(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி)

thalaippu_valaimachorkal

3

ஆ.) பொதியம் -Packet

பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப்  பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம்.

பொதியம் – Packet

பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission

மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. –

High-Speed Down-link Packet Access / HSDPA

 

இ.) ஆவளி – Sequence

 array, order, queue, row, tier, ordinal, sequence என எல்லாமே வரிசை என்றே குறிக்கப்படுகின்றன. எனவே, வேறு தனிச்சொல்லைக் குறிப்பதே பொருத்தமாக இருக்கும்.

 தீபங்கள் வரிசையாக அடுக்கப்படுவதைத் தீபாவளி என்றும் பட்டம்பெற்ற குருமாரின் தலைமுறை வரிசையைப் பட்டாவளி என்றும் வரிசை என்பதைக் குறிக்கும் ஆவளி என்னும் சொல்லை இணைத்துக்குறிக்கின்றனர். எனவே, இந்த இடத்தில் வரிசை என்பதற்கு மாற்றாக ஆவளி எனக் குறிக்கலாம்.

பொதிய ஆவளி எண் – Packet Sequence Number

 

ஈ.) ஒற்றி -sniffing

  முகர்வு, மோப்பம்பிடித்தல் என sniffing என்பதைக் குறிப்பிடுகின்றர். இவ்வாறு நேர் பொருளில் குறிப்பதைவிடக் கணிணிக்குப் பொருத்தமான சொல்லைக் குறிப்பதே சிறப்பாகும்.அனைத்து விவரங்களையும் ஒற்றி எடுத்தல் என்னும் பொருளில் ஒற்றி எனலாம். மோப்பம் பிடிப்பதும் தடத்தை ஒற்றி அறியத்தானே!

ஒற்றி– Sniffing

பொதியஒற்றி – Packet Sniffing

உ.) ஓம்பி – host

ஃகோசுட் கம்ப்பியூட்டர்/ host computer என்பதற்கு விருந்துக் கணினி/ஏற்புக் கணினி எனத் தவறாகக் குறிக்கின்றனர். தருகணிணியை ஏற்புக் கணிணி என்பது தவறல்லவா? பிற அறிவியல் துறைகளில் ஃகோசுட்/host என்பதற்கு ஓம்புயிரி, ஓம்பி, விருந்து ஓம்புநர், புரவன், ஓம்புநன், தருநர் என்கின்றனர். ஓம்பி என்பதையே பொதுச் சொல்லாக எடுத்துக் கொண்டு இத்துறையிலும் கையாளலாம். எனவே, ஓம்பிக்கணிணி (host computer) எனலாம்.

ஓம்பிக்கணிணி – host computer

ஊ.) கோரி/கோருநர் – client

கிளையண்ட்டு /client என்பதற்கு வாடிக்கையாளர், கட்சிக்காரர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. இவற்றுக்கு முறையே customer, partyman   ஆகிய  சொற்கள் உள்ளன.  பொதுவாக ஒரு பணியை முடித்துத் தருமாறு கோருபவரே கிளையண்ட் எனப்படுகிறார்.  எனவே, கோருநர் என்பதே சரியாக இருக்கும். அஃறிணையில் கோரி எனல் வேண்டும்.

கோரி/கோருநர்– client

வலைமக் கோரி- network client

எ.) விளம்பி / விளம்புநர்- server

  அதுபோல் server என்பதற்கு உயர்திணையில் விளம்புநர் என்றும் அஃறிணையில் விளம்பி என்றும் சொல்வது பொருத்தமாக அமையும். நான், பல ஆண்டுகளுக்கு முன்பு கணிணி மொழியை விளம்பி எனச் சொல்லாம் என எழுதியிருந்தேன்.  மனிதர்களால் மொழியப்படுவதுதான் மொழி எனவே, கணிணிக்கு இது பொருந்தாது எனக் கருதியிருந்தேன். ஆனால், கணிணி மொழி என்பது பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. ஆதலின் விளம்பி என்ற சொல் செர்வர்  என்பதற்கு மட்டும் பொருந்தும் எனக் கருதலாம்.

விளம்பி/ விளம்புநர் – server

கோரி–விளம்பி வலைமம் – client–server network

(வலை விரியும்)

-இலக்குவனார் திருவள்ளுவன்