செய்வதால் நமக்கு  இழப்பு எதுவுமில்லையே! இவ்வாறு செய்து ஒருவேளை நன்மை கிடைத்தால் நல்லதுதானே” எனக் கூறுவர். இத்தகைய மனப்பான்மை உள்ளவர்களால்தான் இத்தகைய செய்திகள் வருகின்றன. எனவே, ஒரு செய்தியை அல்லது படத்தைப் பார்ப்பதாலோ பகிர்வதாலோ  பயன் கிடைக்கும் என்பன போன்ற மூடச் செய்திகளை ஊக்கப்படுத்த வேண்டா.

  1. பொழுதைக் குறிப்பிடும் / நேரத்திற்கேற்ற  வணக்கம்  தேவையில்லை!

  காலை வணக்கம், மாலை வணக்கம் என்றெல்லாம் மிகுதியான பதிவுகள் உள்ளன. ஆங்கில வழக்கத்தைத் தமிழ்ப்படுத்தி இவ்வாறு கூறுகின்றனர். தமிழ் மரபின்படி எல்லா நேரமும் வணக்கம், வணக்கம், வணக்கம்தான்.  இப்பொழுது ஞாயிற்றுக் கிழமை வணக்கம், திங்கள்கிழமை வணக்கம், செவ்வாய்க் கிழமை வணக்கம் என்பனபோல், கிழமையைக் குறிப்பிட்டும்  காலை 10.00 மணி வணக்கம் என்பதுபோல், அப்போதைய நேரத்தைக் குறிப்பிட்டும்  வணக்கத்தைத்   தெரிவிக்கின்றனர். அடுத்து 10.10  மணி வணக்கம் என்பது போன்றும் அதன்பின்னர் 10.10.05மணி வணக்கம் என்பது போன்றும் தெரிவிப்பார்கள் போலும்! நல்ல காலை(யாக அமையட்டும்),  நல்ல மாலை(யாகஅமையட்டும்)  என்னும் ஆங்கில முறை வாழ்த்துவது. பெரியோர் சிறியோருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அடுத்தவரை வணங்கும் தமிழ் முறையே பண்பாடானது. எனவே, வணக்கம் மட்டும் தெரிவித்தால் போதுமானது.

  1. பண்பாடான சொல்லாடல்களையே பயன்படுத்துக!

  சிலர் நல்ல கருத்துகளைப் பதிந்து வி்ட்டு இடையிடையே நாக்கூசும் சொற்களை அல்லது தொடர்களைப் பயன்படுத்துகின்றனர். கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால் நரகல் நடையைக் கைவிடவேண்டும். இதனால் பெருமை எதுவும் விளையப் போவதில்லை. மாறாக, இழிபெயர்தான் ஏற்படும். எனவே, பதிவில் பண்பாடு காக்க வேண்டும். சிலர் மாற்றுக்கட்சித்தலைவர்களைக் கண்டபடி சித்திரித்துப் படங்களும் போடுகின்றனர். இத்தகைய  படங்களால் அவ்வாறு பதியுநர் பண்பாடின்மைதான் வெளிப்படுமே தவிர, படத்திலுள்ளவர்க்கு ஒன்றும் இழுக்கு இல்லை என்பதை உணரவேண்டும். கருத்தை நல்ல கருத்தால்தான் வெல்ல  வேண்டும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 645)

என்பதை அறிந்து, பிறரை  வெல்ல பண்பாடான சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும். நரகலுக்கு எதிர் நரகல் நடை எனத் தடம் மாறக்கூடாது.

 7.படைப்புத் திருட்டு வேண்டவே வேண்டா!

   சிலர் அடுத்தவர் பதிவுகளைத் தம் பதிவுபோல் பதிகின்றனர். மூலப்பதிவர் பெயரைக்  குறிப்பிட்டுப் பதிவதுதான் நாணயமான  செயல். எனவே, பதிவுகளை மேலனுப்பாமல், தாமே எழுதியதுபோல் அனுப்பும் குற்றச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும்.

