பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – தொடர்ச்சி)
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8
கவியரங்கக்கவிதை
மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம்
மணிபல்லத் தீவிற்குப் பறந்து சென்றோம்
குயில்மொழியாள் கண்ணகியை அழைத்துச் செல்லக்
குன்றுக்கு வானஊர்தி வந்த தென்றே
‘உயில்‘போன்று நம்முன்னோர் எழுதி வைத்த
உண்மைகளை அறிவியலின் அற்பு தத்தை
பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம்
பார்தன்னில் நனவாகக் காணு கின்றோம் !
அணுப்பிளந்த செய்திதனை ஔவை சொன்னால்
அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை என்று ரைத்தார்
அணுக்குண்டைப் பொக்ரானில் வெடித்த போதோ
அருந்தமிழன் அறிவுதனைப் போற்றி நின்றார் !
முணுமுணுத்தார் அம்புமுனை நெருப்பைக் கக்கி
முன்னேறிச் சென்றதினைப் பொய்யே என்றார்
முணுமுணுத்த வாய்பிளந்தே இசுகட் என்று
முகிழ்த்தஏவு கணைகண்டு வியப்பி லாழ்ந்தார் !
(தொடரும்)
பாவலர் கருமலைத்தமிழாழன்
9443458550
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்
சித்திரைத்திருவிழா கவியரங்கம்
நாள்: சித்திரை 02, 2048 / 15 -4 – 2017
தலைமை : முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
தலைப்பு : பல்துறையில் பசுந்தமிழ்
Leave a Reply