அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து
– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்
திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில்
சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம்
பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ,
பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய்,
ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை
ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட,
இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி!
எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி!
இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும்
என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும்
அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க
ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே
அந்த நிலை வந்திடினும் இந்தியை நான் தடுப்பேன்
என்றுரைத்து கிளர்ச்சி செய்து சிறைபுகுந்து வந்து
முந்திநின்று தடுத்துவரும் மூதறிஞ, வாழி!
முத்தமிழ்ச்சால் அண்ணாவே, நீடுழி வாழி!
பலமொழிகள் பேசிவரும் பலவினங்கள் இருக்கும்
பைந்தமிழ் நன்னாட்டினிலே பசுந்தமிழைக் காப்பார்
நலமிக்க உங்களைப்போல் நல்லறிஞர் அண்ணா,
நானிலத்தில் எவருமிலை, நாடறியும் இதனை!
புலமிக்க அறிஞர் பலர் பெற்றிலங்கும் தலைவா,
பொன்றாமல் தமிழ்காக்கப் போர்த்தொடுக்கும் வீர,
கலையறிஞ, பேச்சாள நீடூழி வாழி!
கடமைசெயும் அண்ணாவே, நீடுழி வாழி!
(சந்த விருத்தம்)
வாழி வாழி அறிஞர் அண்ணா நீடு வாழி வாழியே!
வாழி வாழி நின்றன் இயக்கம் வெற்றி பெற்று வாழியே!
வாழி வாழி நின்றன் தொண்டர்படையும் வாழி வாழியே!
வாழி வாழி வையைமணலின் நீடு வாழி வாழியே!
குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964
Leave a Reply