sparrow78

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி)

காட்சி – 23

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     மரக்கிளை

நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி

செல்லப்பேடு வினவுது இங்கே)

ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்?

என்னவோ நாட்டில் நடந்ததுபோல்!

பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென

கற்றோர் பலரோ சொல்கின்றார்!

ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற

திங்களன்றோ? இத்திங்கள்!

பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை!

அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு!

ஆண்   :  சொன்னாயே! நன்றாய்! இதுவென்ன!

தன்னாலே வருகின்ற சிறு காற்றா?

பெண்   :  பிள்ளை பிறந்த சில திங்கள்களில்

அரசே ஏற்று அப்பிள்ளையை

எல்லாமே செய்வதாய் சிலரிங்கு

சொல்கின்றாரே அது என்ன?

ஆண்   :  சொல்வது உண்மை: அது எதுவோ

வெளிநாடு இதனைச் செய்கின்றதாம்!

பள்ளியில் சேர்க்கவே பெற்றோர்கள்

சொல்லணும் முதலில் சாதியை இங்கு

சாதி மதமென்ற காலத்தை

நீதியாய் முதலில் நிறைவியே

மீதியை நிறைவி முடித்தால்தான்

முதன்மையர் பள்ளியில் சேர்த்திடுவார்!

பெண்   :  நிறைவாது போனால்! என் செய்வார்?

ஆண்   :  கரத்தால் இடம் இல்லை என்றிடுவார்

பெண்   :  பணி தேடித்தருகின்ற அரசாங்கத்

தனியிடம் சென்றாலும் இதுதானோ?

ஆண்   :  பணியது தருதோ! இல்லையோ

துணிவோடு சாதியைக் கேட்டுவிடும்!

அங்கும் நீ சாதியைக் குறிப்பிடணும்

பொங்கி நீ மறுத்தால்! வந்திடணும்

பெண்   :  சாதிமதமற்ற நாடென்று! வான

வீதியில் உலாவியே உரைக்கின்றார்!

ஆண்   :  குடிக்கவும் அனுமதி கொடுத்திடுவார் – குடி

குடிக்காதே எனவும் அறிவிப்பார்!

புகைக்கும் பொருளையும் அனுமதிப்பார்

புகைக்காதே எனவும் குறித்திடுவார்!

என்ன விந்தை! விந்தையிது! வெளியே

சொன்னால் வெட்கக் கேடேதான்!

பெண்   :  என்ன! செய்யலாம்? இதற்குத்தான்!

உனக்குத் தெரிந்தால் உரைத்துவிடு!

ஆண்   :  எனக்கென்ன தெரியும்? சிலரிங்கு

கணக்கிட்டு உரைக்க நானுரைத்தேன்!

பெண்   :  என்னமுடிவாய் உரைத்தார்கள்?

சொன்னால் கொஞ்சம் நலமுண்டு!

ஆண்   :  கல்வி பயிலும் கூடத்திலும்

வேலைக்குப் பதியும் நிலையத்திலும்

துளியும் சாதிப்பெயரே இல்லாது

வெளியே தூக்கி எறிந்திட வேண்டும்!

பெண்   :  சாதியால் சலுகை பெறுவோர்

வேதனை அடைவாரன்றோ?

 

ஆண்   : வாழ்வு அனைவருக்கும் பொதுவாய் இருக்க

கீழ்சாதி என ஏன் பிரித்தே வைத்து

சலுகைகள் எனவோர் முத்திரையிட்டு

சுளுவாய் இனங்காண வைத்திட வேண்டும்!

எந்தச் சாதியில் வறுமையில்லை ‡ பெற

எந்தச் சாதிக்கு உரிமையில்லை

பொருளாதார வகையினில் பிரித்து

உரிமைகள் அனைத்தும் அனைவருக்கும் வழங்க

சலுகைகள் முடிந்த அளவிலே செய்து

பளுவைக் குறைத்தலே! நலமாம்!

சலுகை சாதி வளர்ப்பேயின்றி

அழிக்கும் தீயின் ஒளியுமாகா!

பெண்   :  என்னவோ உனது கருத்தைப் பார்த்தால்!

கண்முன் தெரியும் காட்சிபோல் இருக்கு!

ஆண் :   எனக்கென்ன தெரியும்? என் கருத்தன்று!!

சொன்னதெல்லாம்? அறிந்தோர் தானே!

பெண்   :  சரி! சரி! காட்சி தொடங்கியுமாச்சி!

சிறிதே கொஞ்சம் அதனைக்காண்போம்!

 

(காட்சி முடிவு)

(பாடும்)

– ஆ.வெ.முல்லை நிலவழகன்