கசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா
கசங்கிய காகிதங்களின் கருணைமனு
- நகர நரகத்தில்
கைவிடப்பட்ட கட்டடங்களாய்,
தூய்மையையே காணாத கழிவறைகளாய்,
தூய்மை இந்தியாவில் நாங்கள்!
- நகரத் திராணியற்ற
நத்தையின் முதுகில்
நான்காயிரம் பலமேற்றியதில்
கல்வி வண்டி கவிழ்ந்தது
எங்கள்மேல்தான்!
- அந்த இண்டு இடுக்கில்
எட்டிப்பார்த்தவேளையில்
காலைத் திணிக்க இரண்டுறைகள்
நூல்களைத் திணிக்கப் பையுறை
உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள்
எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள்
கழுத்துக்குக் கோவணம் மாட்டி
மூளையை அம்மணமாக்கினீர்கள்!
- எங்கள் நாக்கைக் கசக்கியதில்
நாண்டுகொண்டது எங்கள் மொழி!
- பள்ளிக்கழிவறையில்
பதைத்துச் செத்தது எங்களுயிர்
அடுக்குமாடி வன்புணர்ச்சியில்
அழுது செத்தது எங்களுயிர்
மாவட்ட ஆட்சியகத்தில்
எரிந்து செத்தது எங்களுயிர்
அகதிகளின் நாட்டில்
அழுகிச் செத்தவையும் எங்களுயிர்களே!
- மக்கா!
கும்பகோணத்தில்
கருகிச் செத்தவையும்
விடுதலை செய்யப்பட்டபோது
வீறிட்டுச் செத்தவையும் எங்களுயிர்களே!
- மருத்துவமனையில் உயிர்வளியின்றிக்
கொல்லப்பட்டவையும் எங்களுயிர்களே!
- கக்கத்தில் இந்தி்(யை)ய வரைபடத்தை இடுக்கிய
காகிதப்பூ “மாமா” காலத்தில்
உரோசாப்பூ மாமாவின் பிறந்தநாள்
குழந்தைமையின் துக்கநாளே!
- சட்டத்தின் சட்டையில்
சல்லடையாய் ஓட்டைகள்
அதில் கசடுகள் மேலே
கண்ணியங்கள் அதனினும் அதனினும் கீழே கீழே!
- ஆழ்துளைக் கிணறுகளின்
ஆழத்தில் அழிவதும் எங்களுயிர்
பாலச்சந்திரனாய் மாறித்
துவக்குகளின்
எச்சிலை ஏற்பதும் எங்களுயிர்களே!
- எல்லா வன்முறைகளின்
சோதனைக்கூடங்கள் நாங்கள்
உங்கள்
சாதனை மண்டபச் சவப்பெட்டியில்
பங்குவைக்கப்பட்ட
பச்சைத் தசைத் துண்டங்கள் நாங்கள்
- வெட்டியெடுத்த பாறை வடுக்களில்
தேங்கிய நீரில்
மிதப்பதும் நாங்கள்
செஞ்சோலையில் புதைந்த
பூங்குயில்களும் நாங்களே!
- வாழவழியற்றுத்
திருவோட்டுத் தெருவில்
திரிபவர்களும் நாங்களே
சாக வழியற்றுச்
சாக்கடையோரத்தில் தவம்புரியும்
சந்தனங்களும் நாங்களே!
- கசங்கிய காகிதங்களில் கருணைமனு
உங்கள் காலடியில்
வழக்கம்போல்…. வழக்கம்போல்…
மிதித்துப் பழகுங்கள் மேதைகளே!!
படையல்: வாழாமல் வாழ்ந்து மடிவிக்கப்பட்ட மழலைகளுக்கு
தமிழ்சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம்,
மதுரை-625009.
மின்வரி : lakshmibharathiphd@gmail.com
கசங்கிய காகிதங்களின் கருணைமனு என்னும் தலைப்பிலைமைந்த கவிதை
அருமை