52thamizh

  உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே.

  தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே.

  தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தானான தனித்தமிழன்றே!

  தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர் சீரூர் ஆரூர் பேரூர் புற்றூர் சேய்ஞ்ஞலூர் மணலி நெல்லூர் நெல்லை கொன்னூர் குறட்டூர் என்னும் ஊர்கள் பலப்பல தமிழ்மொழியே புனைந்தன.

  ஞாயிறும் திங்களும் செவ்வாய் வியாழனும் வெள்ளியும் ஆகின்ற கிழமைகட்குத் தமிழ்ப்பெயரே பெயர்.

  தொண்ணூற் றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களின் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை.

  ஆழாக்கு உழக்கு நாழி குறுணி பதக்கு தூணி கலன் என்னும் முகத்தலளவையும்.

  சாண் அடி முழம் என்னும் நீட்டல் அளவையும்,

  பலம் வீசை மணங்கு என்னும் எடுத்தலளவையும்,

  இன்னும் கீழ்வாய் இலக்கமும் மேல் வாய் இலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.

  தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும் காயும் கறியும் பாலும் பழமும் நெய்யும் தயிரும் உப்பு முதல் ஒன்பதும் பருப்பு முதல் பத்தும் தமிழ்ச்சுவையே உடையனவாய்த் தமிழ் மணமே வீசுகின்றன.

  தமிழர்கள் செவிக் கொள்ளும் உணவான எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் ஆகிய ஏடும் சுவடியும் எடுத்துப் பார்க்கும் இடமெல்லாம் தமிழாகவே இருக்கின்றன.

  இவர்களுடைய துணியும் அணியும் தமிழே!

  இவர்கள் தொழும் கடவுளும் தமிழ் மயமே!

தமிழர்களுடைய வீடும் நாடும் காடும் மேடும் எங்கும் புகுந்து பார்த்த இடமெல்லாம் தமிழ் தமிழாகவே இருக்கின்றன.

திருமணம் செல்வக் கேசவராயர்