(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி)

அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு

முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப்

பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு.

– நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173

[அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை
உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.]

கருத்துரை:

அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு வருவதால் பிறப்பு, துன்பம் தரக்கூடியது என்பதை உணரும் பெரியோரைப் பற்றிக் கொள்க.

பதவுரை:

அடைந்தார் = அடைந்தவரை; அஃதாவது அன்பால் தன்னுடன் இணைந்திருப்பவர்கள்; பிரிவும்=அஃதாவது  இயற்கையாகவும் செயற்கையாகவும் தம்மைச்  சார்ந்தவர்களான பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள், உடன்பிறப்புகள், பேரன்மார், பேத்திமார், தாத்தாமார், பாட்டிமார் முதலான குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள், உறவினர்கள் முதலியோரைப் பிரிந்து நிற்றலும்; அரும்=அரிய(மருந்தால் தீர்க்க முடியாத); பிணியும்=கொடுமையான நோயும்; கேடும்=அழிவு, இழப்பு, வறுமை, தொல்லை, தீமை, பிற வகைத் துன்பங்கள் ஆகிய கேடுகளும்; உடங்கு= உடன்; உடம்பு= உடம்பை; கொண்டார்க்கு= உடையவர்களுக்கு; உறலால்= வருவதால்; தொடங்கி = தொடக்கம் முதல்; பிறப்பு=பிறப்பு என்பது; இன்னாது= துன்பம் தருவது;  என்று= என்று; உணரும்=உணரக்கூடிய; பேரறிவினாரை=பேரறிவுசால் பெரியோர்களை; உறப்பு ணர்க=நெருக்கமாய் உணர்க; அம்மாஎன் நெஞ்சு=(அம்மா என்பது அசைச்சொல்.) என் நெஞ்சே!

“விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  347); செறிவு என்பது இங்கே நெருக்கத்தைக் குறிக்கிறது. உற = சிக்கென, புணர்க=பிணிப்பதாக என உறப்புணர்க என்பதற்கு விளக்கமளிப்போரும் உள்ளனர்.

நெருக்கமாய் உணர்ந்தால்தானே பற்றிக் கொள்ள இயலும். எனவே, எல்லாம் சரிதான்.

பிறவியைத் துன்பம் நிறைந்ததாக இறையன்பர்கள் கூறுகின்றனர். பிறவியைப் பெருங்கடலை நீந்துவது போன்ற துன்பமானது என்றே அவர்கள் கூறுகின்றனர். எனவேதான் திருவள்ளுவரும் ‘பிறவிப் பெருங்கடல்’ என்கின்றார்.

இன்னல் தரும் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஆன்றோரைத் துணையாகக் கொள்ளச் சொல்கிறது இப்பாடல்.