எஃகுத்தமிழர் இலக்குவனார் – பொன்.செல்வகணபதி
எஃகுத்தமிழர் இலக்குவனார்
இயற்பெயரிலேயே
இலக்கு உடைய
எஃகுத் தமிழர்
இலக்குவனார்!
அன்னைத் தமிழ்மீது ஆசை வைத்தவர்
அதைக் காப்பதற்கென்றே
மீசை வைத்தார்!
பாவின் திறத்தாலே
பைந்தமிழ் காத்தவர்
பாவேந்தர்!
இவரோ
நாவின் திறத்தாலே
நற்றமிழ் காத்த
நாவேந்தர்!
· * * * * *
பிழைக்கத் தமிழ் படித்தோர் உண்டு
தமிழ் படித்துப் பிழைப்பவரும் உண்டு!
இவரோ
தமிழ் தழைக்கத்
தமிழ் படித்த தமிழர்!
தமிழ் தழைக்கவே
தலை நிமிர்ந்த தலைவர்!
வேலை செய்யாமலிருக்க வேலை தேடுவோர் உண்டு!
இவரோ
வேலை செய்வதற்காகத்
தம் வேலை விட்டவர்!
தமிழ் வேலை செய்யத் தம்வேலை விட்டவர்!
தமிழைச் சிறை மீட்கத் தாம் சிறை புகுந்தவர்!
காதலித்தால் கூட
தமிழ் உணர்வை நிபந்தனையாக்கும்
காதலர் அவர்!
நலம் உசாவினால் கூட
தமிழ் உணர்வோடு
இருக்கிறீரா? என்றே
நலம் கேட்பவர் அவர்! ஆதரித்தால் கூட
தமிழ் உணர்வை மட்டுமே
ஆதரிக்க அடம் பிடிப்பவர் அவர்!
தாகம் தீர்வதற்குள் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது!
மோகம் தீர்வதற்குள் மூச்சு தீர்ந்துவிடுகிறது!
சோகம் தீர்வதற்குள்
சொந்தம் தீர்ந்துவிடுகிறது!
ஆக மொத்தம் இங்கே அனைத்தும் தீர்ந்துவிடுகிறது!
ஒன்றுமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவே ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது!
அந்த ஒன்றுமில்லையில் தான் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொல்ள இன்னொரு வாழ்க்கைக்கு எங்கே போவது?
இங்கு
தியாகங்கள் செய்து தியாகி ஆனவர் உண்டு
நாமோ
தியாகிகளைத் தியாகம் செய்தே தியாகி ஆனவர்கள்!
விதவிதமாய் வழுக்கும்
விலாங்குகளுக்கு
மீன்களிடமும்
மேடை!
பாம்புகளிடமும்
பலன்!
கடவுள்கள் கடத்தப்படுவதும்
பூசாரிகள் பூசிக்கப்படுவதும்
ஒன்ரும் புதுவதல்ல!
உலகத்தியற்கை!
விசிறியும் இல்லாத
வாழையும் இல்லாத விநோதப் பிறவிக்கு
விசிறிவாழை என்று பெயர்!
அந்த விசிரி வாழையோ
வீட்டு முகப்பில்!
குலை தள்ளும் வாழையோ
கொல்லைப்புறத்தில்!
கல்யாணக் காலங்களில்
காட்சிக்கு வரும்!
கல்யாணம் முடிந்தபின்னே
தோலுரிக்கப்படும்!
ஆனால் விசிறிவாழை எப்போதும்
வீட்டுமுகப்பில்!
வேர்கள் பூப்பதில்லை
ஆனால்
வேர்களின்றிப் பூவில்லை!
வேர்கள் முரடுதான்
கொஞ்சம் விகாரம் கூட!
ஆனால்
மரங்களுக்குப் பூச்சூட்டி
மகிழ்வது வேர்கள்தான்!
அடித்தளங்களுக்கு ஏது
அடையாள வாரம்?
ஆனால் அனைத்துக்கும் ஓர் அடையாளம் வழங்குவது அடித்தளங்கள்தானே?
மறுக்கப்பட்டு விட்டாலும்
காதல்
மறக்கப்படுவதில்லை;
நினைக்கப்படாவிட்டாலும் தியாகம் நிராகரிக்கப் படுவதில்லை
மரணம் நம் மடிமீதே கிடக்கிறது;மரணத்தின் மடியில்தான் மனிதன் மயங்கிக்கிடக்கிறான் ;மரணமில்லாத்து மரணம்;
மற்றொன்று
புகழ்!
அந்த மாயாத புகழால் மரணத்தை வென்று இன்றும் இருக்கிறார் இலக்குவனார்
என்றும் இருப்பார் இலக்குவனார்!
– பொன்.செல்வகணபதி
Leave a Reply