இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
11 : தமிழே இன்பம்! – முடியரசன்
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே
தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?
பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.
“பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே! எல்லா மொழிகளுக்கும் தலைமையாய் விளங்கும் சிறப்பு மிக்கவளே! உன்னுடைய திருவடியைப் பணிவுடன் வணங்குகிறேன். இங்கே நீ இ(ல்)லை என்றால் எனக்கு ஏது இன்பம்? நீ அன்றோ இன்பம்!”
எனத் தமிழே நமக்கு எல்லாம் என்கின்றார் கவிஞர்.
தமிழைத் தாயாகவும் உயிராகவும் செல்வமாகவும் கூறும் கவிஞர் இத்தகு சிறப்புடைய தமிழை நாம் வணங்கிப் போற்ற வேண்டும் என்கிறார். தமிழில்லையேல் இன்ப வாழ்வு இல்லை என்பதை உணர்த்தி இன்ப வாழ்விற்குத் தமிழைப் பற்ற வேண்டும் என்கின்றார் கவிஞர் முடியரசன்.
பேச்சிலும் எழுத்திலும் படிப்பிலும் வணக்கத்திலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என அனைத்து இடங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படும் நிலையைப் போக்கித் தமிழே எல்லாம் என ஆக்கிக் கவிஞரின் கனவை நனவாக்குவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply