S.Ilakkuvanar+10

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார்

– கவிஞர் இன்குலாபு

தமிழை இனிமை என்றனர் பாவலர்கள்

தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள்

தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் !

தமிழ் விழிப்புற்றது பாரதியால்

தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால்

தமிழ் போராடியது இலக்குவனாரால்

எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர்

எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர்

இருந்தும்

எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன !

எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின !

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

என்று

தொன்று தமிழருக்கு

நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்த

இந்தத் தொல்காப்பியருக்கு

சிறையும் உறைவாளும்

“மாசில் வீணையும் மாலை மதியமும்” !

சில முகவரிகள் தவறாக அமைகின்றன

பறவைக்குக் கூண்டு

காவிரிக்குக் கருநாடகம்

தமிழ்நாட்டுக்கு இந்தியா !

ஆனால்

தமிழுக்கு வாய்த்த சரியான முகவரி

தியாகராசர் கல்லூரி

மதுரை.

ஒருபுறம்

ஆற்றுநீர் வற்றினாலும்

ஊற்றுநீர் வற்றாத

அழகிய வைகைஅந்த மணலுக்கடியில்

எப்பொழுதும் தமிழ் ஈரம் !

மறுபுறம்

பச்சை இலைகளுக்கு

நடுவில்

பளிங்குத் தாமரைப் பூப் போல

தெப்பக்குளமும்

மையமண்டபமும்

அதன்

பாசிபடிந்த படிகளில்

நிலவு

வழுக்கி விழும் !

நடுவில் காற்று,தமிழாய் வீச,

உயிர்த்துக்கொண்டு

நிற்கும்

தியாகராசர் கல்லூரி

வைகை தாலாட்டும்

தமிழ் நாகரிகம் !

நாணல்களின் வெண்பஞ்சுப் பூக்களைத்

தலைக்குச் சூடும்

நாரைகள் !

நிலவுப்பாலில் நின்று குளிக்கும்

கீற்றுத் தென்னைகள்

கிளியோபாத்திராக்கள் !

கரையெல்லாம் பூக்கும்

கவிதைகள் !

எங்களை அடைகாத்த கூடுகள் !

புறநானூற்று வரிகளிலிருந்து

புரவிகள் பாயும் !

சிலம்புப் பரல்கள்

மிண்டும் தெரிக்கும் !

ஆண்டாள் பாசுரங்களுக்குக்

காதல் சுரக்கும் !

புரட்சிக் கவிஞன் நிலவைப் பாடுவான் !

வகுப்புகள் கவிதைகளின்

வாழ்ந்த அனுபவம் !

தமிழ் தன்னை இனிதாய்க் கேட்டது

எங்கள் வகுப்பறைகளின்

வாசலில் நின்று !

தமிழ் தன்னை அழகாக்கிக் கொண்டது

எங்கள் தோழமை வட்டத்தின்

கவிதைக் கண்ணாடிகளில் !

தமிழ் தன்னை விடுதலையாய் உணர்ந்தது

எங்கள் இலக்குவனாரின் சொல்லிலும் செயலிலும் !

எங்கள் பெருமை எதிலும் சிறந்தது

இலக்குவனாரின் மாணவர் என்பது !

அவர் நெஞ்சில் எரிந்த

விடுதலை நெருப்பின்

பொறிகளுள் ஒன்றைப்

பேனாவில் ஊற்றினேன் !

இன்னும் அணையாமல்

ஊறிக் கொண்டிருக்கிறது !

அந்த நடையின் திருப்பம் ஒன்றில்தான்

மனித நடையின் துணிவைக் கற்றேன் !

அந்தப் பார்வையின் கூர்மை ஒன்றில் தான்

கேள்விகள் தொடங்கும்

நியாயம் தெரிந்தேன் !

அந்த மனிதனின் சொற்கள் அனைத்திலும்

உரிமை வாழ்வின் பொருளை உணர்ந்தேன்!

இலக்குவனார்க்குச் செய்வது இதுதான்

தமிழ்

தமிழர்

தமிழ்நாடு

ஆட்சியில்

உரிமையில்

விடுதலையில் !

kavignar inqulab05

– புதியபார்வை நவம்பர் 16-30, 2014 பக்.38-39, தரவு : கேசவன்