79. பிராமணர்கள் அனைவரும் சனாதனவாதிகள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 76-78 தொடர்ச்சி)
- சனாதனம் – பொய்யும் மெய்யும் 79
- பிராமணர்கள் அனைவரும் சனாதனவாதிகள் என்கிறார்களே!
- பிற சாதியினருள்ளும் சனாதனவாதிகள் இருக்கிறார்கள். பிராமணர்களுள்ளும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள். பிராமணர்கள் சிலரின் சாதி வெறியும் பாகுபாட்டு உணர்வும் ஒட்டு மொத்தக் குலத்திற்கும் எதிர்ப்பாக மக்களை எண்ண வைக்கிறது. பிராமணர்களை உயர்த்திச் சொல்லும் பேச்சும் அவர்களுக்கு எதிரான வெறுப்பை உண்டாக்குகிறது. சான்றாகப் பிராமணர்கள் மக்களின் பாவ மூட்டைகளைச் சுமப்பதற்காகத்தான் கோவிலில் தட்டேந்துகிறார்கள் என்ற பின் வரும் பேச்சைப் பாருங்கள்.
“மக்கள் தங்கள் பாவத்துக்குக் கழுவாயாகவோ (பிராயச்சித்தமாகவோ) தனக்கு நன்மை வர வேண்டும் என்றோ தெய்வத்துக்குத் தர வேண்டும் என்பதற்கோ, கோயில் தட்டில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளும் பிராமணன், மக்களுடைய பாவத்தை வாங்கிக் கொள்கிறான். அவன் செய்யும், பூசை, தெய்வத் தொண்டு ஆகியவற்றின் மூலம், அவன் தானமாக வாங்கிக் கொள்ளும் காணிக்கை, மக்களது பாவத்தைப் போக்க உதவுகிறது. அவர்கள் வாங்கிக் கொள்வதை நிறுத்தி விட்டால், மக்களது பாவ மூட்டையை மக்களே சுமக்க வேண்டும். கோயிலில் என்று மட்டுமல்ல, வெளியிலும் தானத்தை ஏற்கக் கூடிய, விவரம் தெரிந்த தகுதியான பிராமணர்கள், இன்றைய காலக்கட்டத்தில் தானம் ஏற்பதில்லை என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். இதனால் இழப்பு பிராமணர்களுக்கு அல்ல. பாவத்தைச் செய்யும் மக்களுக்கே. –17.09.2023இல் நடைபெற்ற ‘சனாதனத் தமிழர் சங்கமத்தில் செயசிரீ சாரநாதன் கூறியுள்ளார். (அவர் பெயரிலுள்ள வலைப்பூவிலிருந்து)
பிராமணனுக்கு நாம் இடுவது பிச்சையாக இருந்தாலும் காணிக்கையாக இருந்தாலும் அதனை அவன் ஏற்பதன் மூலம் நம் பாவத்தை ஏற்ற அவன் ஈகி – தியாகி யாகிறான் என மூளைச்சலவை செய்வதைப் பாருங்கள்.
ஒன்றிய அமைச்சர் நிருமலா சீதாராமன் “கோயில் உண்டியலில் பணத்தைப் போடாதே! அருச்சகர் தட்டில் போடு!” என்பதும் இதனடிப்படையில்தான்.
கோவில்களில் பணம் அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு ஒரு வகையாகவும் மற்றவர்களுக்குப் பாராமுகமாகவும் நடந்து கொள்வதாலும், பிறருக்குத் திருநீறு, குங்குமம் ஆகியவற்றை எறிவதுபோல் வழங்குவதாலும் வெறுப்பில் உள்ள மக்களுக்கு இத்தகைய பேச்சு சினத்தையும் வெறுப்பையும் தருகிறது. பிராமணீயம் எனப்படுவது சனாதனம் ஆக இருப்பதால் இத்தகையோரின் பேச்சும் செயலும் பிராமணர் அனைவரையுமே சானதனவாதிகளாக எண்ணச் செய்கிறது.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
- சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 104-106
Leave a Reply