(காலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)

காலத்தின் குறள் பெரியார்

அதிகாரம் 9. கட்டுப்பாடு

 

1.அறியார் அறிவுவழி மாறப் பெரியார்

  நெறியாண்டு கட்டுப் படு.

2.கடமையும் கண்ணியமும் மேற்கொண்டு வாழ்விலே

  கட்டுப் படுதலைமேற் கொள்.

3.பற்றற்(று) ஒருதலைமை பற்றிவிட்டால் கட்டுப்

  படுதலே முன்நிற்கும் பண்பு.

4.பார்போற்றும் பண்பு பணிவுடைமை என்றால்நற்

  போர்வீர  னுக்கோர் பொலிவு.   

5.கட்டளை உன்தலைமை இட்டால்நீ எட்டுணை

  ஐயமும் இன்றிநிறை வேற்று.

6.தேர்ந்துதெளி ஓர்கொள்கை ஓர்தலைமை

பின்னர்நீ   பேர்ந்துபின் வாங்கல் பிழை.      

7.கழகம் இயக்கம் எவற்றிலும் யாரும்

  கலகம் புரியாமை நன்று.

8.உலகம் உவந்தேற்றும் கொள்கைகைக் கொண்டாய்

  கலகம் புரிவோர் களை.                                            

9.கட்டாயம் இல்லை தவறுகண்டால் நீஇயக்கம்

  விட்டுவிட யாது தடை.     

10.களப்பணி ஆற்றுவோன் கட்டுப் படுதல்

   உளப்பணி என்றுதேர் வான்.

(தொடரும்)

ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:

காலத்தின் குறள் பெரியார்