கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா
மதுரைப் பாவலர் மா.கந்தையா
அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின்
தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல்
தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர்
தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம்.
– முனைவர் மறைமலை இலக்குவனார்
கண்டீரா ஓர் இறும்பூதை !
திருப்பாற் கடலில் திருஅமுதம் எடுக்க
ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள்
மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை
பெரும்கயிறாகக் கொண்டு பெருங்கடலைக் கடைந்தனராம் !
கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து
கையால் கடைந்தான் ; கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்
பொய்யுரையை ஏட்டில் புகழுரையாக எழுதினரே
வைய்யமுமதனை இறும்பூதென வரிவிடாது படிக்கின்றதே !
உடற்கூடாய் வாழுமொருவனின் இடக்கையை ஓர்மூதாட்டியும்
படபடக்கும் வலக்கையை புடம்போட்ட மக்களும்உறவுகளும்
இடையில் பட்டவனோ இழுவையால் துடித்தான்
கடைசியில் வெற்றியாருக்கு விடைகாண இயலவில்லை !
” என்னவரை விடுங்கள் என்னோடு ” மூதாட்டிசொல்அது
” முன்னவரை எங்கள் கண்அவரை விடமாட்டோம்
வேண்டுமவர் எங்களுக்கு தூண்டிற் புழுவாக –
கூண்டுக் கிளியாக வேண்டுமென விட்டுச்சென்றீரே!
விடமாட்டோம் நாங்கள் இடம்மாறவிடோம்
அடாது செய்து விடாதபழி ஏற்காதீர்
மாட்டேன் என்றால் மாட்டோம் நாங்களும்
தேட்டத்தை இழக்க மாட்டோம்உம் ஆட்டத்தில் !
உயிரா இல்லை உயிரனைய மக்களா
பயிரா இல்லை பயிர்முற்றிய கதிர்மணிகளா
வயிரா இல்லை வயிறீன்ற முத்துகளா
செயிர்குழம்பி இடைநின்ற உயிர்க்கூடு நின்றதம்மா !
வெற்றி யாருக்குஎன வெற்றித் திருமகள்
சுற்றிச்சுற்றி ஓடுகிறாள் முற்றும் ஏமாறுகிறாள்
பற்றும் பாசமும் சற்றும் குறையாததால்
முற்றாக வெற்றிபெற முடியவில்லை இருதரப்பும் !
மொட்டுகள் இரண்டு மெதுநடையில் வருகிறது
பட்டுப்போன்ற பாதம்மண்ணைத் தொட்டுத்தொட்டு துவள்கிறது
ஒட்டி உறவாடும் கெட்டிஉறவுகள் ஒருபுறம்
பொட்டிட்ட அழகுடை பெருமூதாட்டி மறுபுறம்
கயிறு இழுக்கும் கைப்போர் போலிருக்குதே
உயிரோடு விளையாடும் கயிரிழுப்பைக் காண்போமென
கைகோத்து இருவரும் மெய்விதிர்க்க வந்திட்டார்
கண்சேர்த்துப் பார்த்து கடுஞ்சினம் கொண்டனரே !
சினம் கொண்ட சிறுசுகள் தனிப்பிரிந்து
மனம் நொந்து இனமக்கள் இழுத்த
புறம்புறம் பிடித்தகைகளைப் புறமாகத் தள்ளி
கரவுஇல்லா உறவுகளே கரையிலாஓர் கூட்டமாய்
ஒருபுறம் நின்று மறுபுறம் பாவம்
பெருவயது மூதாட்டி ஒருவராய் நிற்க
உருவாக நடுவிலே திருவான எங்கள்
பருவுடல் கூடாய் இருந்து தவிக்கும்
முந்தைக்கு முந்தை மூதறிவு கொண்டவரை
பிந்தையாகிய நீங்கள்அவர் பேதலிக்க இழுக்கலாமா ?
ஒருவராய் நின்று மறுபுறத்தை ஈடுகொடுக்கும்
திருவாட்டி அறிவுப் பெருமாட்டி யார் ?
ஆவலாய் கைவிடுத்த அறிவு மொட்டுகளே
தூவல் கொண்டெழுதி தூயறிவு புகட்டுமுங்கள்
தாத்தாவின் உயிர்தான் உங்கள் ஆத்தாஉம்
தாத்தாதான் நடுவிலே தள்ளாடித் துடிப்பவர் !
கேட்டனர் மொழியை கெட்டனர் அறிவை குறள்
பாட்டாய் இருவரும் காட்டம் மிகவடைந்து
சென்றனரே தனியாக செம்மாந்து நிற்பவளிடம்
நன்றுதானா நீவீர்செய்வது ? பொன்றும் செயல்தானா ?
