கவிஞன் – தமிழ்ஒளி
கவிஞன்
மோனக் கருக்கலிலே – விண்
முத்தொளி தோன்றுகையில்
வானக் கடல்கடந்தே – அதை
வாங்கிவர விரைவேன்!
முத்துப் பனித்துளியில் – கதிர்
முத்த மளிக்கையிலே
பித்துக் கவிபுனைந்தே – மணம்
பேசி மகிழ்ந்திடுவேன்!
சாயும் கதிர்களிலே – இருட்
சாலம் புரிகையிலே
காயும் நிலவெனவே – வழி
காட்ட எழுந்திடுவேன்!
நீலக் கடல்அலையில் – கதிர்
நெய்த வலையிடையே
கோலக் குளிர்மணிபோல் – கவி
கொட்டிச் சிரித்திடுவேன்!
ஊரை எழுப்பிடவே – துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச்
சாதி விழித்திடவே!
கத்தி முனைதனிலே – பயங்
காட்டும் உலகினிலே
சத்தியப் பேரிகையை – நான்
தட்டி முழக்கிடுவேன்!
கவிஞர் தமிழ்ஒளி
கலாவல்லி – 1955
Leave a Reply