(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி)

 

தலைப்பு-மேதினி-கருமலைத்தமிழாழன் ; thalaippu_medhini_thamizhaazhan3-5

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5

 

நேரினிலே  நான்பார்க்கா   நாட்டி  லெல்லாம்

நேரியநல்   நண்பர்கள்   இருப்ப  தெல்லாம்

பாரினையே   பேனாக்குள்   அடக்கி  யெங்கும்

பார்க்கவைக்கும்   அஞ்சல்தம்   அட்டை  யாலே

ஊரினையே  கடக்காத   பெண்கள்  கூட

உலகத்தின்  மறுகோடி   பெண்க   ளோடே

சீரியநல்   நட்புதனை   வளர்த்துக்   கொண்டு

சிறந்தறிவு   பெறுகின்றார்   பேனா  வாலே !

 

சிங்கப்பூர்   தனைநேரில்   பார்க்கா   முன்பு

சிறப்பான   மலேசியாவைப்   பார்க்கா   முன்பு

சிங்களரால்   தமிழுறவு   சிதைந்து   போரில்

சீரழிந்த   இலங்கையினைப்   பார்க்கா   முன்பு

இங்கிருந்தே   நட்பென்னும்   உறவு   தன்னை

இதயத்தில்   உருவாக்கித்   தந்த   தெல்லாம்

அங்கமாக   வாழ்க்கையிலே   ஆகி   விட்ட

அருமையான   பேனாவின்   அற்பு  தத்தால் !

 

இலங்கைநாட்டு   கல்முனையில்   இயங்கு  கின்ற

இலக்கியநல்   தடாகமெனும்  அமைப்பி  னாலே

பலகவிஞர்   எழுத்தாளர்  நட்பில்  சேரப்

பாப்போட்டி  தனில்நானும்   பரிசு   பெற்றேன்

நிலம்விட்டு  நிலம்சென்று   விருது  வாங்க

நீள்கடலைக்   கடந்துநானும்   இலங்கை   சென்றேன்

நலம்கேட்டு   அகத்தினிலே   கண்ட   வர்கள்

நனவாக   நேரினிலே   கலந்தார்   நட்பால் !

 

கிளிநொச்சி   ஊரினிலே   எத்த  னைப்பேர்

கிடைத்தரிய   புதையலெனக்   கிடைத்த  நட்பு

களிபொங்க   யாழ்ப்பாண   நகருக்  குள்ளே

கண்டவுடன்   அணைத்திட்ட   அருமை  நட்பு

ஒளிர்கின்ற   திருகோண   மலையில்  வாழும்

ஒண்டமிழாள்   சிவரமணி   தங்கை  நட்பு

சிலிர்க்கின்ற   அன்பாலே   கிடைத்த   இந்த

சிறப்பான   நட்பெல்லாம்   பேனா  வாலே !

இந்தியப்  பேனா  நண்பர்  பேரவை

கவியரங்கம்

இடம் தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்) 

ஆவணி 05, 2047 / 21 -08 – 2016

தலைமை:

பாவலர் கருமலைத்தமிழாழன்