கனவோ நனவோ – கிரிசாசன்
கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக்
காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம்
புண்பட உள்ளமும் நோகும் – தேகம்
புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும்
விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான
வீதியிலே எங்கும் கேட்பது போலும்
எண்ணம் பிரமித்து நிற்கும் – அங்கே
என்ன நடந்தது காணவிழைந்தேன்
நட்ட நடுநிசி நேரம் – ஒரு
நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன்
கொட்டும்மழை பெய்தபின்பு – பனி
கூதலிடப் புகைபோலும் நிசப்தம்
வட்டமதி மேலே நிற்க – அதன்
வீசுமொளிதனில் சென்ற இடமோர்
வெட்ட வெளிப்பிரதேசம் – அதில்
வீடுகள் இன்றில்லை யென்பதைக் கண்டேன்
சில்லென்ற காற்றுத் தழுவ – அதில்
தீயெரிந்த புகை வாசமும் வீச
கொல் எனவே ஒருசத்தம் – மனம்
கொஞ்சம் திடுக்குற்று யாரெனப் பார்த்தேன்
நில்லென மேனி பதற – அங்கு
நீசரின் கண்படின் நானில்லை யென்றே
மெல்ல மரமொன்றின் பின்னே – எந்தன்
மேனி மறைதங்கு சூழலைப் பார்த்தேன்
அல்ல அது வெறும் பிரமை – கண்டு
அஞ்சுதல் விட்டதன் பின்பு நடந்தேன்
கொல்ல வந்தவரும் அன்றோ – இந்தக்
கும்மிருட்டில்நின்று மெய்கிழித்தாடி
பொல்லாக் கொடுமைகள் செய்தார் – இந்த
பூமி அதை வாழ்த்திப் போனது மேனோ
நல்லவர் போலிங்கு வந்தார் – கொன்ற
நாளிலே மாறிக் கொடுமைகள் செய்தார்
செல்லென விட்ட விதியும் – அதை
சேர்ந்தே இழைத்தவர் செய்பாவம் தானும்
கொல்லக் கொல்லப் படம்செய்து அவர்
கொன்ற அழகினை மெய்ரசித்தேங்க
எல்லையிலே வெகுதூரம் – அந்த
ஏற்றமிகு நாடும் செய்மதி கொண்டே
துல்லிய மாகப் பிடித்தும் அதைத்
தூக்கிப் பரணிடை போட்டு மறைத்தார்
நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=212212
Leave a Reply