87 & 88 சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 87 & 88
சனாதனத்தை இறை ஏற்பாளர்களும் எதிர்க்கிறார்கள். இறை மறுப்பாளர்களும் எதிர்க்கிறார்கள். எனவே, கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. பொதுவாகக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள்; தன்மதிப்பும் தன்மானஉணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சனாதனத்தை எதிர்ப்பது இயற்கை. அதற்காக இறை மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்ப்பதாகக் கருதுவது தவறே. இறையன்பர்கள் பலரும் தாங்கள் இல்லாத மேற்சாதியால் ஒடுக்கப்படுவதாகவும் இழிவுபடுத்தப் படுவதாகவும் உணர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே இறையன்பர்கள் இறைவனின் அருள் அனைவருக்கும் சமமாகக் கிட்ட வேண்டும், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கோவில் நுழைவுரிமையோ சம வழிபாடோ மறுக்கப்படக் கூடாது, கோவில் பூசாரிகள் திருநீறு, குங்குமம் தருவதில் அலட்சியமோ புறக்கணிப்போ காட்டக் கூடாது, சாதி வேறுபாடின்றி நல்லொழுக்கம் உள்ள யாரும் பூசாரிகளாக இருக்கலாம், செல்வம் அல்லது செல்வாக்கு அடிப்படையில் இறைப் பற்றாளர்களை மதிக்காமல் அனைவரையும் இணையாக மதிக்க வேண்டும் என்று கருதுபவர்கள், ஆரிய எதிர்ப்பாளர்களாக மாறுகிறார்கள். எனவே சனாதன எதிர்ப்பாளர்களாக விளங்குகிறார்கள். எனவே, கடவுள் மறுப்பாளர்கள்தாம் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் என்பது தவறு.
- ? 88. கடவுள் மறுப்பாளர்களும் மத எதிர்ப்பாளர்களும் இவற்றை மறைத்துவிட்டு இவ்வாறு கூறுகிறா்கள் என்கிறார்களே!
இது மிகவும் தவறான வாதம்.
தமிழ்த்தென்றல் திருவிக கடவுள் மறுப்பாளரும் அல்லர், இந்து மதப் பகைவரும் அல்லர். இவ்வாறு கடவுள் நம்பிக்கையாளர்களும் இந்துவாக உள்ளவர்களும் தன்மான உணர்வுடன் சனாதனத்தை எதிர்த்துக்கொண்டுதான் உள்ளனர். வேறொன்றும் விளக்கத்தெரியாமல் இவ்வாறு கூறுகிறார்கள்.
“இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது. சமரசம் சன்மார்க்கம் ஏற்பட்டு வரும் இந்நாளில் இடைக்காலத்தில் ஏற்பட்ட வருணாச்சிரமத்திற்கு ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.
ஒருவன் கோவிலுக்குப் போவது, போகாமலிருப்பது மதச்சின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பது, உருவத்தை வழிபடுவது, வழிபடாமலிருப்பது, ஆத்திகம் பேசுவது, நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொண்டும் செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.
இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடமுண்டு. பிறப்பினால் சாதி கற்பிப்பதே வருணாச்சிரமாகும்.
இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. வருணாச்சிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவதில்லை” என்கிறார் தமிழ்த்தென்றல் திருவிக(ல்யாணசுந்தரம்) அவர்கள். (‘நவ சக்தி‘ இதழ், 6.5.1931)
இவ்வினாவை என்னை நோக்கியே ஒருவர் கேட்டதால் நான் பின்வரும் விளக்கத்தையும் அளிக்க விரும்புகிறேன்.
நான் ‘இறைநெறி மன்றம்’ என்னும் அமைப்பின் தலைவராக இருந்து இறைப்பணி செய்து வந்துள்ளேன். கோவில்களில் மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தியுள்ளேன். பாவை நோன்புகள் நடத்தச் செய்து பங்கேற்றுள்ளேன். புதிதாக எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள கோயில்களுக்குப் போய்விட்டு வருவேன். ஆனால், பொதுவாகத் தனித் தமிழன்பர்களாக இருந்தால், பிராமண எதிரி என்றும் தி.க. அல்லது தி.மு.க. என்றும் முத்திரை குத்துவதே வழக்கம். அதனால் இங்ஙனம் சிலர் சொல்கிறார்கள்.
நான் கலைபண்பாட்டுத்துறை, தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் பாவை விழா, கார்த்திகை ஒளி விழா, சிவன் இரவிற்காகக் காரிக்கலை விழா, தைப்பூச விழா முதலியவை நடத்த முன்மொழிவு அளித்து அவை ஏற்கப்பெற்று இன்று அவை அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சிப் பட்டியலில் முதன் முதலில் இவற்றை நான் சேர்க்கப் பரிந்துரைத்த பொழுது சிலர், மத விழாக்களை அரசு நடத்துவதாக எனக் கேள்வி வரும் என்றார்கள். பட்டியலில் நான் வேளாங்கண்ணி விழா, நாகூர் கலைவிழா, முதலியவற்றையும் அரசின் மதச்சார்பின்மைக்காக நல்லிணக்கக் கலைவிழாவையும் சேர்துள்ளேன் என்பதைக் கூறினேன். மேலும் கலைகளைத் தேடி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்காமல் மக்கள் கூடுமிடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கலைகளைப் பரப்ப வேண்டும் என்று வாதிட்டேன். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நான் மத எதிர்ப்பாளன் அல்லன். அதே போல் அரசும் மக்களின் நம்பிக்கைகளை மதித்து இத்தகைய மதவிழாக்களைக் கொண்டாடி வருகிறது என்பதையும் உணர வேண்டும்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 122-125
Leave a Reply