நிற்கமுடியாது மூதாட்டி நிலைகுலைந்து கீழமர்ந்தாள்
” பொற்கை உடைய பூக்களே நான்யார் ? ”
விற்புருவம் கொண்ட சொற்பதம் கூறாத
பொற்புமிகு மூதாட்டியே அறிவோம் உம்மை !
எம்மைப் பெற்றவர்கள் உம்மைப் பற்றி
மெய்ம்மையாகக் கூறினர் உண்மையில்நீர் குற்றவாளி
பிறப்பு என்பது பெரிதுவக்கும் செயல்எங்கள்
பிறப்பைப் பார்த்து பெரிதுவக்காத உமக்குஎங்களின்
முந்தைக்கு முந்தையாக பிந்தைக்கு முந்தையாக
இந்நிலத்தில் இருப்பவரை இழுத்துப்போக உரிமையேது
முந்நிலை அறியாது இந்நிலைக்கு வந்தஉம்மை
தந்நிலை அறிந்து பொறுத்தோம் தடம்மாறிச் செல்க !
சொல்லைக் கேட்டவள் எல்லையில்லா மகிழ்ச்சியால்
துள்ளிப் பாய்ந்தது கொள்ளைக் கண்ணீர்
யாரென்று அறியஎன் கூரறிவு கேட்கிறதென்றாள்
பாருங்கள் எம்மை பார்த்துவிட்டுக் கூறுங்கள் !
” தோகையில்லா மயிலாய் தொல்தமிழ் மண்ணில்
பாகாய் உருக்கும் பாட்டிசையில் ஏழிசைபெற்ற
வாகைநிலா என்ற செயநிலா உம்பெயர்தான்
போகையிலே அறிந்து கொண்டீரே அதுபோதும் !
மலர்சுரக்கும் தேன்அதற்கு மதுவென்றும் பெயர்
அலர்சுமந்தபோது அருந்தமிழில் மதுமதுஎன்பீராமேஅந்த
மதுமலர் பெற்ற மகன்நான் ” ஆதவன் ”
சூதில்லா சொற்கள் உதிர்க்கும் பாட்டி
மகிழ்ச்சிக் கண்ணீரை மாக்கடலாய் ஓடவிட்டாள்
” புகழ்ச்சியிலா சொல்கூரிய பூக்களே உங்கள்
நெகிழ்ச்சிசொல் என்னுடைய நெஞ்சத்தைப் பஞ்சாக்கியது
இகழ்ச்சிஎன நினைக்காது இதையும் கூறுகிறேன் !
தோற்று விட்டேன் நேற்றைய பிறப்புகளிடம்
சிற்றுளி பெருமலையைச் சிதற வைப்பதுபோல்
பற்றாக எண்ணிவந்ததை முற்றாக அழித்துவிட்டீர்
இற்றுப்போன இதயத்துடன் இதமாக ஒன்றுகேட்கிறேன் ”
” தாத்தாவைத் தவிர ஆத்தாவே கேளுங்கள்எதையும்”
பூத்தமல்ர்மணச் சொல்கேட்டு புன்னகைத்தாள் ” இருவரும்
முத்தமாய் என்கன்னத்தில் முத்தம் பதிக்கவேண்டும் ”
மொத்தமாய்த் தருகிறோம் முத்தம் ஆயிரம் !
அணைத்தாள் இருவரையும் அணைத்தவள் பெற்றாள்
நனைந்தாள் முத்த மழையில் மகிழ்ந்தாள்
” விட்டுவிட்டேன் தாத்தாவை தொட்டுவிட்டேன் உங்களை
பட்டுப்போக வில்லைஆசை பார்த்துவிட்டேன் உங்களை ”
கூடிப்போ ராடியவரோ ஆடிப்போயினர் அரும்புகள்செயலால்
வாடியிருந்தவரோ உறவுகளுடன் கூடிவிட்டார் ; மகிழ்ந்தார்
பாடிப் பறந்தகிளி பாசவலையில் சிக்காது
கூடியது குலத்தில் ; கூடியதுஉயிரைப் பார்த்த நிறைவு !
திருப்பாற் கடலில் திருஅமுதம் எடுத்தவாலிபோல்
பெருவாழ்வுக் கடலில் உருவை மீட்டது சிறுசுகள்தானே !
முன்னது கதை என்றாலும் கருத்தில்வைப்பீர்
பின்னது கதையல்ல உண்மை கற்பனைதேன்கலந்து!
குறிப்பு; இறும்பூது =அதிசயம்
– இளையவன் – செயா
Kandiah Mariappan <ilayavanjeya@gmail.com
Leave a Reply