தாயே, தமிழே!

 

நினைவாலும் கனவாலும்

எனையாளும் தமிழ் மகளே!

திணைமாவைவிட இனிக்கும்

தேமாவும் புளிமாவும்

பனையோலை யில்கண்டு

பதநீர் குடித்தவளே!

உயிரே! மெய்யே!

உயிர்மெய்யாய் இருப்பவளே!

தமிழே, உனக்கு

உயிர் – மெய்யாய் இருக்கிறதா?

குற்றுயிராய்க் கிடப்பவளே

ஊசலாடும்

குறையுயிரில் வாழ்பவளே

சிற்றுயிரைத் தந்துன்னை

எழுப்புதற்கு

சிலிர்த்திருக்கும் உன் மக்கள்

சிறுத்தைக் கூட்டம்!

– கவிஞர் தாராபாரதி