(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி)

  1. 4.1.2023 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடி வட்டம் ஆதனூரில் இவ்வூரில் பிறந்த  நந்தனார் குருபூசை நிகழ்ச்சி நடந்தது. இங்குதான் ஆளுநர் இரா.ந.இரவி 100 பட்டிலினத்தவருக்குப் பூணூல் அணிவித்துள்ளார். நந்தனாரைத் தீயில் இறக்கி அதன் மூலம் அவர் புனிதமானதாகச் சனாதனவாதிகள் கூறுவதுபோல், பட்டியலின மக்கள் பூணூல் அணிந்ததால் புனிதமானதாகச் சனாதனவாதி ஆளுநர் இரா.ந.இரவி கூறுகிறார். அவரே தன்னைச் சனாதனவாதி என்று கூறுவதால் இவ்வாறு கூறுவது இழித்துரைப்பதாகாது. இதுதான் அனைவரையும் சமமாகக் கருதும் சனாதனம் என்கிறார். பூணூல் அணிவதால் உயர்வடையலாம் எனக் கூறுவதுதான் சனாதனம். பூணூல் அணிவித்ததன் மூலம் பட்டியிலினத்தவரை மோட்சம் அடைய வைத்ததாகவும் சனாதனவாதிகள் கூறுகின்றனராம். இதன் மூலம் பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்னும் சனாதனத்தை வலியுறுத்துகிறார் அவர்.

பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்னும் பாரதியார் சாதி வெறியில் இவற்றைச் செய்யவில்லை. பிராமணன் மட்டும்தான் பூணூல் போட வேண்டுமா? எல்லாரும் போடலாம் எனக் கூறுவதற்காக உணர்ச்சி வயப்பட்டு செய்த செயல் இது. எனினும் பூணூல் அணிந்தவன் உயர்ந்தவன் என்பது இழிவை உயர்த்தும் சனாதனம் ஆகும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  “பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதருமத்தின் பேதத்தினை ஆளுநர் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா? ” என்கிறார்.

அமைச்சர் பொன்முடி, “பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார். இதற்கு ஏன் ஆளுநர்” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“நந்தனார், கோயிலுக்குச் சென்றதால்தான் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் மூடப்பட்டுக் கிடக்கிறது. இன்றும் தெற்கு வாசல் திறக்கப்படாமல் உள்ளது. பூணூல் அணிவிக்கப்பட்ட 100 பழங்குடியினரையும் அந்த வாசல் வழியாக ஆளுநர் உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாமே” என்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம். இதன் மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர்களைக் கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வி.சி.க.வைச்சேர்ந்த  சிந்தனைச் செல்வன், “புராணங்களில் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் செயல்படுத்திக் காட்டுவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவரும் தீயில் விழுந்து எழுந்து புனிதமடையவில்லை. நந்தன் மட்டும் நெருப்பில் விழுந்து எழுந்ததால்தான் புனிதமடைகிறார், அவருக்குப் பூணூல் அணிவிக்கப்படுகிறது என்று கூறி, இப்போதும் அதைச் செய்தால் எப்படி ஏற்க முடியும்?” என்கிறார்

“பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா?” என்கிறார் தோழர் மருது.

இவ்வாறு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவை யாவும் மக்கள் குரலே.

ஆனால், பிராமணர்களை மட்டும் உயர்த்துவதை மறைக்கும் வகையாகப் “பிராமணத்துவம் பிறப்பினால் வருவது அல்ல, ஒழுக்கத்தினால் வருவது.” எனப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சொல்வதன் மூலம் பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் உயர்ந்து அந்நிலை அடைந்தார்கள் என்று மாயையையும் உருவாக்குகிறார்கள். எல்லா ஒழுக்கவான்களும் பிராமணர்கள் என்றால் பிற வருணத்தார் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதானே பொருள்.

  • (தொடரும்)