பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8

 

தமிழ்த்தாய் வாழ்த்து

 

கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்

களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில்

இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்

இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம்

கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்

காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும்

விடவாயால் கரையான்கள் அரித்த போதும்

வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !

 

அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும்

அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும்

மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும்

மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே

பிணியாக வடமொழியை நுழைய வைத்துப்

பீடுடைய வேதமொழி என்றே போற்றித்

தனித்தமிழை அழிப்பதற்கே முயன்றபோதும்

தழல்பொன்னாய்  திகழ்தமிழை  வணங்கு கின்றேன் !

 

அன்னியரின் அடிமையாலே ஆங்கி லந்தான்

அறிவியலைத் தருமென்றும் வேலை வாய்ப்பைப்

பன்னாட்டில் கொடுக்குமென்றும் மாயை தோற்றிப்

பசுந்தமிழைச் சிறாரிடத்தில் மறைத்த போதும்

எந்நாடும் போற்றிடவே கணினிக் குள்ளும்

ஏற்றமுடன் இணையத்தில் தலைமை யேற்றே

தன்னிறைவாய்ப் பல்துறையின் வளங்கள் பெற்ற

தமிழன்னை  நின்தாளை  வணங்கு  கின்றேன் !

 

(தொடரும்)

பாவலர் கருமலைத்தமிழாழன்

9443458550

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்

சித்திரைத்திருவிழா  கவியரங்கம்

நாள்:  சித்திரை 02, 2048 / 15 -4 – 2017

தலைமை :  முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

தலைப்பு :  பல்துறையில் பசுந்தமிழ்