kavi_parvahiamma03

ஈழத்தாய்க்கு அகல் வணக்கம்.

பெண் எனும் பெருமை பெற்று
மனைவி எனும் உரிமை
கொண்டு
பெற்றாயம்மா புலி எனும்
வேங்கையை!

இல்லறத்தில் இனியவளாக
ஈழத்தின் தாயாக
வாழ்ந்து விடைபெற்றீர்கள்
இந்நாளில்
தாய் கன்றோடு பசி
மறக்க
நீங்களோ சேயை
சேவைக்காக அனுப்பினீர்கள்

ஈழத்தின் விடிவு காண
பெற்றவள் மனம்
கல்லானதோ
இல்லை பெரும்
ஈக மனம் அம்மா
உங்களுக்கு!
பிரபாகரன் எனும்
தலைவன் பெயர்
உச்சரிக்க
எமக்குத் தானமாகத்
தந்தீர்கள் புலியாகச்
சேயினை!

கொடு நோய் உங்களை
அழைக்க
இந்தியக் கொடுங்கோல்
உங்களை அவமதிக்க
அந்த அரசுக்கு
நன்றி கூறிய தாயம்மா
நீங்கள்

இறுதி நிகழ்வில்
காடைகளின் படைகள் சூழ
நின்மதியற்று
வெற்றுடல் புதையுண்ட
பரிதாப நிலை கண்டு கலங்குகிறதம்மா
இப்போதும் என் மனம்!

காந்தள் மலர் சூடி
வரிப்புலிகள் உங்களைச்
சுமக்க
எனையணைத்த கை பற்றுண்டு
கால்கள் தழுவ ஆசை
கொண்டேன்
அந்த வலி நீங்கள்
அறிவீர்கள் தாயே!

நான் அறியாப்பருவம் அது
உங்கள் முகம் பார்த்து
மலர்,தேன் என
உறவுகள் கூற
அறிந்த பருவத்தில்
தேடினேன்
என் செய்வேன்
நீங்களும் நானும்
வெகு தொலைவாயிற்றே!

புலி நடந்த பாதையில்
கொடு விசமிகள்
நடப்பதைப் பார்த்து ஏங்கினீர்களோ
ஊட்டி வளர்த்த கடாக்கள்
இரண்டகம் சுமந்த நாட்களை
நினைத்து ஏங்கினீர்களோ
நான் அறியேன்
ஒன்று உறுதியம்மா
பெரும் படையின் தலைவன்
மீண்டும் வருவார் என
நம்பியிருப்பீர்கள்
தன் குஞ்சின் பெருமையைத்
தாய் தானே அறிவாள்

பெரும் வீரனைத் தந்த
இனத்தின் தாயே
போற்றியம்மா
தமிழீழ ஒளி தந்த
தாயகத் தாயே போற்றியம்மா
உங்கள் நினைவு தனி ஈழத்தில்
நிலை கொண்டிருக்கும்!

தவிப்புடன்


பவித்ரா நந்தகுமார்