பிறரது கட்டுரைகளைத் தம் பெயரில் வெளியிடுகின்றனர் சிலர். அதனைப் படிக்கும் பிறர் அவரது கட்டுரை என எண்ணி அவ்வாறே பகிர்கின்றனர். பின்னர் உண்மையான படைப்பாளர் இவரது கருத்தைத் திருடியதுபோல் ஆகி விடுகின்றது.  படைப்பின்  கீழே எழுதியவர் பெயர், வந்தத் தளத்தின் பெயர் ஆகியவற்றைக் குறித்தால் போதுமே!

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல் (திருவள்ளுவர், திருக்குறள் 282)

படைப்புத்திருட்டுக்கும் சேர்த்துத்தான்.

 எனவே பதியும் பொழுது, உரியவர் பெயரையும்  வந்த இதழ் அல்லது தளம் எனத் தரவு  மூலத்தையும் குறிப்பிட்டு இயலு மெனில் நம் கருத்தையும் பதிவதே முறையாகும் என்பதை அனைவரும் உள்ளத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 8.மேற்கோளைச் சரியாகக் குறிப்பிடுக!

    பாடல் வரிகளை அல்லது கட்டுரைக் கருத்துகளை மேற்கோளாகக் கூறுவோர் உரியவர் பெயரைக் குறிப்பிடாமல் தாம் யாருடைய பாடல் அல்லது கட்டுரை எனக் கருதுகிறார்களோ அவர்கள் பெயரையே குறிப்பிடுகின்றனர். சான்றாகத், “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாடியவர் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை). ஆனால் பாரதியார் படத்துடன் அவர் சொன்னதுபோல் இணையத் தளங்களிலே உலாவருகின்றது. அதுபோல் படங்களைத் தவறாக இடுகின்றனர். பாரதிதாசன் படத்திற்குப் பாரதியார் படத்தைப் போடுவதன் மூலம் பாரதியையும் அறிந்திருக்கவில்லை, பாரதிதாசனையும் அறிந்திருக்க வில்லை என்பதை உணர்த்துகிறார்கள். நாம் பதியும் செய்தியைத் தவறென எண்ணாமல் அப்படியே பிறர் பகிர்வதால் தவறான கருத்துகள் நிலைத்துவிடுகின்றன. அதன் பின்னர், சரியானவற்றைத் தவறென்றும்  தவறானவற்றைச் சரியென்றும் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிடுகின்றது. எனவே, மேற்கோள்களைக் குறிப்பிடுகையில் சரிபார்த்துக்கொண்டு குறிப்பதே  முறையாகும்.

  1. அறிமுகக் குறிப்பு தாருங்கள்!

  அருந்திறல் ஆற்றியவர் பற்றிய செய்தியைப் பகிரும்பொழுது யார், எவர் என்ற விவரம் இல்லாமல். இன்னசெய்த இவரைப் பாராட்டுங்கள் அல்லது இதில் இன்ன பரிசைப்பெற்ற இவரை வாழ்த்துங்கள் என்று பல செய்திகள் வருகின்றன. உண்மையிலேயே மனப்பூர்வமாகப் பாராட்டப்படவேண்டியவர்கள் பெயர், கல்வி நிறுவனம் அல்லது பிற  விவரம் இருந்தால்தானே உளமாரப் பாராட்ட இயலும். எனவே, பாராட்டுக்ககுரியவர்கள் விவரங்களை இணைத்துப் பதிவதே உண்மையான பாராட்டாகும் என்பதை உணர வேண்டும்.

