(பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – தொடர்ச்சி)

பாவேந்தரும் பொதுவுடைமையும்

4/4

1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களைக் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்ற பெயரிலும் ‘மணிமேகலை வெண்பா’ என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார்.

 இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும்
கட்சித் தலைவர் என்று கழறும்
ஆட்கள் தாமும் அறங்கொல் பவரே!
தமிழ கத்தின் தலைவர் என்பர்
தமிழைச் சாக டிக்கப் பின்னிடார்,
தமிழ்க்கொலை பார்க்கத் தாளம் போடுவர்
பொழுது விடிந்து போழுது போனால்
காசு பறிப்பதே கடனாய்க் கொள்வர்!

என்று தாம் அரசியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தையும் கசப்போடு வெளிப்படுத்துகின்றார் பாவேந்தர். பாவேந்தர் குற்றம் சாட்டும் கட்சிகள் எவை? தலைவர்கள் எவர்? என்பனவெல்லாம் வரலாறு அறியும்.

இத்தகு சூழலில் பாவேந்தரும், தி.மு.க.வும் வேறு வேறு காரணங்களுக்காக திராவிடத் தனிநாடு முழக்கத்தைக் கைவிடுகின்றனர்.

1962 மே மாதம் பம்பாயில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட பாவேந்தர் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கவிதை வழங்குகின்றார். இமயச் சாரலில் ஒருவன் இருமினான், குமரிவாழ்வான் மருந்து கொண்டோடினான் என்ற அடிகள் இக்கவியரங்கில் ஒலித்தவைதாம். 1963 ஆம் ஆண்டு நவம்பர் 3 இல் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு ‘திராவிட நாடு தனிநாடு’ முழக்கத்தைக் கைவிடுவதாக அறிவிக்கின்றது.

பாவேந்தரைப் பொருத்தவரையில் 1960 முதல் 64 வரையிலான (பாவேந்தரின் கடைசிக் காலங்கள்) ஆண்டுகள் பலவகையிலும் அவருக்கு நெருக்கடியான காலம். பாவேந்தரின் திரைப்பட முயற்சியின் தோல்வி, திராவிட இயக்கங்களுடனான மோதல் போக்கு, பொதுவுடைமை இயக்கத்தினருடனான பிணக்கு எனப் பாவேந்தர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். இந்தச் சூழலில் பாவேந்தர் எழுதிய ‘பொதுவுடைமைக்குப் பகைவனா? நான்’, என்ற கவிதை அதிக முதன்மை பெறுறகின்றது.

பொது வுடைமைக்குப் பகைவனா? நான்?
பொதுவுடைமைக் காரர் எனக்குப் பகைவரா?
இல்லவே இல்லை, இரண்டும் சரியில்லை.

பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத் தீ
என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து
கொழுந்துவிட் டெரிந்து தொழிலாள ரிடத்தும்
உழைப்பாள ரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில்
மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரோ?

சிங்கார வேலர் முதல் சீவா வரையில்
அங்காந் திடுவர் என் பாட்டினுக்கே
சுப்பையாவின் தொடர்பும் தோழமையும்
எசு.ஆர்.சுப்பிர மணியம் இணைப்பும் பிணைப்பும்
எப்பொழுதும் எனை லெனினால் சுடாலினால்
புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை
மதுத் தமிழாலே மடுக்கும் என்பாட்டு
 

  பொதுவுடைமைக்கும் தமக்கும் உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் இந்தக் கவிதை ஒரு வரலாற்று ஆவணம். இந்தப் பாடலின் பின்பகுதியில் பொதுவுடைமை இயக்கத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளைப் பாவேந்தர் அள்ளி வீசுகிறார். கவிஞரின் கோபக்கனலில் வந்து வீழ்ந்த வார்த்தைகள் அவை. சிங்கார வேலர், சீவா, சுப்பையா இவர்கள் மீது பாவேந்தர் எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருந்தார் என்பதும், என் இயக்கம் பொதுவுடைமை இயக்கம்தான் என்பதை எத்துணை அழுத்தமானக் கவிஞர் பதிவுசெய்கிறார் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை..

 1963 சனவரி 18 சீவா மறைவுக்குப் பாவேந்தர் வடித்த கவிதையே அவரின் கடைசிக் கவிதை என்ற சீவபாரதி அவர்களின் கூற்றும் இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.

    தம் உலகு தழுவிய பார்வையால் மானிடத்தின் மகத்துவத்தைப் பாடி சமத்துவக் குமுகாயம் காணத் துடித்த பாவேந்தர் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காத ஒரே தத்துவம் மார்க்சீயமே என்பதில் ஏதும் ஐயமில்லை.

முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி – 8.

http://nagailango.weebly.com/298630062997301529843021298029923021.html