(மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று 1/5 தொடர்ச்சி)

தலைப்பு-மேதினியே நட்பிற்குள் - தமிழாழன் 'thalaippu_medhini_thamizhaazhan2-5

 

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 

 

கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள்

கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ

நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை

நாள்காட்டி   கணக்கியினை   துறந்து  விட்டோம்

பற்றியெங்கும்    எடுத்துசென்று   செய்தி   யோடு

பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம்

நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த

நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் !

பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப்

பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப்

பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப்

பக்கத்தில்   நின்றிருந்தும்   வாயால்   பேசித்

துக்கத்தை   இன்பத்தைப்   பகிர்ந்தி   டாமல்

தூரத்தே   யாரிடத்தோ   பேசிப்  பேசித்

திக்கில்லா   தீவினிலே    இருத்தல்   போன்று

திரிகின்றோம்   காதினிலே   பேசி   வைத்தே !

பிசிராந்தை  சோழனொடு   கொண்ட  நட்பே

  பின்னாளில்  பேனாவின்  நட்பா   யிற்று

வசியந்தான்   செய்வதுபோல்  மனத்தால்  பார்த்தே

            வார்த்தைகளில்   எழுதுவதால்  பிறக்கும்   நட்பு

நிசியென்னும்   நடுயிரவு  பகலாம்  என்றே

            நீள்நாளும்   பேனாவால்   வளரும்  நட்பு

வசிக்கின்ற   இடத்திருந்தே   உலக   மெங்கும்

            வசிப்போர்கள்   இணைகின்ற   இனிய  நட்பு !

முகந்தன்னை   முகக்கண்ணால்   பார்த்தி   டாமல்

            முன்னிருக்கும்   பேனாவின்  முகப்பெ   டுத்துப்

பகருகின்ற   செய்திகளைப்   படித்துப்  பார்த்து

            பன்னூறு   கல்தொலைவில்   இருந்த  போதும்

அகந்தன்னில்   அருகருகே   அமர்ந்த  வாறு

            அடுத்தடுத்து   உரையாடல்   கையால்  செய்து

தகவல்கள்   பறிமாறி   நெருக்க   மாகித்

            தமக்குள்ளே   வளர்க்கின்ற   அருமை   நட்பு !

 

இந்தியப்  பேனா  நண்பர்  பேரவை

கவியரங்கம்

இடம் தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்) 

ஆவணி 05, 2047 / 21 -08 – 2016

தலைமை:

பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5)