  சிலர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கான வாழ்த்துச்செய்தி  அல்லது பாராட்டுச் செய்தியைப் பதிகின்றார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் பிறருக்குத் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், பெயர்களையே குறிப்பிடாமல் அடைமொழிகளாகக் குறிப்பிட்டு பாராட்டு  மழை பொழிகிறார்கள். அவர் யாரெனக்  குறிப்பிடப்பட்டால்தானே பிறரும் அவரைப்பற்றி அறிவர். தனிப்பட்ட முறையில் பாராட்டுவதாக இருப்பின் அவரது தளத்தில் சென்ற பதியலாமே! நீங்கள் இந்திரன், சந்தி்ரன் என்றெல்லாம் குறிப்பிடப்படுபவரைப் பிறரும் அறிய வாய்ப்புதாருங்களேன். எனவே, யாரைப்பற்றியும் குறிப்பிடுவதாக இருந்தால்,  – அவர் நன்கறியப்பட்ட எனக் கருதினாலும்- அறிமுகக் குறிப்பு தாருங்கள். அதுதான் பதிவின் நோக்கத்தை நிறைவேற்றும்.

  1. மொழித்தூய்மையைப்பேண வேண்டும்!

  பலர், பிற மொழிச்சொற்களைத் தங்குதடையின்றிக் கலந்து பயன்படுத்துகின்றனர். இத்தகைய தவறுகளால்தான் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஆட்சி செலுத்தவேண்டிய தமிழ், தன் அகண்ட நிலப்பரப்பையும் இழந்து, குறுகிய பரப்பினுள்ளும் ஆள முடியாமல் தவிக்கின்றது. நாம் மேலும் இத் தவறுகளைச் செய்து நம் மொழிப்பரப்பை மேலும் குறுக்கவேண்டுமா? இன்னும் சிலர் விருப்பத்தைத் தெரிவியுங்கள், பகிருங்கள் என வேண்டுகோள் விடுப்பதற்கு, ‘லைக் பண்ணுங்கள்’, ‘லைக்கிடுங்கள்’, என்பன போன்று குறிக்கின்றனர். கருத்தாடல் குழுக்களில் நன்கு தமிழ் கற்றவர்களே, கொச்சை வழக்கையும் கிரந்த வழக்கையும் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதித் தமிழப்பயன்பாட்டைச் சிதைக்கிறார்கள். கருத்துப் பரவல் மூலம் தொண்டாற்றக் கருதுவோர் மொழிக்கொலைஞர்கள் என்ற  இழிபெயர் வாங்க வேண்டுமா? “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்” என்றார் பாரதியார். அத்தகைய உயர்ந்த சொற்களைப் பயன்படுத்த வேண்டிய நாம்இழிந்த நடையைப் பின்பற்றலாமா? “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனப் பாரதிதாசன் முழஙகிய வரியை நாம் கூறுகிறோமே தவிர, நாம் நம் நற்றமிழைத் தலையின் இழிந்த மயிராகத்தானே கருதுகிறோம். வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய செயலல்லா இது? நம் அன்னையை நாம்தானே போற்ற வேண்டும்! நம் அன்னை மொழியையும் நாம்தானே போற்ற வேண்டும்! மொழியை இழந்தால் வாழ்வை இழப்போம் எனத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வரலாற்று அடிப்படையில் கூறிய பொன்மொழியை நாம் என்றும் மறவாமல் வாழ வேண்டுமல்லவா? பதிவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்கள் மேலும் சில இருப்பினும் எல்லாவற்றிலும் தலையானதாக மொழித்தூய்மையைப்பேண வேண்டும்.

எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

என்பதையே நம் இலக்காகக் கொள்ள வேண்டும்!

  மேற்குறித்தவற்றை நினைவில் கொண்டு பாரெங்கும்   பைந்தமிழ் பரவும் வகையில்  பதிவுகளை மேற்கோள்வோம்! பயனுறுவோம்!

தலைப்பு.10 கட்டளைகள்02 : thalaippu_10kattalaikal02_thiru

 – இலக்குவனார் திருவள்ளுவன்

thiruvalluvan