பாவேந்தரும் பொதுவுடைமையும்

1/4

  உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன.

தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர் என்று தொடங்கி திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து விரிந்து செல்லும் இயல்புடையன.

  தமிழ், தமிழர், திராவிடம் எனத் தமிழ்த் தேசியம் பாடும் பாவேந்தரின் கவிதைகள் இந்தியையும் வடக்கையும் ஆரியத்தையும் மூர்க்கமாகச் சாடும் இயல்புடையன என்றாலும் அவர்  குறுகிய கண்ணோட்டம் உடையவரல்லர். உலகப் பொது நோக்கமே பாவேந்தரின் உயர்ந்த குறிக்கோள். தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன்… என்று சாடும் கவிஞர், தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம் தொல்லுலக மக்கள் எலாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் என்று விசாலப் பார்வையால் மக்களை விழுங்குகின்றார்.

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!

என்று முழங்கும் பாவேந்தருக்கு, உடைமை மக்களுக்குப் பொது என்பதும் புவியைப் பொதுவில் நடத்த வேண்டும் என்பதும்தான் கனவு, இலட்சியம் எல்லாமே.

    உலகு தழுவிய மானிடத்தின் மேன்மையே பாவேந்தர் காண விரும்பிய முன்னேற்றம். அதுவும் சமத்துவத்தின் உச்சியில் நிற்கும் மானிடமே ஆற்றல் வாய்ந்தது என்பது அவர்கொள்கை, மானிடம் என்பது குன்று- தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று, மானிடருக்கு இனிதாக.. வாழ்வின் வல்லமை மானிடத் தன்மை என்று தேர் இது கவிஞரின் வாக்கு.

   மானிடத்தை நேசிக்கும் கவிஞன், மனிதனுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பானா? பாவேந்தரைப் பொருத்தமட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலமே மனிதக்குமுகத்தின்(சமூகத்தின்) நலம். தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் எங்கே வாழும் மனிதனாக இருந்தாலும் எளியோர் துன்புறுதலைக் காணச் சகிக்காதவர் பாவேந்தர். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? என்று கோபப்படும் கவிஞர், கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே  என்று அதற்குத் தீர்வு காணவும் புறப்படுகிறார்.

பாவேந்தரின் கவிதை நெடுகிலும் உழைக்கும் மக்களின் அவலம் விரிவாகப் பேசப்படுகிறது. தொழிலாளர், உழவர் போன்ற உடலுழைப்புப் பணியாளர்களின் துயரமே பாவேந்தரைப் பெரிதும் வாட்டுகிறது. உழைப்பவரின் மேன்மைகளைப் புகழ்ந்தும் உழைக்காதவர்களின் கீழ்மையைச் சாடியும் தம் கவிதைகளைப் படைக்கிறார். நடவுசெய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பிலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுளின் ஏற்பாடு என்றால் அந்தக் கடவுளையே விட்டொழிக்க வேண்டும் என்கிறார். மண்மீதில் உழைப்போர் எல்லாம் வறியராக இருப்பதும் உரிமை கேட்கும் மக்கள் துன்புறுத்தப்படுவதையும் கண்டு வேதனைகொள்கிறார்.

சித்திரச் சோலைகளே, உமைத்திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்றும் அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி அழகியதாய் வசதியதாய் செய்து தந்தவர்கள் உழைப்பாளர்களே என்றும் உழைப்பின் மேன்மையை, உழைப்பாளரின் மேன்மையை பலபடப் புகழ்ந்து பேசுகின்றார்.

(தொடரும்)

முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி – 8.