கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா!

 

‘வழிபாடு தமிழிலா?

வரலாமா? – என்று

மொழிபேதம் செய்து

முட்டுக் கட்டை யிடுவார்!

 

ஒதும்மந் திரத்தில்

ஊனமா நம்மொழிக்கு?

வேதம்என்ப தென்ன?

வெளிச்ச மனம்தானே!

 

திருக்கோயில் மணிஓங்கி

தமிழ் பேசாதா?

தேவாரத்தமிழ்  இறைவன்

செவி ஏறாதா?

 

தாழ்திறவா மணிக்கதவும்

தமிழ்கேட்டுத் திறந்ததே!

வாய்திறவாத் தமிழனே

வழியறியா மயக்கமென்ன?

 

உண்மையில்நீ அஃறிணையா?

ஒப்பனையால் உயர்திணையா?

கண்ணிமைகடந்து கருமணி

களவு போகிறதே!

 

உள்ள எழுச்சியின்றி

உறங்கும் தமிழனே

பள்ளியறை பாசறையா?

பாய்சுருட்டி வா!

 

கருவறையைத் தமிழ்தொட்டால்

தீட்டாம்? வாவா

கற்பூரத் தட்டுக்குத்

தமிழ் கற்றுத்தா!

 – கவிஞாயிறு தாராபாரதி