(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 2 – தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி
களம் : 2 காட்சி : 3


முச்சந்தி – மோனைப்புலவன், அல்லி

கலிவிருத்தம்

மோனை: அன்பே அருமருந்தே
அன்றுநீ சொன்னபடி
புன்னை மரத்தடியில்
புலரும் பொழுதளவும்
கண்ணைஇமை மூடாமல்
காத்துநான் தவித்திருந்தேன்
சொன்னசொல் மாற்றினாய்
சுகம்ஏ மாற்றினாய்

அல்லி: வேளை தவறாது
வீதியிலே நின்றபடி
வாளை மீன்போல்
வார்த்தை வழுக்க
ஊளை வாயின்
ஊத்தைப் பல்காட்டும்
மூளையிலாப் புலவரே
மூச்சை நிறுத்தும்

        வீதியிலே            நின்றுநீ
        வீண்வம்பு           செய்தலை
        நாதி                யற்றவளா 
        நானென்று            கேட்டு
        சேதிகள்         அனைத்தும்
        சிதறுங்         காயாக
        வாதிட்டே            அத்தையிடம்
        வந்துநான்           உரைத்திடுவேன்

அறுசீர் விருத்தம்

மோனை: புத்தம் புதிய மலராள்நம்
புவியாள் மன்னன் மகளுக்கு
நித்தம் யாப்பை உரைக்குங்கவி
நிகழ்த்தும் பாங்கை எனக்குரைப்பாய்
தத்துப் பித்தென் றவனும்மிகப்
பித்துப் பிடித்துப் பேசுவனேல்
சித்தங் கலங்கா தென்னிடம்நீ
சிறிதும் ஒளிக்கா துரைத்துவிடு

அல்லி: மோனை என்று சொல்லி
முத்தமிழ் கொல்லு கின்ற
கூனல் புத்தி யுள்ள
குரங்கு மனத்தோன் நீதான்
ஆனைப் புத்தி கொண்டே
அருந்தமிழ்க் கவிஞன் தன்னை
ஏனையா இகழு கின்றாய்
என்ன பயனைக் கண்டாய்

        கன்னிக்     கலசங்       கண்டக்கால்
            களித்தா     னாகப்       பித்தேறி
        பின்னிப்        பிணையுஞ்        சொல்லடுக்கிப்
            பிதற்ற      லாகக்        கவிபடைப்பாய்
        என்னை       மிஞ்ச           எவருள்ளார்
            என்றே       நாளும்      புறம்பேசிப்
        புன்னை      நிழலில்     நின்றபடிப்
            புலம்பல்        ஒன்றே       கண்டபலன்

வஞ்சித் தாழிசை

மோனை: அத்தையின் மகள்தானும்
அருந்தமிழ்க் கவியாகி
அத்தானாம் என்னிடமே
ஆசையுடன் பாடுங்கால்
பித்தாகி என்மனத்தில்
பெருகுதே காதலய்யோ

            இளையவளின்   மனத்தில்தான்
            எழுகின்ற        வீரத்தால்
            வளமைமிகு        தமிழாலே
            வடிக்கின்ற      சொற்கேட்டு
            இளையோனாம்   என்மனத்தில்
            ஏறுதேதான்       காதலய்யோ

            பிஞ்சனைய        மனத்தாள்தான்
            பெரும்புலமை பெற்றவளாய்
            விஞ்சுகிற       பிடியாக
            விளைக்கின்ற கவிகேட்டு
            கெஞ்சுகிற       என்மனத்தில்
            கிளறுதே     காதலய்யோ

கலி விருத்தம்

அல்லி: ஏதுதான் பயனுண்டாம்
எருமைமேல் மழைபெய்தால்
காதல்தான் அல்லாமல்
கனவுனக்குப் பிறிதில்லை
வாதந்தான் பலசெய்ய
வஞ்சிஎனக்கு நேரமில்லை
ஏதந்தான் எனக்குண்டாம்
இனியும்நான் இங்கிருந்தால்

மோனை: அருமைமிக உடையவளே
அத்தைதான் பெற்றவளே
எருமையெனப் பலவாக
எனைநீயும் ஏசினாலும்
உருவான என்னன்பும்
உனையல்லால் வேறிடந்தான்
திரும்புவதும் இல்லையெனச்
சின்னவளே நீயறிவாய்

அறுசீர் விருத்தம்

அல்லி: அத்தை மகளே என்றே
ஆயிரம் முறையுஞ் சொன்னால்
மெத்தவும் காத லுன்பால்
மேவுமோ என்ற னுக்கே
தத்தையாள் என்ற னுள்ளம்
தாவிடக் காத லுன்மேல்
நத்திடும் உதவி யொன்று
நயமுடன் எனக்கு வேண்டும்

வஞ்சித்தாழிசை

மோனை: வானத்தையே வளைக்கவா
வரிப்புலியைப் பிளக்கவா
வஞ்சியுன்றன் மனவரங்கம்
வணங்கிநான் குடியேற
மணலைத்தான் திரிக்கவா
மதயானை சுழற்றவா
மங்கையுன்றன் மனவரங்கம்
மயங்கிநான் குடியேற

            கஞ்சிக்கும்         உப்பின்றிக்
            கலம்பலவாய்க்        குடிக்கவா
            கன்னியுன்றன்        மனவரங்கம்
            கனிவாகக்            குடியேற

கலிவிருத்தம்

அல்லி: வானந்தான் விளங்கட்டும்
வரிப்புலியுந் திரியட்டும்
ஆணையுந்தான் வாழட்டும்
அருமணலும் இருக்கட்டும்
ஏனத்தில் கஞ்சியுந்தான்
இட்டுப்பு நீயுண்பாய்
ஊனமொன்று மில்லாத
உதவியது என்ன வெனின்

            முருங்கைமரப்        பிசின்போல
            மோனையதை     மாற்றாமல்
            சுருங்கத்தான்       சொலலின்றிச்
            சோர்ந்துதான்        விழுமட்டும்
            உருக்குமொரு     கொல்லுலையில்
            ஊதுகிற          குழலாக
            வருந்திநான்         களைத்திடவே
            வதைக்காதே       கவிசொல்லி

(தொடரும்)

புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி